போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 21-08-2023
தேசியம் :-

- ஜன்தன் திட்டத்தின்கீழ் இதுவரை தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்ததுள்ளது. இதில் 56 சதவீத கணக்குகள், பெண்களின் வங்கிக் கணக்குகளாகும்.
- மேலும், ஜன்தன் கணக்குகளின் மொத்த இருப்பு ரூ.2.03 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. இந்தக் கணக்குகளுக்காக சுமாா் 34 கோடி ரூபே அட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்ததுள்ளது.
- இதில் சுமாா் 67 சதவீத கணக்குகள், கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகா்ப்புறங்களில் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய நிதிசாா் பலன்கள்(Financial inclusion) நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஜன்தன் திட்டம் பற்றிய முக்கிய குறிப்புகள்
- இத்திட்டம் 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.
- இந்தத் திட்டத்தின் கீழ் வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்குவோர் குறைந்தபட்ச இருப்பு வைக்கத் தேவையில்லை.
- அனைவருக்கும் வங்கிக் கணக்கு தேவை என்ற நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
- ரூ. 2 லட்சம் வரை விபத்துக் காப்பீடு, இலவச ரூபே டெபிட் கார்டுகள், ரூ. 10,000 வரை மிகைப்பற்று (Over draft) வசதி போன்ற பல்வேறு வசதிகளை ஜன்தன் வங்கிக் கணக்கு வழங்குகிறது.

- ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜபர்வான் மலையடிவாரத்தில் இந்திரா காந்தி நினைவு துலிப் மலர் தோட்டம், முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் முயற்சியால் கடந்த 2007-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
- 74 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தோட்டத்தில் 68 வகையான மொத்தம் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட துலிப் மலர்கள் இதில் பூத்துக் குலுங்குகின்றன.
- இந்நிலையில், இந்த தோட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரியது என உலக சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது.
சர்வதேசம்:-

- ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ராஸ்காமோஸ், வோஸ்டோக்னி காஸ்மோட்ரோம் ஏவுதளத்திலிருந்து லூனா-25 என்ற விண்கலத்தை சோயுஸ் 2.1பி ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது.
- 47 ஆண்டுகளுக்குப் பிறகு (1976-க்குப் பின்னர்) ரஷ்யா சார்பில் முதல் முறையாக நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் இதுவே.
- இந்த விண்கலம் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாகவே நிலவின் தென் துருவத்தில் இறங்கும் என்று சொல்லப்பட்டது.
- இந்த நிலையில், கடைசி நேரத்தில் கட்டுப்பாடற்ற சுற்றுப்பாதையில் சிக்கியதால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லூனா-25 விண்கலம் நிலவில் மேற்பரப்பின் மோதி நொறுங்கியதாக ராஸ்காமோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு:-

