போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 14-09-2023
தேசியம் :-

- மத்தியப்பிரதேச மாநிலம் ஓம்கரேஷ்வரில் நிறுவப்பட்டுள்ள 108 அடி உயர ஆதி சங்கராச்சார்யா சிலையை அம்மாநிலத்தின் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
- இச்சிலை ரூ.2,141 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது
- சிலை அருகே அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆதி சங்கராச்சார்யாவின் வாழ்க்கை மற்றும் தத்துவம் நவீன மற்றும் புதுமையான வழிகளில் காட்சிப்படுத்தப்படும்.
- அனைத்து கட்டமைப்புகளிலும் நமது நாட்டின் பாரம்பரிய கலை மற்றும் இந்திய கலாச்சாரத்தின் முத்திரைகள் தெரியும் வகையில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
- 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய தத்துவஞானி ஆதி சங்கராச்சாரியார், இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.

- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் யானை திட்டம், மாநில வனத்துறையினா் மற்றும் இந்திய வன உயிரினங்கள் அமைப்பின் தொழில்நுட்ப வல்லுநா்கள் உதவியுடன் கடந்த இரு ஆண்டுகளாக யானை வழித்தடங்கள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு ’இந்தியாவில் யானை வழித்தடங்கள்’ என்ற தலைப்பில் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது
- அதன்படி,இந்தியாவில் 150 யானை வழித்தடங்கள் உள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 26 யானை வழித்தடங்கள் உள்ளன.
- மாநிலங்களுக்கு இடையே பரவிக் காணப்படும் நான்கு யானை வாழ்விடப் பிராந்தியங்களில் கிழக்கு-மத்திய பிராந்தியத்தில் 52, வடகிழக்குப் பிராந்தியத்தில் 48, தெற்குப் பிராந்தியத்தில் 32, வடக்குப் பிராந்தியத்தில் 18 யானை வழித்தடங்கள் காணப்படுகின்றன.
- இந்த வழித்தடங்களில் 126 வழித்தடங்கள் மாநில எல்லைக்குள்ளும், 12 வழித்தடங்கள் இரு மாநிலங்களுக்கு இடையேயும் அமைந்துள்ளன.
- இந்தியா-நேபாளம் இடையே 6 யானை வழித்தடங்கள் அமைந்துள்ளன.
- சத்தீஸ்கரை ஒட்டிய மகாராஷ்டிரத்தின் விதா்பா பிராந்தியம், கா்நாடகத்தை ஒட்டிய தெற்கு மகாராஷ்டிரம், ஒடிஸாவிலிருந்து மத்திய பிரதேசம் மற்றும் வடக்கு ஆந்திரம் என தங்களுக்குரிய எல்லைகளை யானைகள் விரிவுப்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- 2010-ஆம் ஆண்டு வெளியான அறிக்கையின்படி, யானை வழித்தடங்களின் எண்ணிக்கை 88-ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- உஜ்வாலா திட்டத்தின் கீழ் புதிதாக 75 லட்சம் ஏழைகளுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் இலவச சமையல்எரிவாயு இணைப்பு வழங்கவும், இதற்காக ரூ.1,650 கோடி ஒதுக்கவும் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- இந்த 75 லட்சம் பயனாளிகளையும் சேர்த்தால் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஒட்டுமொத்த இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 10.35 கோடியாக அதிகரிக்கும்.
- இந்தத் திட்டத்தில் நுகர்வோருக்கு ஆண்டுக்கு 14.2 கிலோ LPG சிலிண்டருக்கு ரூ. 200 வீதம் 12 சிலிண்டர்கள் வரை மானியம் வழங்கப்படுகிறது.
- 2014-ஆம் ஆண்டு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் நுகர்வோர் எண்ணிக்கை 14 கோடியாக இருந்த நிலையில், இந்தாண்டு 32 கோடியாக அதிகரித்துள்ளது.
முக்கிய குறிப்புகள்
- நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் ‘பிரதமரின் உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
- இத்திட்டத்தின் கீழ், சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது.
- இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும்.
- மத்திய அரசின் நேரடி மானியத் திட்டத்தின் கீழ், அனைத்து வாடிக்கையாளர்களும் சந்தை விலைக்கு சிலிண்டர் வாங்க வேண்டும்.பின்னர், அதற்கான மானியத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்
தமிழ்நாடு :-

- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, வனத் துறை அதிகாரிகள் மாநாடு சென்னையில் அக்டோபர் 3,4 தேதிகளில் நடைபெற உள்ளது.
- இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, வனத் துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
- இம்மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் -ஒழுங்கு நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்வர் விரிவாக ஆய்வு மேற்கொள்வார்.
முக்கிய நாட்கள் :-

