இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் - 22/05/2023
தேசியம் :-

- துவாரகா விரைவுச் சாலை ஹரியானாவில் 18.9 கி.மீ தூரத்துக்கும், டெல்லியில் 10.1 கி.மீ தூரத்துக்கும் அமைக்கப்படுகிறது.
- 34 மீட்டர் அகலம் உள்ள இந்த விரைவுச் சாலை ஒரு தூண் பாலத்தில் அமைக்கப்படுகிறது.
- ரூ.9,000 கோடி செலவில் கட்டப்படுகிறது.
- இந்த விரைவு சாலையில் மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள், குகைப் பாதைகள், உயரமான சாலைகள் போன்ற 4 விதமான சாலைகள் அமைக்கப்படுகின்றன.
- இந்த விரைவுச் சாலையில் ITS (Intelligent Transport System) எனப்படும் நவீன வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
- இந்த விரைவுச் சாலையில் 3.6 கி.மீ தூரத்துக்கு 8 வழி சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
- இந்த சாலை அமைக்க 2 லட்சம் டன் எஃகு மற்றும் 2 மில்லியன் கியூபிக் மீட்டர் கான்கிரீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
- இதன் மூலம் டெல்லி குருகிராம் விரைவு சாலையில் (NH 48) போக்குவரத்து நெரிசல் குறையும்.
சர்வதேசம் :-

- ஜப்பான், பப்வா நியூ கினி, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக, ஜப்பானுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு ஜி7 மாநாட்டில் கலந்து கொண்டார்.
- பின்னர் பிரதமர் மோடி, தன் ஜப்பான் பயணத்தை முடித்து விட்டு, பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா சென்றடைந்தார்.
- அங்கு பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இணைந்து `டோக் பிசின்’ மொழியில் திருக்குறளை வெளியிட்டனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :-

- சந்திரயான் திட்டத்தின் பகுதியான மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வரும் ஜூலை 12-ஆம் தேதி நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக விண்ணில் ஏவப்பட உள்ளது.
- சந்திரயான்-3 என்பது சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாகும், இது சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குதல் மற்றும் உலாவுதல் மற்றும் லேண்டர்-ரோவர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
- 2019-ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தின் லேண்டர் கலன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி தரையிறங்காமல் நிலவின் தரையில் மோதி உடைந்தது. அதேநேரத்தில், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
- ஏற்கனவே, ஆர்பிட்டர் நிலவை சுற்றிவருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் விண்கலங்களை மட்டும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
- சந்திராயன்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு - 2008( நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது)
முக்கிய நாட்கள் :-