- 1659- மதராஸ்பட்டணத்தின் பாதுகாப்புக்காக பெத்த நாயக் என்பவரை ஆங்கிலேயே அரசு நியமித்தது. இதுதான் காவல் என்கிற கட்டமைப்பின் முதல் படி.
- 1770- சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஜோசியோஸ் டூப்ரே ‘போலீஸ் வாரியத்தை’(Police Board) அமைத்தார். இதன் மூலம் பொது அமைதி, பொது சுகாதாரம், ஒழுங்கு பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
- 1771- சந்தைகளில் பொருட்கள் முறையாக விற்கப்படுகிறதா, மோசடிகள் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க ஆளுநர் ஸ்ட்ரேட்டன் என்பவர் ‘கொத்வால்’(Kotwal) என்கிற கண்காணிப்பாளர்களை நியமித்தார்.
- 1780- காவல் கண்காணிப்பாளர் (S.P) பதவி உருவாக்கப்பட்டது. சந்தைகளை கண்காணித்து, பொருட்களின் விலை நிலவரத்தை கட்டுப்படுத்த இந்தப் பதவி உருவாக்கப்பட்டது.
- 1782–தவறுகளைத் தடுக்கவும், மோசடிகளை தடுக்கவும், சுகாதாரத்தை முறைப்படுத்தவும் முறையான காவல்துறையை உருவாக்குவது குறித்த விரிவான திட்டத்தை ‘போஃபாம்’(S.Popham) என்பவர் உருவாக்கினார்.
- 1791- கொத்வால் போலீஸ் முறை ஒழிக்கப்பட்டது. வியாபாரிகளிடம் இவர்கள் முறைகேடாக பணம் (லஞ்சம்) வாங்குவதாக புகார்களின் பேரில் இந்தப் பதவி ஒழிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ‘பாலிகர்’(Poligar) என்ற பதவி முறை அமல்படுத்தப்பட்டது.
- 1806- முதன் முறையாக ‘வால்டர் கிராண்ட்’ என்பவர் மூன்று போலீஸ் மாஜிஸ்திரேட்டுகளுடன் முறையாக காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்
- 1815- மெட்ராஸ் காவல் கண்காணிப்பாளராக பதவியேற்ற தாமஸ் ஹாரிஸ், மெட்ராஸை எட்டு பகுதிகளாகப் பிரித்து காவல் பணியை தொடங்கினார்.
- 1829-1832-இல் மெட்ராஸ் மாகாணத்தின் அட்வகேட் ஜெனரல் ஜார்ஜ் நார்ட்டனின் பரிந்துரையின் பேரில் பிளாக் டவுன் மாவட்டம், திருவல்லிக்கேணி மாவட்டம், வேப்பேரி மாவட்டம், செயின்ட் தாமஸ் மாவட்டம் (சாந்தோம்) என மெட்ராஸ் நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
- 1834- முதல் இந்திய போலீஸ் மாஜிஸ்திரேட்டாக பிரான்சிஸ் கெல்லியும், இந்திய DSP-யாக வேம்பாக்கம் ராகவாச்சாரியார் பொறுப்பேற்றனர்.
- 1856- போலீஸ் சட்டம் XII நிறைவேற்றப்பட்டது. அதன்படி மெட்ராஸின் முதல் காவல் ஆணையராக ‘ஜே.சி. பவுட்லர்சன்’(J.C Boudlerson) நியமிக்கப்பட்டார்.
- 1859- போலீஸ் சட்டம் XXIV நவீன மெட்ராஸ் காவல்துறையின் தொடக்கத்தைக் உண்டாக்கியது. 1906-இல் இந்திய அரசால் அமைக்கப்பட்ட காவல் ஆணையத்திற்கு இந்தச் சட்டம் முன்னோடியாக இருந்தது.
- 1865- தற்போதைய போலீஸ் தலைமையிடம்(DGP அலுவலகம்) அமைந்துள்ள கட்டடம் மாதம் 90 ரூபாய்க்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டது.
- 1874 – இந்தக் கட்டடத்தை மெட்ராஸ் மாகாண காவல்துறை ரூ. 20 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கியது. மேலும் ரூ. 10 ஆயிரம் செலவழித்து சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
- 1884- மலப்புரம் பகுதியில் (கேரளா) மாப்பிள்ளை வகுப்பினரால் அடிக்கடி கலவரம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து அங்கு மலப்புரம் சிறப்பு போலீஸ்(Malappuram Special Police) உருவாக்கப்பட்டது.
- 1895- கை விரல் ரேகைப் பிரிவு (Finger Print Bureau) மெட்ராஸில் தொடங்கப்பட்டது.
- 1902 – மெட்ராஸ் நகரம் 2 சரகங்களாகப் பிரிக்கப்பட்டது. வடக்கு சரகம் துணை ஆணையர் தலைமையிலும், தென் சரகம் ஆணையரின் நேரடிக் கண்காணிப்பிலும் விடப்பட்டன. மேலும்,மெட்ராஸ் பிரசிடென்சி இன்ஸ்பெக்டர் ஜெனரலான எச்.ஏ. ஸ்டூவர்ட், அகில இந்திய போலீஸ் கமிஷனின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
- 1905- காவல் துறை பயிற்சிப் பள்ளி பலப்படுத்தப்பட்டு, புதிய சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தயார்படுத்தப்பட்டது
- 1906 – குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடங்கப்பட்டு பாவ்செட் (Fawcett) என்பவர் புதிய DIG-யாக நியமிக்கப்பட்டார்.
- 1909- கிங்ஸ் போலீஸ் பதக்கம் உருவாக்கப்பட்டது.
