ஆஸ்கர் விருது 2022 பற்றிய சிறப்பு வினாடி வினா
உலகின் மிகப்பெரிய திரைத்துறை விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
2022ம் ஆண்டிற்கான 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கியது. ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் விழா நடைபெற்றது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரலாற்றிலேயே முதன் முறையாக வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகிய 3 பெண்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
6 விருதுகளை அள்ளிய அமெரிக்க திரைப்படம்:
சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் அமெரிக்க திரைப்படமான 'Dune' ‘டியூன்’ சாதனை படைத்துள்ளது.
சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான விருதை டியூன் திரைப்படத்தைச் சேர்ந்த பால் லம்பேர்ட், டிரிஸ்டன் மைல்ஸ், பிரையன் கானர் மற்றும் கெர்ட் நெஃப்சர் ஆகிய 4 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த ஒலி அமைப்பிற்கான விருதை மேக் ரூத், மார்க் மங்கினி, தியோ கிரீன், டக் ஹெம்பில் மற்றும் ரான் பார்ட்லெட் ஆகியோர் பெற்றுள்ளனர்.
டியூன் படத்திற்கு இசை அமைத்த ‘ஹான்ஸ் ஜிம்மர்’ சிறந்த அசல் பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதினை பெற்றுள்ளார்.
டியூன் பட எடிட்டர் ஜோ வாக்கருக்கு சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதும், சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது கிரேக் ஃப்ரேசர் என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதும் டியூன் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.