போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 13-09-2023
சர்வதேசம் :-

- இந்தாண்டு இந்தியாவில் நடந்த G-20 உச்சி மாநாட்டில், இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளை கடல், ரயில், சாலை வழியாக இணைக்கும் மாபெரும் திட்டம் (India-Middle East-Europe Economic Corridor) அறிவிக்கப்பட்டது.
- இந்த திட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி நாடுகள் கையெழுத்திட்டன.
- IMEC என்றழைக்கப்படும் புதிய பொருளாதார வழித்தட திட்டத்தின் மூலம் சீனாவின் 'பெல்ட் அன்ட் ரோடு' திட்டத்துக்கு இந்தியா நேரடியாக சவால் விடுத்திருக்கிறது.
- IMEC வழித்தடம் சுமார் 6,000 கி.மீ. நீளம் கொண்டதாகும். இதில் 3,500 கி.மீ. தொலைவு கடல் வழி பாதை ஆகும்.
- புதிய வழித்தடத்தின் மூலம் இந்தியாவின் தயாரிப்புகள் மிக விரைவாக ஐரோப்பிய நாடுகளை சென்றடையும்.
- தற்போது இந்தியாவில் இருந்து புறப்படும் சரக்கு கப்பல் ஜெர்மனியை சென்றடைய சுமார் 36 நாட்கள் ஆகிறது. புதிய வழித்தடம் செயல்பாட்டுக்கு வரும்போது 14 நாட்களில் இந்திய சரக்குகள், ஜெர்மனியை சென்றடையும்.
- மேலும்,புதிய பொருளாதார வழித்தடத்தில் இருபுறமும் மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள்கள் பதிக்கப்படும். அதோடு ஹைட்ரஜனை கொண்டு செல்ல ராட்சத குழாய்களும் பதிக்கப்படும்.
- இந்த திட்டத்தால் இந்தியா,மத்திய கிழக்கு, ஐரோப்பியநாடுகளின் பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ச்சி அடையும். லட்சக்கணக்கான மக்களுக்குவேலைவாய்ப்பு கிடைக்கும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
முக்கிய குறிப்புகள்
- சீனாவின் 'பெல்ட் அன்ட் ரோடு' திட்டம் 2013-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- இதன்படி மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளை கடல், ரயில், சாலை வழியாக இணைக்கும் பணிகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது.
- இந்த திட்டத்தில் இதுவரை 154 நாடுகள் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.
- சமீபத்தில் நடந்த G-20 உச்சி மாநாட்டில் இத்தாலி, 'பெல்ட் அன்ட் ரோடு' திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- இந்தியாவில் நடைபெற்ற G 20 உச்சி மாநாட்டின் முக்கிய அம்சமாக, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி(Global Biofuel Alliance) உருவாக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோர் முன்னிலையில் இந்தக் கூட்டணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
- இந்தக் கூட்டணியில் தொடக்க உறுப்பு நாடுகளாக அர்ஜென்டினா, வங்கதேசம், பிரேசில், இந்தியா, இத்தாலி, மொரிஷியஸ், தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
- பார்வையாளர்களாக கனடாவும், சிங்கப்பூரும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மாசு இல்லாத மின் உற்பத்தி முறை, பாதுகாப்பான மின் உற்பத்தி, சுழலும் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை மையமாகக் கொண்டு இந்த கூட்டணி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு :-

- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- இந்நிலையில், வெம்பக்கோட்டையிலிருந்து சுமார் 4 கி.மீ.தொலைவில் உள்ள சிவசங்குபட்டியில் சிலர் கட்டிடப் பணிகளுக்காக தோண்டிய குழியில் 6 முதுமக்கள் தாழிகள் கிடைத்தன.
- இதனை ஆய்வுக்குட்படுத்தியதில், இவை சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.
2023-இல் தமிழகத்தில் அகழாய்வுகள் நடைபெறும் இடங்கள்
- கீழடி மற்றும் அதன் சுற்றியுள்ள தொல்லியல் தளங்கள் (அகரம், கொந்தகை) - சிவகங்கை மாவட்டம்
- கங்கைகொண்ட சோழபுரம் - அரியலூர் மாவட்டம்
- வெம்பக்கோட்டை - விருதுநகர் மாவட்டம்
- துலுக்கர்பட்டி - திருநெல்வேலி மாவட்டம்
- கீழ்நமண்டி - திருவண்ணாமலை மாவட்டம்
- பொற்பனைக்கோட்டை - புதுக்கோட்டை மாவட்டம்
- பூதிநத்தம் - தருமபுரி மாவட்டம்
- பட்டறைப்பெரும்புதூர் - திருவள்ளூர் மாவட்டம்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஒரே ஆண்டில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்வது, தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்:-

