போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் |
IMPORTANT CURRENT AFFAIRS - 14-11-2023
🔘 தேசியம் :-

- பாரத் கவுரத் திட்டத்தின் கீழ் 50 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 489 கி.மீ. சென்று வந்துள்ள இந்த ரயில்களில் 24,848 பேர் பயணம் செய்துள்ளனர்.
- இந்தியாவில் பிரபலமான இடங்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு, தெற்கு ரயில்வேக்கு மொத்தம் ரூ.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
‘பாரத் கவுரவ் திட்டம்’ -முக்கிய குறிப்புகள்
- இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை மக்கள் கண்டுகளிக்கும் வகையில் ‘பாரத் கவுரவ்’ ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே 2021-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.
- இந்த திட்டத்தில் ரயில்களை இயக்குவது மட்டுமே ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு. மற்ற சேவைகளை தனியார் நிறுவனங்கள் கவனிப்பார்கள்.
- இத்திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் கோவை-ஷீரடிக்கு கடந்த ஆண்டு ஜூன்14-ஆம் தேதி முதல் ரயில் இயக்கப்பட்டது
- இதுபோல, தனியார் ரயில்கள் இயக்குவது படிப்படியாக அதிகரித்துதற்போது 50-வது பாரத் கவுரவ் ரயிலாக தென்காசியில் இருந்து வாராணாசிக்கு 'கங்கா ஸ்நானா யாத்ரா' தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது.

- உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 22.23 லட்சம் விளக்குகள் தீபோற்சவ நிகழ்வை முன்னிட்டு ஒளிர்விக்கப்பட்டது.
- இது கின்னஸ் உலக சாதனையாகவும் அமைந்துள்ளது.
முக்கிய குறிப்பு
- 14 ஆண்டுகால வனவாசத்தை முடித்துக் கொண்டு ராமர், சீதை மற்றும் லட்சுமணன் அயோத்தி திரும்பியதாக சொல்லப்படும் வழக்கத்தின் காரணமாக அயோத்தியில் தீபோற்சவ விழா நடைபெறுகிறது.
🌍 சர்வதேசம் :-

- Institute of International Education (IIE) என்கிற அமைப்பு, அமெரிக்காவில் சர்வதேச பட்டதாரி மாணவர்கள் குறித்த Open Doors என்ற ஆய்வறிக்கையை நேற்று (நவம்பர் 13) வெளியிட்டது. அதன்படி,
- இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கை 2022-23-ஆம் கல்வியாண்டில் 35 சதவீதம் அதிகரித்து 2,68,923-ஆக உயர்ந்துள்ளது.
- அமெரிக்காவில் படிக்கும் 10 லட்சம் வெளிநாட்டு மாணவர்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்திய மாணவர்களாக உள்ளனர்.
- தற்போது அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சீனாவை விஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
🔴 தமிழ் நாடு :-

- மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட 2019-20- ஆம் ஆண்டுக்கான தொழிற்துறை புள்ளிவிவரங்களின்படி, இந்திய அளவில் தொழிற்சாலைகளில் 15.80 லட்சம் பெண்கள் வேலை செய்கின்றனர். இவர்களில் 6.79 லட்சம் பேர் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர்.
- இது இந்திய அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மொத்த பெண் ஊழியர்களின் எண்ணிக்கையில் 43 சதவீதம் ஆகும்.
- அதேபோல், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை சொந்தமாக நடத்தும் பெண்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
முக்கிய குறிப்புகள்
- இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
- தமிழ்நாட்டில் 38,837 தொழிற்சாலைகள் உள்ளது
🟢 பொருளாதாரம் :-

