போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 01-09-2023
தேசியம் :-

- ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரத்தை ஆய்வு செய்வதற்காக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- ஒருவேளை, ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமலுக்கு வந்தால் அனைத்து மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும். வாக்குப்பதிவும் ஒரே நேரத்தில் நடைபெறும்.
- வரவிருக்கும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
- கடந்த 9 ஆண்டுகளில் இதுபோன்று சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். முன்னதாக, கடந்த 2017 ஜூன் 30-இல் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் கூட்டப்பட்டு GST சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு :-

- TNPSC தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்கும் பரிந்துரை மற்றும் உறுப்பினர்கள் நியமனம் குறித்த ஆளுநரின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்து பரிந்துரையை மீண்டும் தமிழக அரசு அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனம் பற்றிய குறிப்புகள்
- தமிழ்நாட்டில் அரசுத் துறைகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்யும் முகமையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) செயல்பட்டு வருகிறது.
- இந்த ஆணையத்திற்கு ஒரு தலைவரும் 14 உறுப்பினர்களும் இருக்கலாம்.
- தேர்வாணையத்தின் தலைவராக 2020-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன், 2022-ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
- இதையடுத்து புதிய தலைவர் நியமிக்கப்படாமல், TNPSC-யின் உறுப்பினராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.முனியநாதன், தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
- இவர் தவிர, தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக பேராசிரியர் கே. ஜோதி சிவஞானம், டாக்டர் கே. அருள்மதி, எம். ஆரோக்கியராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
- TNPSC-யின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 316 அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.
- பிரிவு 316-இன்படி, மாநில தேர்வாணயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமிப்பார்.
- ஒவ்வொரு தேர்வாணயமும் எத்தனை உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் என்பதும், அவர்களது தகுதி என்ன என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
- பொதுவாக, இந்தப் பதவிகளில் நியமிக்கப்படுபவர்கள் அரசுப் பதவிகளில் குறைந்தது பத்தாண்டு அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். நிர்வாக அனுபவம் கொண்டவர்கள் ஆணையத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விதி பின்பற்றப்படுகிறது.
- மாநில தேர்வாணையத்தின் தலைவராகவோ உறுப்பினராகவோ நியமிக்கப்படும் ஒருவர் ஆறு ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடிக்கலாம். ஆனால், அதிகபட்ச வயது 62-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஒருவர் அந்தப் பதவிக்காலம் முடிந்த பிறகு, மீண்டும் மறுநியமனம் பெற முடியாது.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் :-

- சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகமான ஆதித்யா-L1, சனிக்கிழமை (செப்டம்பர் 2) 11:50 மணிக்கு PSLV C-57 ராக்கெட்டின் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
- ஆதித்யா L1 என்ற இந்த செயற்கைக்கோள் சூரியனை ஆய்வு செய்யும் திட்டத்தில் விண்வெளியில் இருக்கக்கூடிய ஒரு கண்காணிப்பு ஆய்வகமாக செயல்படும்.
- சூரியன் - பூமி அமைப்பில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L 1)-ஐ சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் இந்த ஆய்வகம் வைக்கப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் ISRO தெரிவித்துள்ளது.
- L1 புள்ளியைச் சுற்றியுள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் ஆய்வகம் வைக்கப்படுவதால் எந்த தடையும் இல்லாமல் சூரியனைத் தொடர்ந்து பார்க்கும் முக்கிய நன்மை கிடைக்கும். சூரியனின் செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலை ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
- சூரியனின் வெளிப்புற அடுக்குகளை கண்காணிக்க ஏழு பேலோடுகளை விண்கலம் சுமந்து செல்கிறது. நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கும். மீதமுள்ள மூன்று பேலோடுகள், லாக்ரேஞ்ச் புள்ளி L1 இல் உள்ள துகள்கள் மற்றும் புலங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும்.
லக்ராஞ்ஜ் புள்ளி என்றால் என்ன?
- ஆதித்யா திட்டத்தின் பெயரில் உள்ள ‘L1’ என்பது ‘லக்ராஞ்ஜ்’(Lagrange point 1) புள்ளியைக் குறிக்கிறது.
- இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜோசப் லூயி லெக்ராஞ்சே என்ற கணிதம் மற்றும் வானியல் அறிஞர், பூமி, நிலவு, சூரியன் ஆகியவைகளின் ஈர்ப்பு விசையானது ஏதோ ஒரு புள்ளியில் சமநிலையில் இருக்கும் என்று கண்டறிந்தார். அவரது பெயரில் இந்த சுற்றுவட்டப் பாதை அழைக்கப்படுகிறது
- இந்த பாதையில் நிலைநிறுத்தப்படும் பொருட்கள் சம ஈர்ப்புவிசையுடன் சுழன்று வரும்.
- பூமிக்கு முன் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்று வட்டப் பாதையை L1 என்றும், பூமிக்கு பின்னால் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையை L2 என்றும் அழைக்கின்றனர்.
- இந்த L2-வில் தான் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நிலை நிறுத்தப்பட்டு சுற்றி வந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. L1, L2, L3, L4 மற்றும் L5 என மொத்தம் ஐந்து லாக்ரேஞ்ச் புள்ளிகள் உள்ளன.
ஆய்வின் நோக்கம்:
- சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களை கண்டறிய முடியும்.
- சூரிய வெடிப்பினால் ஏற்படும் சூரிய புயல் மற்றும் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் மேலும் அதன் வெப்ப மாறுபாடு குறித்தும் கண்டறிய முடியும்.
- ஒருவேளை சூரியனில் ஏற்படும் வெடிப்புகள் பூமியை நோக்கி வரும் பட்சத்தில் அது என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் சூரியனுக்கு அருகில் உள்ள கோள்களில் குறிப்பாக பூமியின் விண்வெளி வானிலையில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் நாம் அறிய முடியும்.
குறிப்பு - தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த 'நிகர் சாஜி' ஆதித்யா-L1 திட்ட இயக்குராக செயல்படுகிறார்