- 1772-இல் வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்திலுள்ள ராதா நகர் கிராமத்தைச் சேர்ந்த ராம்காந்தோ ராய் - தாரிணி தம்பதிக்கு மகனாக பிறந்தார்.
- உயர் கல்விக்காக பாட்னா சென்றவர், 15 வயதுக்குள் ஆங்கிலம், பிரெஞ்ச், லத்தீன், ஹீப்ரூ, கிரேக்கம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளைக் கற்றார். வேத, சாஸ்திரங்கள், உபநிடதங்களையும் ஆழ்ந்து கற்றார். சிலை வழிபாடு, சடங்குகள், சாதிவெறி, மதவெறி, பழமைவாதங்களுக்கு எதிராக செயல்பட்டார்.
- 1809 முதல் 1814-ஆம் ஆண்டு வரை கிழக்கு இந்திய நிறுவனத்தின் வருவாய்த் துறையில் பணியாற்றினார். ஆங்கில நாகரிகம் பிடித்திருந்ததால், இங்கிலாந்துக்கு பலமுறை சென்று வந்தார்.
- சமூக ஏற்றத் தாழ்வுகள், முறைகேடுகளைக் கண்டு வெகுண்டார். சாதி, மத, சமூகத்தில் சீர்திருத்தம் கொண்டுவரும் முயற்சியாக கொல்கத்தாவில் 1815-இல் ஆத்மிக சபையை உருவாக்கினார்.
- பெண் உரிமை, பெண் கல்வி, விதவை மறுமணம், பெண் சொத்துரிமைக்காக பாடுபட்டார். உடன்கட்டை ஏறுதல், பலதார மணம் போன்றவற்றுக்கு எதிராக தீவிரமாகப் போராடினார்.
- 1817-இல் சமயப்பரப்பாளரான டேவிட் ஹேர் என்பவருடன் இணைந்து கல்கத்தாவில் இந்து கல்லூரியை (இதுவே தற்போதைய கல்கத்தா மாநிலக் கல்லூரி) நிறுவினார்.
- 1818-இல் அவர் எழுதிய “கைம்பெண்களை உயிரோடு எரிக்கும் பழக்கத்தை ஆதரிப்போருக்கும் எதிர்ப்போருக்குமிடையே நடைபெற்ற விவாதம்” எனத் தலைப்பிடப்பட்ட கட்டுரையில் எந்த மதமும் கைம்பெண்களை உயிரோடு எரிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை புனித நூல்களைச் சுட்டிக்காட்டி நிரூபித்தார்.
- 1819-இல் வேதாந்த சாஸ்திரங்களின் சாரத்தை ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும் எழுதி வெளியிட்டார். உபநிடதங்களை மொழிபெயர்த்தார்.
- 1820-இல் இயேசுவின் போதனைகளைத் திறனாய்வு செய்து, ‘இயேசுவின் கொள்கைகள் அமைதிக்கும் ஆனந்தத்துக்கும் வழிகாட்டி’ என்ற நூலை வெளியிட்டார்.
- 1822-இல் ஆங்கில முறைக் கல்வி போதிக்கும் பள்ளியை நிறுவினார் (வங்காளத்தின் முதல் ஆங்கில வழிப் பள்ளி)
- 1826-இல் மேற்கத்திய - இந்திய கற்றல் முறை இணைந்த பாடத்திட்டம் கொண்ட வேதாந்த கல்லூரியை நிறுவினார்.
1828-இல் பிரம்ம சமாஜத்தை நிறுவி ஆகஸ்டு 20-ஆம் நாள் கல்கத்தாவில் ஒரு கோவிலை நிறுவினார். அக்கோவிலில் திருவுருவச் சிலைகள் எதுவும் வைக்கப்படவில்லை. இங்கு எந்த ஒரு மதத்தையும்ஏளனமாகவோ, அவமானமாகவோ பேசக்கூடாது அல்லது மறைமுகமாகக் குறிப்பிடப்படலாகாது என எழுதிவைத்தார். பிரம்ம சமாஜம் உருவவழிபாட்டை தவிர்த்ததோடு பொருளற்ற சமயச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எதிர்த்தது. - வங்காள மொழியில் வெளிவந்த முதலாவது வார இதழான ’சம்வாத் கௌமுதி’-ஐ தொடங்கினார். பாரசீக வார இதழான மீரத்-உல்-அக்பர் என்பதற்கும் ஆசிரியராகத் திகழ்ந்தார்.
- கோயில்களில் உயிர் பலி போன்ற சடங்குகளை நிறுத்துமாறு அறிவுறுத்தினார். மனிதர்களிடையே தர்மம், நீதி, கடவுள் பக்தி, கருணை, நல்லொழுக்கம், மத நல்லிணக்கம் ஆகிய உணர்வுகளைத் தூண்டினார்.
- உடன்கட்டை ஏறும் (சதி) பழக்கத்துக்கு எதிராக வெகுகாலம் போராடினார். அதன் பயனாக, 1829-இல் வில்லியம் பெண்டிங் கொண்டுவந்த சட்டத்தால், சதி ஒழிக்கப்பட்டது.
- மாபெரும் கல்வியாளர், சிந்தனையாளராகவும் திகழ்ந்தார். மேற்கத்திய மருத்துவம், தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கினார். தற்போது உலகம் முழுவதும் வலியுறுத்தப்படும் பெண்ணுரிமைக்காக 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடியவர்.
- செப்டம்பர் 27,1833 இல் -சடங்குகளை ஒழித்து சமூக சீர்திருத்தத்துக்காக போராடியவரும், இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று போற்றப்படுபவருமான ராஜா ராம் மோகன் ராய் மூளைக்காய்ச்சல் காரணமாக 61 வயதில் மறைந்தார்.
- முகலாயப் பேரரசர் இரண்டாம் அக்பர் அவருக்கு ராஜா என்ற பட்டத்தை வழங்கினார்.
- ராஜா ராம்மோகன் ராய் இயற்கையெய்திய பின்னர் அவர் விட்டுச்சென்றப் பணிகளை, கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் தந்தையரான தேவேந்திரநாத் தாகூர் தொடர்ந்தார்.
Tags:
Current Affairs