போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 11-09-2023
தேசியம் :-

- தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்க (DAY-NRLM) திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய 75 லட்சம் கிராமப்புற பெண்களை நடப்பு 2023-24 நிதி ஆண்டில் லட்சாதிபதிகளாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- அதன்படி, அவர்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் வகையில் வழிவகை செய்யப்படவுள்ளது.
- NRLM தரவுகளின்படி, இதுவரை 9.5 கோடி பெண்கள் 87.4 லட்சம் சுய உதவிக் குழுக்களில் இணைந்துள்ளனர்.
- 2013-14 இல் இருந்து இதுவரை சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.6.96 லட்சம் கோடி வங்கி கடன் பெறப்பட்டுள்ளது. பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவாக இதில் வாராக் கடன் என்பது 1.88 சதவீதம் அளவுக்கே உள்ளது.
- முன்னதாக பிரதமர் தனது சுதந்திரதின உரையில், இரண்டு கோடி ‘லக்பதி தீதி’ (லட்சாதிபதிப் பெண்) உருவாக்குவதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் அரசு இணைந்து பணியாற்றி வருவகிறது என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேசம் :-

- G 20 மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியாவையும், மத்திய கிழக்கு நாடுகளையும், ஐரோப்பாவையும் ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்தை இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் தொடங்கவுள்ளன.
- இதன்மூலம் வர்த்தகம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்புகள் வளர்ச்சி பெறும்.
- இந்த திட்டம் உலகின் 3 பிராந்தியங்களை இணைப்பதால் செழிப்பை ஏற்படுத்தும். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் அடிப்படை கட்டமைப்பில் உள்ள மிகப்பெரிய இடைவெளியை நிரப்பும். மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல், பாதுகாப்பின்மை குறையும். பிராந்திய இணைப்பு அதிகரிக்கவும் இது உதவும்.

- உலக மக்களின் நலன் கருதி இந்தியாவின் சார்பில் ‘G 20 சுற்றுச்சூழல், பருவநிலை செயற்கைக்கோள் கண்காணிப்பு' திட்டம் செயல்படுத்தப்படும்.
- இந்த செயற்கைக்கோள் திட்டத்தின் மூலம் பருவநிலை, வானிலை தொடர்பான தகவல்கள் உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
- குறிப்பாக தெற்கு நாடுகள் தொடர்பான வானிலை தகவல்கள் அந்த நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
- இந்த திட்டத்தில் G-20 உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைய வேண்டும் என்று இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ் நாடு :-

- நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ஆண்டுக்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
- அதன்படி, தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா மேற்பார்வையில், தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழு தலைவர் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் வழிகாட்டுதல் பேரில் நடந்த லோக் அதாலத் வாயிலாக 53,836 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.323 கோடியே 85 லட்சத்து 55,823 நிவாரணம் கிடைத்துள்ளது.
லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றம்) - முக்கிய குறிப்புகள்
- இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ஜூனகார் என்ற இடத்தில் மார்ச் 14, 1982 அன்று ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதி மன்றம் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
- சமாதானம் அல்லது சமரசப் பேச்சுவார்த்தைகள் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் இதுவாகும்.
- 1980-இல் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் பி. என். பகவதி அவர்கள் தலைமையில் தேசிய அளவில் சட்ட உதவிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை ஆராய “CILAS “(Committee for Implementing Legal Aid Schemes) என்ற குழு அமைக்கப்பட்டது.
- அதன் பரிந்துரையின் பேரில் 1987 இல் Legal Services Authorities Act என்ற சட்டம் இயற்றப்பட்டது.
- இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள சட்ட உதவி மையங்கள் ஒரே வடிவங்களில் செயல்பட வழிவகுத்தது.
- இந்தச் சட்டத்தின்படி 1995 -இல் National Legal Services Authority (NALSA) – என்ற ஆணையம் நிருபட்டது.
- இந்த ஆணையம், பொருளாதரத்தில் பின் தங்கியவர்களுக்காக சட்ட உதவி வழங்கிடவும், விரைவாக நீதி வழங்கும் லோக் அதாலத் (Lok Adalat) ஏற்படுத்தவும் செயல்படுகின்றது.
லோக் அதாலத்தில் தீர்க்கப்படும் வழக்கு வகைகள்
- காசோலை தொடர்பான வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்பப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், தொழில் தகராறுகள், தொழிலாளர் பிரச்னை தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளத் தன்மையுள்ள வழக்குகள், நில ஆர்ஜிதம் மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன் பிரச்னைகள், வாடகை விவகாரங்கள், விற்பனை வரி, வருமான வரி மற்றும் மறைமுக வரி தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பலவகையான வழக்குகளுக்கு லோக் அதாலத் மூலமாகத் தீர்வுகள் காணப்படுகின்றன.

- தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் பரமக்குடியில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தியாகி இம்மானுவேல் சேகரன் பற்றிய குறிப்புகள்
- 9.10.1924 அன்று இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் எனும் கிராமத்தில் பள்ளி ஆசிரியரான வேதநாயகம் – ஞானசவுந்தரி ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார்
- தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். பள்ளி வாழ்க்கையில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.
- இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கத் துவங்கினர்.
- 1942 ஆம் ஆண்டில் அவருடைய 18-வது வயதில் அவர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கெடுத்து, மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவித்தார்.
- 1945-இல் நாட்டின் மீது கொண்ட பற்றினால் இராணுவத்தில் இணைந்தார்.
- பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் மூன்று ஆண்டுகளும், சுதந்திர இந்திய இராணுவத்தில் ஐந்து ஆண்டுகளும் பணியாற்றினார். இதன் மூலம் அவர் பல மொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம், இந்தி, ரஷ்ய மொழி உட்பட ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்.
- தேக்கம்பட்டி பாலசுந்தர்ராஜ் அவர்கள் அண்ணல் அம்பேத்கரை அழைத்து மதுரையில் 29.12.1946 அன்று நடத்திய தேவேந்திர குல வேளாளர் சங்க மாநாட்டில், அம்பேத்கர், பெருமாள் பீட்டரோடு ராணுவ வீரரான இம்மானுவேல் சேகரனும் கலந்து கொண்டார்.
- 1952-இல் இராமநாதபுரம் பகுதி வாழ் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்நிலையைக் கருத்தில் கொண்டு தனது ராணுவப் பணியை துறந்தார். நேரடியான சமூகப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
- காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்த இராஜாஜி குலக்கல்வியைக் கொண்டு வந்த போது அதற்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்தினார்
- 1953-இல் ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை உருவாக்கி, அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கிய சமூக விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்தார்.
- தீண்டாமைக்கு எதிராக பெட்ரோமாக்ஸ் லைட் ஏந்தி ஊர்கள் தோறும் தனது ஆதரவாளர்களைத் திரட்டிச் சென்று கூத்துகள், நாடகங்கள் நடத்தி பரப்புரை செய்தார்.
- 26.5.1954 அன்று இரட்டைக் குவளை ஒழிப்பு மாநாட்டை அருப்புக் கோட்டையில் நடத்தினார்.
- 2.10.1956 அன்று, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பங்கேற்பு மாநாட்டை முதுகுளத்தூரில் முன்னெடுத்தார்.
- 6.12.1956 அன்று அண்ணல் அம்பேத்கரின் மறைவையொட்டி மாபெரும் இரங்கல் கூட்டத்தை நடத்தினார். ஒடுக்கப் பட்ட சமுகங்களின் ஒப்பற்ற தலைவராக உருவெடுக்க தொடங்கினார்.
- காமராஜர் அழைப்பை ஏற்று காங்கிரசில் இணைந்து ஹரிஜன லீக் காங்கிரசில் உறுப்பினரானார்.
- 1957 நாடாளுமன்றத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்தார். அன்றைய காலகட்டத்தில் பார்வர்ட் பிளாக் கட்சியை எதிர்த்து பேசவே துணிச்சல் இல்லாத தலைவர்கள் மத்தியில் இம்மானுவேல் சேகரன் பார்வட் பிளாக் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.
- 11.09.1957 அன்று மாலை எமனேஸ்வரம் கிராமத்தில் நடந்த பாரதி விழாவிற்குச் சென்று சிறப்புரையாற்றி விட்டு வீடு திரும்பும்போது ஆதிக்கச் சாதியினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
- 33 வயதேயான தியாகி இம்மானுவேல் சேகரனின் துணிவும், எதிர்ப்பு மனநிலையும், சுயமரியாதை உணர்வுமே அவரை இன்றைய நாளிலும் மக்களின் இணையற்ற தலைவராக இருக்க காரணமாக அமைந்தது.
விளையாட்டு செய்திகள் :-

- இந்தோனேஷியாவின் மேடன் நகரில் நடைபெற்று வந்த இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 50-ஆம் நிலை வீரரான இந்தியாவின் கிரண் ஜார்ஜ், 82-ஆம் நிலை வீரரான ஜப்பானின் கூ தகாஹாஷியை எதிர்த்து விளையாடினார்.
- இந்த ஆட்டத்தில் கிரண் ஜார்ஜ் 21-19, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

- நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் 6-3, 7-6(5), 6-3 என்ற செட் கணக்கில் மேத்வதேவை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
- இது அவர் வெல்லும் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.
- மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெலாரஸின் அரினா சபலெங்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் 19 வயதான அமெரிக்காவின் கோ கோ காஃப்.
- இதன் மூலம் 1999-ஆம் ஆண்டு செரீனா வில்லியம்ஸுக்கு பிறகு அமெரிக்க ஓபனில் இளம் வயதில் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் கோ கோ காஃப்.
அதிகமுறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்றவர்கள்
ஆடவர் பிரிவில்
- நோவக் ஜோகோவிச் - 24
- ரஃபேல் நடால் - 22
- ரோஜர் பெடரர் - 20
பெண்கள் பிரிவில்
- மார்கரெட் கோர்ட் - 24
- செரீனா வில்லியம்ஸ் - 23
- ஸ்டெஃபி கிராஃப் - 22
முக்கிய நாட்கள் :-

- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. மனஅழுத்தம், காதல் தோல்வி, கடன் பிரச்னைகள், குடும்ப வறுமை, கந்து வட்டி கொடுமை, பாலியல் வன்கொடுமை என பல்வேறு பிரச்னைகளால் நாள்தோறும் தற்கொலைகள் அரங்கேறி வருகின்றன
- உலகம் முழுவதும் ஆண்டிற்கு, ஏழு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என, உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது
- மக்களுக்கு தற்கொலை குறித்த எண்ணத்தை தவிர்க்கும் வகையில் செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- 'நடவடிக்கையின் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்துதல்' என்பது இந்த ஆண்டின் உலக தற்கொலை தடுப்பு தினத்தின் கருப்பொருளாகும்
Tags:
Current Affairs