- விக்ரம் லேண்டரில் உள்ள RAMBHA-LP எனும் கருவி (Radio Anatomy of Moon Bound Hyper sensitive Ionosphere and Atmosphere - Langmuir Probe) , நிலவின் தென்துருவப் பகுதியில் பிளாஸ்மா மூலக்கூறுகள் இருப்பதை முதன் முதலாக அளவீடு செய்துள்ளது.
- இந்த அளவீட்டின் மூலம் நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா மூலக்கூறுகளின் அடர்த்தி மிகவும் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
- சூரிய வெப்பக் காற்றின் காரணமாக நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா உருவாகிறது. பிளாஸ்மா என்பது எலெக்ட்ரான்கள் கொண்ட ஒரு பகுதியாகும். நிலவில் ஒரு கனமீட்டருக்கு தோராயமாக 50 லட்சம் முதல் 3 கோடி எலெக்ட்ரான்கள் அடர்த்தி இருப்பதாக RAMBHA ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- இந்த அளவீடுகள் எதிர்காலத்தில் நிலவுக்கு அனுப்பப்பட உள்ள விண்கலன்களை வடிவமைப்பதில் உதவியாக இருக்கும். ஏனெனில், பிளாஸ்மாவின் அளவு அதிகமாக இருப்பின், விண்கலத்துடனான தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்படும்.
- மறுபுறம் லேண்டரில் உள்ள ILSA (Instrument for the Lunar Seismic Activity) எனும் சாதனம், நில அதிர்வுகளை ஆய்வு செய்துவருகிறது. இதன்மூலம் ரோவரின் நகர்வுகள் மற்றும் லேண்டரின் சேஸ்ட் கருவி துளையிடுதல் செயல்களால் உருவாகும் அதிர்வுகளையும் கணக்கிட்டு வருகிறது.கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட நிலஅதிர்வையும் ILSA பதிவுசெய்துள்ளது.
- இதேபோல, ரோவரில் உள்ள Alpha Particle X-ray Spectrometer (APXS) கருவியும் நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் உள்ளிட்ட சில மூலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்துள்ளது. அந்தப் பகுதியில் அதிக அளவில் உள்ள சல்ஃபர் தனிமம் இயற்கையாகவே உள்ளதா அல்லது எரிமலை வெடிப்பு, விண்கற்கள் விழுதல் போன்றவற்றால் உருவானதா என்று விஞ்ஞானிகள் அடுத்தகட்ட ஆய்வை முன்னெடுக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் : -

- ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹாவை மத்திய அரசு நியமித்துள்ளது.
- ரயில்வே வாரியத்தின் வரலாற்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
- செப்டம்பர் 1 -ஆம் தேதி பதவியேற்கும் இவர் அடுத்த ஓராண்டுக்கு இப்பதவி வகிப்பார்.
- 1988-ஆம் ஆண்டு இந்திய ரயில்வே போக்குவரத்துப் பணி (IRTS) அதிகாரியான சின்ஹா, வடக்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்திய ரயில்வே - முக்கிய குறிப்புகள்
- இந்திய ரயில்வே வாரியம் அமைக்க பரிந்துரைத்த குழு - சர் தாமஸ் ராபர்ட்சன் குழு(1901)
- இந்திய ரயில்வே வாரியச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1905
- இரயில் போக்குவரத்திற்கான திட்டம் முதன் முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்ட ஆண்டு - 1832
- இந்தியாவில் முதல் ரயில்(சரக்கு போக்குவரத்து) இயக்கப்பட்ட ஆண்டு - 1837
- இந்தியாவில் முதல் ரயில் இயக்கப்பட்ட வழித்தடம் - செங்குன்றம் முதல் சிந்தாதிரிப் பேட்டை வரை(இந்த ரயில் சர் ஆர்தர் காட்டனால் கட்டப்பட்டது)
- இந்தியாவின் முதல் பயணிகள் இரயில் இயக்கப்பட்ட ஆண்டு - 16 ஏப்ரல் 1853
- முதல் பயணிகள் இரயில் வழித்தடம் - மும்பையிலிருந்து தானே வரை
- இந்தியா சொந்தமாகவே இரயில் எஞ்சின்களை தயாரிக்க ஆரம்பித்த ஆண்டு – 1895
- வில்லியம் அக்வொர்த் குழு பரிந்துரைப்படி பொது பட்ஜெட்டிலிருந்து ரயில்வே பட்ஜெட் தனியாக பிரிக்கப்பட்ட ஆண்டு - 1924(பின்னர் 2017-18 நிதியாண்டில் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் மீண்டும்இணைக்கப்பட்டது)
- முதல் எலெக்ட்ரிக் ரயில் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு - 1925(மும்பை மற்றும் குர்லா நகரங்களுக்கு இடையே)
- இந்திய ரயில்வே தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு – 1951
- இந்தியாவின் மிகப் பழமையான தற்போதும் இயங்கக்கூடிய ரயில் இன்ஜீன்- Fairy Queen(1855-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது)
- இந்தியாவில் முதன்முதலில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்ட இடம் - கொல்கத்தா(1984)
- இந்தியாவில் அதிக தொலைவு செல்லக்கூடிய ரயில்- விவேக் எக்ஸ்பிரஸ் (கன்னியாக்குமரி முதல் திப்ரூகர் வரை)
- இந்தியாவின் மிகச் சிறிய தொலைவு இயங்கக்கூடிய ரயில்- நாகபுரி முதல் அஜ்னி வழித்தடத்தில் இயங்குகிறது(தூரம் 3 கிலோ மீட்டர்)
- ரயில் முன்பதிவு முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட ஆண்டு - 1995
- உலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்டு ஒரே துறையாக செயல்பட்டு வரும் துறை - இந்திய ரயில்வே துறை
- தற்போது இந்தியாவில் உள்ள இரயில்வே மண்டலங்களின் எண்ணிக்கை - 19
- யுனெஸ்கோவின் உலக புராதனச்சின்னங்கள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள 4 இந்திய ரயில் நிலையங்கள் - நீலகிரி மலை ரயில், கல்கா- சிம்லா இடையிலான மலை ரயில், டார்ஜிலிங் மலை ரயில் மற்றும் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்
- இந்தியாவின் மிக உயர்ந்த ரயில் நிலையம் - கும் ரயில் நிலையம்(மேற்கு வங்கம்)
- உலகின் மிக நீளமான நடைமேடை உள்ள ரயில் நிலையம் - கர்நாடகா மாநிலம் ஹுப்பள்ளி ரயில் நிலையம்
- உலகின் மிக உயரமானரயில்வே பாலம் - செனாப் ரயில்வே பாலம்(ஜம்மு).
விளையாட்டு செய்திகள் : -

- இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த 17 வயது கிராண்ட் மாஸ்டர் குகேஷ்.
- உலக அளவில் செப்டம்பர் மாதத்துக்கான ஃபிடே ஓபன் தரவரிசையில் 2,758 ரேட்டிங் உடன் எட்டாம் இடத்தில் உள்ளார்.
உலக தரவரிசையில் டாப் 25-ல் இடம் பிடித்துள்ள இந்தியர்கள்
- குகேஷ் (8- ஆம் இடம்)
- விஸ்வநாதன் ஆனந்த் (9- ஆம் இடம்)
- பிரக்ஞானந்தா (19- ஆம் இடம்)
முக்கிய நாட்கள் : -
Tags:
Current Affairs