- இந்திய அரசியல் நிர்ணய சபை, தேவநாகரி எழுத்து வடிவத்தில் எழுதப்படும் இந்தி மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக, கடந்த 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் நாள் தேர்வு செய்தது. இந்நாளை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி ‘தேசிய இந்தி தினம்’ கொண்டாடப்படுகிறது.
முக்கிய குறிப்புகள்
- இந்திய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ மொழி பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு - 343
- இந்தியாவின் முதல் மாநிலமாக பீகார், 1881-இல் உருது மொழிக்குப் பதிலாக இந்தியை தனது அதிகாரப்பூர்வ மாநில மொழியாக மாற்றிக்கொண்டது.
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 43.62% பேரின் தாய்மொழியாக இந்தி உள்ளது.
- நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில்தான் இந்தி பேசும் மக்கள் அதிகமாக உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் பிகார், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
- மொரீசியஸ், சூரினாம், கயானா, ஃபிஜி, டிரினிடாட் & டொபாக்கோ, நேபாளம் ஆகிய நாடுகளிலும் இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் கணிசமாக உள்ளனர்.
- உலகளவில் அதிக மக்கள் பேசும் மொழிகள் பட்டியலில் இந்தி 4-வது இடத்தில் உள்ளது.
- உலக இந்தி தினம் ஆண்டுதோறும் ஜனவரி 10 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 1975 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற முதல் உலக இந்தி மாநாட்டின் நினைவாக ஜனவரி 10 ஆம் தேதி உலக இந்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இராணுவம் :-

- ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் நிறுவனம் இந்திய விமானப்படைக்காக C-295 ரக விமானங்களைத் தயாரித்து அளிக்கவுள்ளது.
- இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஏர் பஸ் நிறுவனமும் கடந்த 2021-இல் கையெழுத்திட்டன.
- C-295 வகையைச் சேர்ந்த 56 விமானங்களை இந்திய விமானப் படைக்கு அளிக்குமாறு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டிருந்தது.
- இந்த ஒப்பந்தத்தின்படி 16 விமானங்கள் ஸ்பெயினிலும், 40 விமானங்கள் குஜராத்திலுள்ள வதோதராவில் உள்ள ஆலையிலும் உற்பத்தி செய்யப்படும்.
- வதோதரா ஆலையானது, ஏர் பஸ் நிறுவனமும், டாடா நிறுவனமும் கூட்டு சேர்ந்து ஏற்படுத்தியதாகும்.
- இந்த ஒப்பந்தப்படி, ஸ்பெயினில் தயாரிக்கப்படும் 16 விமானங்கள் 2024-க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். அதேபோல் இந்தியாவில் தயாரிக்கப்படும் மீதமுள்ள 40 விமானங்கள், 2031-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒப்படைக்கப்படும்.
- இந்நிலையில், இதன் முதல் விமானத்தை ஸ்பெயினில் நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி பெற்றுக்கொண்டார்.
C-295 ரக விமானம் பற்றிய குறிப்புகள்
- இந்த விமானமானது 5 முதல் 10 டன் எடையை சுமந்து செல்லும் திறன் படைத்தது.
- பாராசூட் குழுவினரை குறிப்பிட்ட இடத்தில் தரை இறக்குவதற்கும், சரக்குகளை சுமந்து சென்று தரை இறக்குவதற்கும் இந்தவகையிலான விமானங்கள் பயன்படும்.
- இந்த விமானத்தை குறுகிய தூர ஓடுபாதையில் தரையிறக்கவும், மேலெழுப்பவும் முடியும்.
- மேலும் இது தொடர்ச்சியாக 11 மணி நேரம் பறக்கும் சக்தி படைத்தது.
- இதுபோன்ற விமானங்கள் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், உக்ரைன், பிரேசில், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன. தற்போது இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

- ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 11 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் ரூ.2,900 கோடிக்கு மேல் மதிப்புள்ள எல்லை சாலைகள் அமைப்பின் (BRO) 90 உள்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 12 அன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நெச்சிபு சுரங்கப்பாதை,மேற்கு வங்கத்தில் இரண்டு விமான நிலையங்கள்; இரண்டு ஹெலிபேடுகள்; 22 சாலைகள் மற்றும் 63 பாலங்கள் இதில் அடங்கும்.
- இந்த 90 திட்டங்களில், 36 திட்டங்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளன; லடாக்கில் 26; ஜம்மு காஷ்மீரில் 11; மிசோரமில் 5; இமாச்சலப் பிரதேசத்தில் 3; சிக்கிம், உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா இரண்டு மற்றும் நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் தலா ஒன்று ஆகியவை இடம் பெற்றுள்ளன.
Tags:
Current Affairs