போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 08-08-2023
தேசியம் :-

- டெல்லி சேவைகள் மசோதா (Delhi Services Bill) என்பது Government of National Capital Territory of Delhi (Amendment) Bill 2023 எனவும் அழைக்கப்படுகிறது.
- டெல்லி சேவைகள் மசோதா, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையம் (National Capital Civil Services Authority-NCCSA)- ஐ உருவாக்க வழி செய்கிறது.
- இந்த ஆணையத்தின் தலைவராக டெல்லி முதலமைச்சரும், மேலும் இரண்டு உறுப்பினர்களாக டெல்லியின் தலைமைச் செயலாளரும் & டெல்லியின் முதன்மை உள்துறை செயலாளரும் பதவி வகிப்பார்கள்.
- இந்த மசோதாவின்படி, டெல்லியின் நிர்வாகியாக துணைநிலை ஆளுநர் செயல்படுவார்
- டெல்லியில் குரூப் ஏ அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான பரிந்துரைகளை இந்த ஆணையம் டெல்லியின் துணைநிலை ஆளுநருக்கு வழங்கும்.
- தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தின் பரிந்துரைகளை அங்கீகரிக்கவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் துணைநிலை ஆளுநரின் முடிவே இறுதியானது என்று இந்த மசோதா கூறுகிறது.
- இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக செயல்படும் உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் இருவரும் மத்திய அரசால் நியமிக்கப்படுபவர்கள்.
- மேலும், இந்த ஆணையத்தின் முடிவுகள் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். எனவே இதில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்(தலைமைச் செயலாளர் & முதன்மை உள்துறை செயலாளர்) முதலமைச்சரின் முடிவுகளை மீறுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது.

- மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிரதமர் மோடிக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைத்திட Darwin Platform Infrastructure Ltd(DPIL) என்ற தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
- குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள படேல் சிலை தான் உலகத்திலேயே அதிக உயரம் கொண்ட சிலையாக தற்போது உள்ளது. 182 மீட்டர் உயரம் கொண்ட அந்த சிலையை விட உயரமாக பிரதமர் மோடிக்கு 190-லிருந்து 200 மீட்டர் வரையில் உயரம் கொண்டதாக சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- 2023 இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு சிலையைத் திறக்க இந்த நிறுவனம் திட்டமிட்டு பணிகளை துவங்கியுள்ளது.
- நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக பிரதமர் மோடி செய்து வரும் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவருக்கு உலகின் மிக உயரமான சிலை அமைக்கவுள்ளோம் என DPIL நிறுவனத் தலைவர் அஜய் ஹரிநாத் சிங் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு :-

- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- கீழடி அகழாய்வுப் பணியின் போது பல்வேறு பழங்கால பொருட்கள் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு வருகின்றன.
- அந்தவகையில் தற்போது கீழடியில் நடைபெற்று வரும் 9-ஆம் கட்ட அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட ‘எடை கல்’ ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- மேலும், சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச்சில்லுகள், இரும்பு ஆணி, கருப்பு-சிவப்பு நிறப் பாணை ஓடுகள் உள்ளிட்ட பொருள்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த ஏப்ரல் 6 -ஆம் தேதி முதல் 9 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 9 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கின உருவங்கள், தக்களிகள், ஆட்டக் காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், அஞ்சனக் கோல்கள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூா்முனைகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள் என பல பொருள்கள் இதுவரை வெளிக்கொணரப்பட்டுள்ளன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :-

- இந்திய விண்வெளி ஆய்வு மையமான ISRO, சொந்த நாட்டு செயற்கைகோள்களை மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்களையும் குறைந்த கட்டணத்தில் விண்ணில் செலுத்தி வருகிறது.
- இதனால் பல நாடுகள் தொடர்ந்து தங்கள் செயற்கைகோள்களை ஏவ இந்தியாவை நாடி வருகின்றன.
- தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டுகளை ISRO ஏவி வருகிறது.
- தேவை அதிகரித்துள்ளதால் கூடுதல் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவு செய்து கிழக்கு கடற்கரையை ஒட்டியுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.
முக்கிய குறிப்புகள்
- பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் பகுதியானது, கடற்கரையாகவும், காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீ.க்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதியாகவும் இருக்க வேண்டும்.
- நிலையான காலநிலையும், நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருப்பதும் அவசியம்.
விளையாட்டு செய்திகள் :-

