அல்பெலியன் நிகழ்வு (Alphelion Phenomenon)

அல்பெலியன் நிகழ்வு (Alphelion Phenomenon) 

சென்னை: சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் ‘அல்பெலியன் நிகழ்வு’ எனப்படும் காலநிலை மாற்ற நிகழ்வு உண்மையா என்பது பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு செய்தி மிகவும் வேகமாக பரவி வருகிறது. பலரும் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு உதவும் எண்ணத்தில், அந்த செய்தியின் உண்மை தன்மையை பற்றி அறியாமல் பரப்பி வருகின்றனர்.

 அதாவது, அந்த செய்தியில் “நாளை முதல் ‘அல்பெலியன் நிகழ்வு’ எனப்படும் கால நிலை மாற்றம் ஏற்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி வரை நீடிக்கும் அல்பெலியன் நிகழ்வினால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு குளிர்ந்த வானிலை காணப்படும். இதனால் உடல்வலி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

இதில் இருந்து தங்களை காத்துக்கொள்ள அனைவரும் வைட்டமின் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். சாதாரணமாக சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரம் 9 கோடி கி.மீ.

ஆனால் அல்பெலியன் நிகழ்வினால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 15 கோடியே 20 லட்சம் கி.மீ. ஆக அதிகரிக்கும். அதாவது 66 சதவீதம் அதிகரிக்கும்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதது.

தற்போது இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த செய்தி உண்மை அல்ல என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.ஆர்.சேதுராமன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இது அல்பெலியன் நிகழ்வு அல்ல. இதன் உண்மையான பெயர் ‘அப்ஹீலியன்’. அதாவது, சூரியனிலிருந்து பூமி அருகில் உள்ள தூரம் ‘பெரிஹீலியன்’ (சூரிய அண்மை நிலை). இது 14 கோடியே 73 லட்சம் கி.மீ. ஆகும். அதுவே பூமி, சூரியனிலிருந்து தொலைவில் உள்ள தூரம் ‘அப்ஹீலியன்’ (சூரிய சேய்மை நிலை) எனப்படும்.



இது 15 கோடியே 21 லட்சம் கி.மீ. ஆகும். இவற்றுக்கு இடையே உள்ள உண்மையான வித்தியாசம் 3.3 சதவீதம். ஆனால் இணையத்தில் பரவும் செய்தியில் 66 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.


குளிர்காலம், கோடை காலம், மழைக் காலம் என எந்த காலத்திலும் நல்ல சத்துள்ள வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிடுவதும், சக்கை உணவுகளை தவிர்ப்பதும் எப்போதும் நல்லது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post