- நிபா தொற்று என்பது விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் வைரசாகும்.
- இதன் பிறப்பிடம் fruit bats எனப்படும் பழந்தின்னி வௌவால்கள்.
- 1998-ஆம் ஆண்டு முதன்முதலில் மலேஷியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது. வௌவால்களிடம் இருந்து பன்றிகளுக்கு இந்த நோய் பரப்பப்பட்டது.
- 2004-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் பழந்தின்னி வௌவால்கள் கடித்த பனையை சாப்பிட்ட மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவியது. ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவப்படுவதும் கண்டறியப்பட்டது.
- இந்தியாவில் முதன்முதலாக 2018-ஆம் ஆண்டு கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அப்போது 17 பேர் வைரஸால் உயிரிழந்தனர். பின்னர் கடந்த 2019-ஆம் ஆண்டு கொச்சியிலும் கடந்த 2021-ஆம் ஆண்டில் கோழிக்கோட்டிலும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது.
- நிப்பா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும்.
- இந்நிலையில் தற்போது மீண்டும் நிபா வைரஸ் பரவுவது குறிப்பிடத்தக்கது.
நோயின் அறிகுறிகள்
- மூளை வீக்கம்
- கடும் காய்ச்சல் மற்றும் தலைவலி
- அயர்வு
- சுவாசப் பிரச்சனைகள்
- மனக்குழப்பம்
நிப்பா வைரஸ் தாக்கிய 5 - 14 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் தென்படும்.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள்:-

- இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுடன் ஆலோசனை மேற்கொண்டு, சென்னை உயா்நீதி மன்றத்திற்கு 5 நீதிபதிகளை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்துள்ளாா்.
- அதன்படி, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக எ.எ.நக்கீரன், நிடுமொலு மாலா, எஸ்.செளந்தா், சுந்தா் மோகன், கபாலி குமரேஷ் பாபு ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
- இவா்கள் 5 பேரும் ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ளனா்.
- சென்னை உயா்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி - சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா
முக்கிய குறிப்புக்கள்
- உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு – 217
- உயர் நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்பவர்- குடியரசுத் தலைவர்
- உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது: 62
- உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தகுதி- நீதி நிா்வாகப் பணியில் இந்திய நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி புாிந்திருக்க வேண்டும்.
- உயர் நீதிமன்றத்தின் நீதிப்பேராணை அதிகார வரம்பு பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு(Writ Jurisdiction) - 226
- சென்னை உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு - ஆகஸ்ட் 15,1862
- இந்தியாவின் முதல் உயர் நீதிமன்றம் - கல்கத்தா உயர் நீதிமன்றம்( 1 ஜூலை 1862)
- சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி - டி.முத்துச்சாமி(1877)
- சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திரத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட முதல் இந்திய தலைமை நீதிபதி - பி.வி.ராஜமன்னார்(1948)
- சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - கந்த குமாரி பட்நாகர்(1992)
- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தொடங்கப்பட்ட ஆண்டு – 2004
- சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை: 75
- இந்தியாவில் உள்ள மொத்த நீதிமன்றங்களின் எண்ணிக்கை – 25
- இரண்டு அல்லது மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவான உயர்நீதிமன்றங்களை அமைக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரமளித்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம் - 7வது சட்டத்திருத்தம்,1956
- சென்னை உயர்நீதிமன்ற அதிகார வரம்பு எல்லை- தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் புதுவை யூனியன் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது.
- தற்போது தனி நீதிமன்றம் கொண்ட ஒரே யூனியன் பிரதேசம் - டெல்லி(1966)
- மிகப் பெரிய நீதிபரிபாலனம் கொண்ட உயர் நீதிமன்றம் - குவஹாத்தி உயர் நீதிமன்றம்(அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய 4 மாநிலங்களை உள்ளடக்கியது
முக்கிய நாட்கள் :-

- ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி தேசிய வன தியாகிகள் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- இத்தினம் 2013 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது
- இத்தினம் 1730 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நிகழ்ந்த கெஜ்ரலி படுகொலையை நினைவுபடுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
வரலாறு
- ராஜஸ்தானின் ஜோத்பூரின் அப்போதைய மன்னராக இருந்த மகாராஜா அபய் சிங் தனது விரிவடையும் ராஜ்யத்திற்கு வழி வகுக்க காடுகளை அழிக்க உறுதியாக இருந்தார்.
- அவரது உத்தரவின் பேரில் தொழிலாளர்கள் கெஜார்லி மரங்களை வெட்டத் தொடங்கினர்
- இந்த மரங்கள் ராஜஸ்தானின் கேஜார்லி கிராமத்தில் உள்ள பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த மக்களால் புனிதமாகக் கருதப்பட்டன.
- மரங்களை வெட்டும் நபர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அமிர்தா தேவி என்ற பெண் புனிதமான கேஜார்லி மரத்தின் மீது தனது தலையை வைத்துக்கொண்டார். அவர்கள் மரத்தை வெட்ட மாட்டார்கள் என்று நம்பினார்.
- ஆனால் மன்னரின் தொழிலாளர்கள் மரத்தோடு அமிர்தா தேவியின் தலையையும் சேர்த்து வெட்டினர். அமிர்தா மட்டுமல்லாது அம்மரத்தை புனிதமாக கருதும் பிஷ்னோய் சமூக மக்கள் அனைவரும் மரத்தின் மீது தலை வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமிர்தாவின் குழந்தைகள் உட்பட 350 க்கும் மேற்பட்டவர்களை மன்னரின் தொழிலாளர்கள் கொன்றனர்.
- மரத்தை காப்பாற்ற உயிரைவிட்ட அந்த துயர சம்பவம் ராஜா அபய் சிங்கின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
- இதனை தொடர்ந்து அவர் உடனடியாக தனது ஆட்களை பின்வாங்கச் சொன்னார். பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த மக்களிடம் அவர் நேரில் சென்று மன்னிப்பும் கேட்டுள்ளார்.
Tags:
Current Affairs