போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 03-07-2023
தேசியம் :-

- ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, 1985-இல் 52-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் கட்சித் தாவல் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு இந்திய அரசியலமைப்பின் 10-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
- இந்த சட்டத்தின்கீழ் ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர், தானாக முன்வந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து விலகினால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
- அல்லது, அவரது கட்சி பிறப்பிக்கும் உத்தரவுக்கு மாறாக நாடாளுமன்ற/சட்டமன்ற வாக்கெடுப்பில் வாக்களித்தாலோ, அல்லது வாக்கெடுப்பைப் புறக்கணித்தாலோ அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
- தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட MLA மற்றும் MP-களுக்கும் இவ்விதிகள் பொருந்தும். அவர்கள் ஏதேனும் கட்சியில் சேர்ந்தால், பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.
- நியமன உறுப்பினர்கள், எந்த ஒரு கட்சியையும் சாராமல் இருந்தால், அவர்கள் நியமிக்கப்பட்ட ஆறு மாத காலத்துக்குள் வேறொரு கட்சியில் சேரலாம். அந்த காலத்துக்குள் அவர்கள் வேறொரு கட்சியில் சேரவில்லையெனில், அவர்கள் சுயேச்சையாகவே கருதப்படுவர்.
- 1985-ஆம் ஆண்டு சட்டத்தின்படி, சட்டமன்ற/நாடாளுமன்றக் கட்சியின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்தால், அது கட்சி பிளவுண்டதாகக் கருதப்பட்டு, அவர்கள் பதவி பறி போகாது.
- இச்சட்டம் 2003-இல் 91-வது அரசியமைப்பு திருத்த சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டது. அதன்படி, சட்டமன்றக் கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பிரிந்தால்தான் அது பிளவு என்று கருதப்பட்டு அவர்கள் பதவி பறிபோகாமல் தடுக்கப்படும்.
- கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவிகளைப் பறிக்க முடியாது.
- இந்த சட்டத்தின் கீழ், கட்சி மாறிய MLA அல்லது MP-யை பதவி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் வகங்கப்பட்டுள்ளது.ஆனால், சபாநாயகர் எவ்வளவு நாட்களுளுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்ற கால அவகாசத்தை இச்சட்டம் குறிப்பிடவில்லை.
முக்கிய தகவல்கள்
- 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டகட்சி மாறிய MLA-க்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- இந்தக் காலகட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள் சார்ந்திருந்த கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு மாறியுள்ளனர்.
- இதில் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிக அளவிலான உறுப்பினர்கள் வெளியேறி வேறு கட்சிகளுக்குச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸைச் சேர்ந்த 170 MLA-க்கள், அந்தக் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வுக்கு தாவி தேர்தலைச் சந்தித்துள்ளனர்.
- இந்தக் காலகட்டத்தில், பல்வேறு கட்சிகளிலிருந்து 182 MLA-க்கள் பா.ஜ.க-வில் இணைந்திருக்கின்றனர்.
- இந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த MLA-க்கள் கட்சி மாறியதால், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேசம் :-

சர்வதேச சிந்தனைக் குழுவான Institute for Economics and Peace வெளீயிட்டுள்ள உலகளாவிய அமைதி குறியீடு 2022 அறிக்கையின்படி,
- முதல் மூன்று இடம் பிடித்த நாடுகள் - ஐஸ்லாந்து, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து
- இந்த தரவரிசையில், இந்தியா கடந்த ஆண்டைவிட 3 இடம் முன்னேறி 135வது இடத்தில உள்ளது.
- தெற்காசிய நாடுகளில், பூடான் பட்டியலில் 19 வது இடத்தைப் பெற்றுள்ளது. பூடானுக்கு அடுத்தபடியாக நேபாளம் (73), இலங்கை (90), வங்காளதேசம் (96) உள்ளன. இந்த பட்டியலில் பாகிஸ்தான் 147வது இடத்தில் உள்ளது.
- மிகவும் அமைதி குறைந்து கடைசி இடத்தில் உள்ள நாடு - ஆப்கானிஸ்தான்(163-வது இடம்)
- உள்நாடு மற்றும் சர்வதேச மோதல்கள், சமூகபாதுகாப்பு இராணுவமயமாக்கலின் அளவு உள்ளிட்ட 23 அளவுருக்களை கொண்டு மதிப்பீடுகள் செய்யப்பட்டு இந்த குறியீடு வெளியிடப்படுகின்றன.
- மேலும் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு உலகளவில், குறிப்பாக தெற்காசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மையை அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறியுள்ளது.
- இந்த அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் வன்முறை காரணமாக உலகப் பொருளாதாரம் ரூ.1287 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.
தமிழ்நாடு :-

- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ளது.
- இது இரும்பு காலம் முதல் வரலாற்று தொடக்க காலத்தைச் சார்ந்த வாழ்விடப்பகுதி தொல்லியல் மேடு ஆகும்.
- இங்கு முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 2021-இல் தொடங்கப்பட்டு சுமார் 3,500-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
- தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் ஆன சுடுமண் பானை ஓடுகள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அகல் விளக்குகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரம் :-

- ஜிஎஸ்டி வருவாய் வசூலில் கடந்த 2022-23-ஆம் நிதி ஆண்டில் தமிழகம், புதுச்சேரி மண்டலம் தேசிய அளவில் 3-ஆம் இடத்தை பிடித்துள்ளது.
- தமிழகம், புதுச்சேரி ஜிஎஸ்டி மண்டலத்தில் ஜிஎஸ்டி செலுத்துவோர் 4.57 லட்சம் பேர் உள்ளனர்.
- இந்த மண்டலம் கடந்த 2022-23-ஆம் நிதி ஆண்டில் அகில இந்திய ஜிஎஸ்டி வருவாயில் 8.12 சதவீதமும், அகில இந்திய கலால் வருவாயில் 4.72 சதவீதமும் பங்களிப்பை வழங்கி உள்ளது.
- நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் முந்தைய ஆண்டைவிட 2022-23-ஆம் ஆண்டில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
- தமிழகம், புதுச்சேரி மண்டலத்தில் இந்த வருவாய் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
- இதன்மூலம், கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம், புதுச்சேரி மண்டலம் தேசிய அளவில் 3-ஆம் இடத்தை பிடித்துள்ளது.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் 2018, அக்டோபர் 10-ஆம் தேதி மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா நியமிக்கப்பட்டார். இதையடுத்து இவரது பதவிக்காலம் 2 முறை நீட்டிக்கப்பட்டது.
- இந்நிலையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு 3-வது முறையாக மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- இதேபோல், உச்ச நீதிமன்றத்துக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களான விக்ரம்ஜித் பானர்ஜி, கே.எம்.நடராஜ், பல்பீர் சிங், எஸ்.வி.ராஜு, என்.வெங்கடராமன், ஐஸ்வர்யா பட்டி ஆகியோருக்கும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு
- தற்போதைய அட்டர்னி ஜெனரல் - ஆர்.வெங்கடரமணி
- அட்டர்னி ஜெனரல் பதவிக்காலம் - 3 ஆண்டுகள்
- அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர்- குடியரசு தலைவர்
- அட்டர்னி ஜெனரல் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு - 76

- மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார்.
- அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
- துணை முதல்வர் பதவி என்பது கேபினட் அமைச்சருக்கு (மாநிலத்தில்) சமமான பதவி . ஒரு கேபினட் அமைச்சருக்கு இணையான ஊதியம் மற்றும் சலுகைகளை துணை முதல்வர் அனுபவிக்கிறார்.
முக்கிய குறிப்புகள்
- மகாராஷ்டிரா முதல்வர் - ஏக்நாத் ஷிண்டே
- மஹாராஷ்டிராவில் தற்போது இரண்டு துணை முதல்வர் உள்ளனர்
- மற்றொரு துணை முதல்வர் - தேவேந்திர பட்னவிஸ்
- இந்தியாவின் முதல் துணை முதல்வர் - அனுக்ரஹ் நாராயண் சின்ஹா ஆவார்(பீகார்)
- தற்போது, நாட்டின் 12 மாநிலங்களில் துணை முதல்வர்கள் உள்ளனர்.
முக்கிய நாட்கள் :-

- உலகம் முழுவதம் ஜூலை 3-ஆம் தேதி, சர்வதேச பிளாஸ்டிக் (நெகிழி) பைகள் இல்லாத தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்கு மற்றும் அதன் அதிகரித்துவரும் பயன்பாட்டைத் தடுக்க இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
Tags:
Current Affairs