- சர்வதேச அளவில் காவல் துறை, தீயணைப்பு, மீட்பு படையினருக்கான 'போலீஸ் அண்ட் ஃபயர்' விளையாட்டு போட்டிகள் கனடாவின் வின்னிபெக் நகரில் ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி கடந்த 6-ஆம் தேதி வரை நடந்தன.
- இதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 8,500-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
- இந்த போட்டியில், தமிழகத்தில் இருந்து பங்கேற்ற குழுவில் சென்னையில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையின் காவல் கரங்கள் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றும் லீலாஸ்ரீ, அங்கு நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம்,100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய 7 போட்டிகள் கொண்ட 'ஹெப்டத்லான்' பிரிவில் கலந்து கொண்ட அவர் அசத்தலாக விளையாடி தங்கம் வென்றார்.
- 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
- அவர் மூன்று பதக்கங்கள் பெற்று காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளதை அடுத்து அவருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
முக்கிய நாட்கள் :-

- வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942-ஆம் ஆண்டு இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட சட்ட மறுப்புப் போராட்ட இயக்கம் ஆகும். மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட இவ்வியக்கம் ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது.
- 14 ஜூலை 1942-இல் வார்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸின் செயற்குழு வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான வழியைத் தொடங்கியது.
- இதனைத் தொடர்ந்து 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள் பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெள்ளையனே வெளியேறு (Quit India) தீர்மானத்தை நிறைவேற்றியது. மாநாட்டில் பேசிய காந்தி ‘செய் அல்லது செத்து மடி’ என்ற கோஷத்தை வலியுறுத்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்.
- பம்பாயில் உள்ள கோவாலிய டேங்க் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மகாத்மா காந்தி, வன்முறை தவிர்த்து ஒத்துழையாமை செய்ததைப் போல, வெள்ளையனே வெளியேறு போராட்டமும் சாத்வீக வழியில் நடைபெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
- பிரிட்டிஷ் அரசு தாமதிக்காமல் காந்தியடிகள் உட்பட அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களையும் 1942 ஆகஸ்ட் 9 அன்று அதிகாலையில் கைதுசெய்து சிறையில் தள்ளியது.
- காந்தி புனாவில் உள்ள ஆகா கான் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டார். ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் அகமது நகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.
- ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை பம்பாய் மாநாட்டிற்கு 3 லட்சம் பேர் திரண்டனர்.ஆனால், அவர்களை தலைமையேற்று வழி நடத்தக்கூடிய ஒரு தலைவரும் இல்லை.அந்த நிலையில்தான் இளம் வீராங்கனை அருணா ஆசப் அலி அன்று நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமையேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
- காங்கிரஸ் தலைவர்கள் பலரையும் ஆங்கிலேய அரசு சிறைப்பிடித்தது, போராட்டத்தை ஒடுக்குவதற்குப் பதிலாக மக்களின் உணர்ச்சிகளை உசுப்பிவிட்டது. தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டு ஆவேசமடைந்த மக்கள் பெரும் திரளாகப் போராட்டத்தில் குதித்தார்கள். இதற்குப் பின்னரே விடுதலைப் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக உருவெடுத்தது.
- போராட்டத்தை அடக்க பிரிட்டிஷ் அரசு போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு, அவர்கள் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் என்று நிராயுதபானியாக போராடிய மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது.
- கைதானவர்களின் எண்ணிக்கை 1943-ஆம் ஆண்டின் முடிவில்
91,836 என்ற அளவை எட்டியது. அதே காலத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1060 ஆனது.
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மற்றொரு சிறப்பம்சம் புரட்சியாளர்களால் வானொலி பயன்படுத்தப்பட்டமை ஆகும்.
இந்த இரகசிய வானொலி ஒலிபரப்பிற்கு வித்திட்டவர்
உஷா மேத்தா என்பதோடு அதன் ஒலிபரப்பு
மதராஸ் வரை கேட்கப்பட்டது என்பது குறிப்பிடப்படதக்கது.
- மேலும், ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு பயப்படாமல் மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். அற வழியில் துவங்கிய இப்போராட்டம் வன்முறையாக மாறியது.
- இது ஆங்கிலேயர் மனதில் இனிமேலும் இந்தியாவை நாம் ஆள முடியாது என உணர வைத்தது. இதன் பின் ஐந்து ஆண்டுகள் கழித்து, இதே ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திர நாடாக உருவானது.
Join Our WhatsApp Groups
Tags:
Current Affairs