- 1919- மெட்ராஸ் போலீஸ் கமிஷனராக திவான் பகதூர் பராங்குசம் நாயுடு(Parankusam Naidu) நியமிக்கப்பட்டார். இப்பதவிக்கு வந்த முதல் இந்தியர் இவர்தான். மேலும்,பி.பி. தாமஸ் என்பவர் ஐஜியாக நியமிக்கப்பட்டார்.
- 1921- மாப்பிள்ளை வகுப்பினரால் ஏற்பட்ட கிளர்ச்சியை அடுத்து மலபார் சிறப்பு ஆயுதப்படை (Malabar Special Armed Police) உருவாக்கப்பட்டது.
- 1928- CID போலீஸ் பிரிவு, சிறப்பு பிரிவு (SBCID) மற்றும் குற்றப் பிரிவு (CBCID) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
- 1929- மெட்ராஸ் சிட்டி போலீஸில் குற்றப் பிரிவு, சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவாக பிரித்து அமைக்கப்பட்டது.
- 1935- பொதுமக்கள் ஒத்துழைப்பை பெறும் வகையில் கிராம கண்காணிப்பு கமிட்டிகள் அமைக்கப்பட்டன.
- 1946- போலீஸ் வயர்லஸ் பிரிவு தொடங்கப்பட்டது. கேப்டன் டி.ஆர். கிளாம்ப்(D.R. Clamp) முதல் போலீஸ் வயர்லெஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்
- 1947- மெட்ராஸை சேர்ந்த அதிகாரி சஞ்சீவி, டெல்லியிலுள்ள இந்த உளவு அமைப்பான Intelligence Bureau-வின் இயக்குநராக பொறுப்பேற்றார். இப்பதவியில் அமர்ந்த முதல் இந்தியர் இவர்.
- 1951- மெட்ராஸ் மோப்ப நாய்ப் படை பிரிவு உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு குற்றங்களைத் தடுப்பதிலும் கண்டறிவதிலும் நாய்களைப் பயன்படுத்துவதில் மெட்ராஸ் இந்தியாவிலேயே முன்னோடியாகத் திகழ்ந்தது.
- 1956- போலீஸ் ரேடியோ அலுவலகம் உருவாக்கப்பட்டது.
- 1959- தமிழக காவல்துறை நூற்றாண்டு விழா கண்டது.
- 1960- போலீஸ் ஆய்வு மையம்(Police Research Center) உருவாக்கப்பட்டது.
- 1961- மதுரையில் மோப்ப நாய் பிரிவு உருவாக்கப்பட்டது. மேலும், மாநில தடயவியல் ஆய்வகத்திற்கு அரசு அனுமதி அளித்தது.
- 1963- மெட்ராஸ் போலீஸ் மருத்துவமனை முழு அளவிலான மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும், ஹோம் கார்ட் எனப்படும் ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது.
- 1971- போலீஸ் கம்ப்யூட்டர் பிரிவு உருவாக்கப்பட்டது. காவல்துறையில் கம்ப்யூட்டர் மயமாக்கலை தொடங்கிய முதல் மாநிலம் தமிழகம்தான். மேலும், தீவிரவாதிகளை ஒடுக்க சிறப்பு CID பிரிவு உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் CID -யின் Q பிரிவாக உருவெடுத்தது.
- 1973- தமிழக காவல்துறையில் முதன் முதலாக பெண் காவலர்களும், பெண் சப் இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர்.
- 1976- ஆவடியில் போலீஸ் போக்குவரத்து பணிமனை, பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. மேலும், CID பிரிவில் பாதுகாப்புப் பிரிவு(Security Branch) தொடங்கப்பட்டது.
- 1979- தமிழக காவல்துறையின் தலைவர் பதவியாக DGP பதவி உருவாக்கப்பட்டது. தமிழக காவல்துறையின் முதல் DGP-யாக ஸ்ட்ரேஸி(Stracey) நியமிக்கப்பட்டார்.
- 1981 – தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரியம் உருவாக்கப்பட்டது.
- 1984 – CID வனப் பிரிவு (Forest Cell) உருவாக்கப்பட்டது.
- 1989- தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துடன் இணைக்கப்பட்டது.
- 1991- காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறையினரை தேர்வு செய்வதற்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Uniformed Services Recruitment Board -TNUSRB) உருவாக்கப்பட்டது. மீண்டும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் தனியாக செயல்படத் தொடங்கியது.
- 1992- தமிழகத்தின் முதலாவது அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்னை ஆயிரம் விளக்கில் தொடங்கப்பட்டது. படிப்படியாக மாநிலம் முழுவதிலும் இது விரிவுபடுத்தப்பட்டது.
- 1993- சிறப்பு அதிரடிப்படை (Special task Force) உருவாக்கப்பட்டது.
- 1994- கடலோரக் காவல் படைப் பிரிவு Tamil Nadu Police Coastal Security Group (CSG) உருவாக்கப்பட்டது.
- 1997- மதக் கலவரங்களைத் தடுக்க விரைவு அதிரடிப்படை Swift Action Force (SAF) உருவாக்கப்பட்டது.
- 2010- தமிழகத்தின் முதல் பெண் DGP-யாக லத்திகா சரண் பதவியேற்றார்.

- செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- இந்நிலையம் அமைக்கும் பணி டிசம்பர் 2026-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
- இந்நிலையம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமையவுள்ளது.
- இந்நிலையம், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் அமைக்கப்படுகிறது.
- இந்த நிலையத்தின் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அருகாமையில் உள்ள 20 ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 22.67 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.
பொருளாதாரம்:-

- கடந்த 2022-23 நிதி ஆண்டுக்கு வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31-ம் தேதியுடன் முடிந்தது.
- இதில், 6.77 கோடி ITR தாக்கல் செய்யப்பட்டன. அதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 16.1 சதவீதம் அதிகம். 2021-22 நிதி ஆண்டுக்கு 5.83 கோடி ஐடிஆர் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
- கடந்த நிதி ஆண்டில் மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் ITR விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
- நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட மொத்த ITR விண்ணப்பங்களில், இந்த 5 மாநிலங்களின் பங்கு 48 சதவீதமாக உள்ளது.

- நைட் பிராங்க் நிறுவனம் (Knight Frank India) வெளியிட்டுள்ள நகரங்களின் பட்டியலில் கூறியிருப்பதாவது: செலவு மிகுந்த நகரங்களின் வரிசையில் மும்பை முதலிடத்தில் உள்ளது.
- மும்பையில், மக்கள் தங்கள் வருமானத்தில் 55 சதவீதத்தை வீட்டுக் கடனுக்கான மாதத் தவணைக்கு(EMI) செலவிடுகின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் ஹைதராபாத் உள்ளது. அங்கு மாதத் தவணை - வருவாய் விகிதம் 31 சதவீதமாக உள்ளது. மூன்றாவது இடத்தில் டெல்லி (30%) உள்ளது.
- பெங்களூரு மற்றும் சென்னையில் மாதத் தவணை - வருவாய் விகிதம் 28 சதவீதமாகவும், புனே மற்றும் மேற்கு வங்கத்தில் அது 26 சதவீதமாகவும் உள்ளது.
- அகமதாபாத்தில் அது 23 சதவீதமாக உள்ளது. அந்த வகையில், செலவு குறைந்த நகரமாக அகமதாபாத் திகழ்கிறது என்று நைட் பிராங்க் குறிப்பிட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்:-

- நடப்பு FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றது ஸ்பெயின் அணி. 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.
முக்கிய குறிப்புகள்
- FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 9-வது பதிப்பை ஆஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து இணைந்து நடத்தியது.
- இதில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டது.
- FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்து முதன்முறையாக நடைபெற்ற ஆண்டு - 1991
- அதிக முறை FIFA மகளிர் உலகக் கோப்பையை வென்ற அணி - அமெரிக்கா(மூன்று முறை)
முக்கிய நாட்கள்:-

- 1990-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 21-ஆம் தேதி 'உலக மூத்த குடிமக்கள் தினம்'(World Senior Citizen Day) கொண்டாடப்படுகிறது.
- வயதானவர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நலன் காத்தல், முதியவர்களுக்கான ஆதரவு, மரியாதை, பாராட்டு மற்றும் அவர்களின் சாதனையை அங்கீகரிப்பது போன்றவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
இராணுவம்:-

- சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள கிழக்கு லடாக் பகுதியில் ராணுவம் மற்றும் மக்கள் பயன்படுத்தும் வகையில் உலகின் மிக நீளமான சாலை, சுரங்கப்பாதை மற்றும் போர் விமானங்கள் இறங்கும் வகையிலான விமான தளத்தை அமைக்கும் பணியை எல்லை சாலைகள் அமைப்பு(BRO) தொடங்கியுள்ளது.
உயரமான சாலை
- லடாக்கின் டெம்சாக் பகுதியில் 19,400 அடி உயரத்தில் சாலைகள் அமைக்கும் பணியை பிஆர்ஓ அமைப்பு, சுதந்திரத் தினத்தன்று தொடங்கியது.
- 64 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த சாலை உலகின் மிக உயரமான வாகன போக்குவரத்து சாலையாக இருக்கும்.
- இந்த சாலை ‘லிக்காரு-மிக் லா-ஃபகி’ என அழைக்கப்படும். ஃபகி என்ற இடம் இந்தியா-சீனா எல்லையில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு இந்த சாலை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
- லடாக்கில் 19,024 அடி உயரத்தில் ‘உம்லிங் லா’ என்ற இடத்தில் BRO ஏற்கெனவே வாகன போக்குவரத்துக்கான சாலையை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுரங்கப்பாதை
- உலகின் உயரமான சுரங்கப்பாதையாக ‛சிலா சுரங்கப்பாதை'(Sela tunnel) அமைகிறது. இரு வழிப்பாதையாக அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்து விரைவில் பிரதமர் மோடி இந்த பாதையை திறந்து வைக்க உள்ளார். உலகின் நீளமான சுரங்கப்பாதையாக இது இருக்கும்.
- ஹிமாச்சல பிரதேசத்தின் மணாலியை, லடாக்கின் ஜன்ஸ்கர் வழியாக லே பகுதி வரை இணைக்கும் 'ஷின்கு லா சுரங்கப்பாதை' (Shinku La tunnel)அமைக்கும் பணியையும் BRO துவக்க உள்ளது. இந்த பணி முடிவடைந்தால் உயரமான சுரங்கப்பாதை என்ற பெருமை பெறும்.
விமான படை தளம்
- கிழக்கு லடாக் பகுதியில் போர் விமானங்கள் வந்து செல்லும் வகையில் ‘நியோமா விமானதளம்’ அமைக்கும் பணியிலும் BRO ஈடுபட்டுள்ளது.
- இப்பணி முடிவடைந்தால், உலகின் மிக உயரமான விமான தளமாக இருக்கும்
முக்கிய குறிப்புகள்
- எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (Border Roads Organisation) இந்திய எல்லைப்புறச் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வளரச்சியை ஏற்படுத்தும் அமைப்பாகும்.
- தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - மே 7, 1960
- தலைமையகம் - டெல்லி
- தற்போதைய தலைவர்- லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி
- இந்த அமைப்பு ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
Tags:
Current Affairs