- 2023-24 நிதி ஆண்டில் வரி செலுத்துவோருக்குத் திருப்பி அளிக்கப்பட்ட தொகை (Refund) போக ரூ.10.60 லட்சம் கோடி நிகர நேரடி வரி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 21.82 சதவீதம் அதிகம்.
- தற்போது வசூலாகியுள்ள ரூ.10.60 லட்சம் கோடி வரி என்பது நிகழ் நிதியாண்டு பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட நேரடி வரி வசூலில் 58.15 சதவீதமாகும்.( 2023-24 நிதி ஆண்டுக்கு ரூ.18.23 லட்சம் கோடி வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது)
- நேரடி வரி வசூலில் பெருநிறுவன வரி(Corporate Income Tax), தனிநபா் வருமான வரி(Personal Income Tax) ஆகியவையும் அடங்கியுள்ளன.
- சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதி ஆண்டில் இதுவரை தனிநபர் வருமான வரி வசூல் 32 சதவீதமும் நிறுவன வரி வசூல் 13 சதவீதமும் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் வருமானவரி உருவான வரலாறு
- 24 ஜூலை 1860 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்த சர் ஜேம்ஸ் வில்சன் என்பவர் வருமான வரியை அறிமுகப்படுத்தினார்.
- 1866-ஆம் ஆண்டு, கவர்னர் ஜெனரல் டஃப்ரின், வருமான வரிச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதுதான் முறைப்படியான முதல் வரிச் சட்டம். இதில், லைசன்ஸ் வரி, வருமான வரி என இரண்டுமே இருந்தன.
- 1917-இல் பெரும் செல்வந்தர்களுக்கு என்று தனியாக ‘சூப்பர் டாக்ஸ்' விதிக்கப்பட்டது.
- 1922-இல் ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, ‘முழுமையான' வருமான வரிச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இது தற்போதுள்ள சட்டத்தின் தந்தை எனலாம்.
- 1924-இல் மத்திய வருவாய் வாரியம் அமைக்கப்பட்டது.
- சட்ட ஆணையம், 1922 சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து புதிய சட்டத்தைப் பரிந்துரைத்தது. அதன்படி வருமான வரிச் சட்டம், 1961 இயற்றப்பட்டது. இது 1962-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
- 1963-ஆம் ஆண்டு, மத்திய வருவாய் வாரியத்தில் இருந்து மத்திய நேரடி வரி வாரியம் தனியாக உருவானது.
- 1966-இல் புலனாய்வு இயக்ககம் (Directorate of Investigation) உருவானது.
- 1994-இல் நிரந்தரக் கணக்கு எண் (PAN) அறிமுகமானது.
வருமானவரி குறித்த தகவல்கள்
- 1860-இல் வருவமான வரி அறிமுகமான முதல் ஆண்டில், அரசுக்கு 30 லட்சம் ரூபாய் வரியாக கிடைத்தது.
- இந்தியா சுதந்திரம் பெறும்போது 1945-46-ஆம் ஆண்டுக்கான வருமான வரியாக 57 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்தது.
- 1970-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 1,000 கோடி ரூபாயும், 2000-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயும் வருமான வரியாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.
- வருமான வரி செலுத்துவதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் - மகாராஷ்டிரா
- தமிழ்நாடு 4-வது இடத்தில உள்ளது
- தற்போது புதிய வரி விதிப்பு நடைமுறையில் தனிநபரின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது.

- 15-வது மத்திய நிதி ஆணையம் மூலம், தமிழகத்தின் ஊரகப் பகுதிகளுக்கு ரூ.836.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இந்த நிதி, கிராம ஊராட்சிகள், ஒன்றியங்களுக்கு பகிா்ந்து அளிக்கப்படவுள்ளன.
- இந்த நிதியை கையாண்டு அதை சம்பந்தப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கும் பொறுப்பு ஊரக வளா்ச்சித் துறை இயக்குநரிடம் அளிக்கப்படுகிறது.
15-வது மத்திய நிதி ஆணையம் -குறிப்புகள்
- தலைவர் - என்.கே. சிங்
- காலம் - 2021-22 முதல் 2025-26ஆம் ஆண்டு வரை 5 நிதியாண்டுகள்
- நிதி ஆணையத்தை, அரசியல் சாசன சட்டத்தின் 280வது பிரிவுப்படி குடியரசுத் தலைவர் நியமிப்பார்
⚪ விளையாட்டு செய்திகள் :-

- கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கிய வீரா், வீராங்கனைகள் சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கௌரவமிக்க ICC “HALL OF FAME”- இல் சோ்க்கப்படுவது வழக்கம்.
- அதன்படி,முன்னாள் இந்திய மகளிா் அணியின் கேப்டன் டயானா எடுல்ஜி, வீரேந்திர சேவாக், இலங்கையின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா உள்ளிட்டோா் ICC “HALL OF FAME”- இல் சோ்க்கப்பட்டுள்ளனா்.
- இதன் மூலம் டயானா எடுல்ஜி, ICC “HALL OF FAME”- இல் சோ்க்கப்பட்டுள்ள முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.
- தற்போது இவர்களுடன் இந்த பட்டியலில் 112 பேர் இடம் பிடித்துள்ளனர்.
- இந்தியாவின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பெடி, கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வினோ மன்கட் ஆகியோர் இதற்கு முன்பு இந்தப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
⚫ இறப்பு :-

- இந்தியாவிலேயே 3வது மிகப்பெரிய நடத்திர ஓட்டல் நிறுவமான ஓபராய் ஓட்டல் மற்றும் ரெஸார்ட் நிறுவனத்தின் தலைவராக இருந்த பிரித்விராஜ் சிங் ஓபராய் வயது மூப்பின் காரணமாக இன்று(நவம்பர் 14) உயிரிழந்தார்.
- இவரை கவுரவிக்கும் விதமாக இந்திய அரசு கடந்த 2008-ஆம் ஆண்டு, நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் வழங்கி உள்ளது.
🟣 முக்கிய நாட்கள் :-

- சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதி தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
- இந்த தினமானது குழந்தைகளின் உரிமைகள், நலன் மற்றும் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
- சர்வதேச குழந்தைகள் தினம் 1956-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 20-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது.

- நீரிழிவால் அதிகரித்து வரும் அபாயங்களைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி உலக நீரிழிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- உலக நீரிழிவு கூட்டமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து 1991-ஆம் ஆண்டு இந்த தினத்தை உருவாக்கின.
- நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படும், இன்சுலினை கண்டுபிடித்த ‘பிரடெரிக் பேண்டிங்’ என்ற விஞ்ஞானியின் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதி “உலக நீரிழிவு நோய்” தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- உலகிலே அதிக நீரழிவு நோயாளிகள் உள்ள நாடு சீனா ஆகும். இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது.

- உலக கருணை தினம்(World Kindness day) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- இத்தினம் 1998-ஆம் ஆண்டு கருணை இயக்கம் சார்பில் தொடங்கப்பட்டது.
- இந்த இயக்கம் 1997-ஆம் ஆண்டு டோக்கியோவில் அமைக்கப்பட்டது. இந்த இயக்கமானது மதம், அரசியல் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு விளங்குகிறது.

- இந்தியாவில் பொது சேவை ஒலிபரப்பு தினம் ஒவ்வொவொரு ஆண்டும் நவம்பர் 12 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- 1947-ஆம் ஆண்டு நவம்பர் 12-இல் காந்தியடிகள், அமைதி காக்க வேண்டும் எனக் குருஷேத்திரத்தில் கூடியிருந்த பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்த அகதிகளிடம் உரை நிகழ்த்துவதற்கு டெல்லி வானொலி நிலையத்திற்கு வருகை புரிந்தார். இந்நாளை நினைவுக்கூறும் விதமாக ஒவ்வொவொரு ஆண்டும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- பொது சேவை ஒலிபரப்பு தினம் 2001-ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

- சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி மந்திரியான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை(நவம்பர் 11) நினைவுகூரும் விதமாக தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.
- 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினத்தை தேசிய கல்வி தினமாக அறிவித்தது.
இந்தியாவில் கல்விக்கு மௌலானா அபுல் கலாமின் பங்களிப்பு
- உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகாரில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் நிறுவனர் உறுப்பினர்களில் ஒருவரான அவர், 1934 இல் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை அலிகாரிலிருந்து புது டெல்லிக்கு மாற்ற உதவினார்.
- தரமான கல்வியின் ஆற்றலில் உறுதியான நம்பிக்கை கொண்ட மௌலானா அபுல் கலாம் டிசம்பர் 28, 1953 இல் பல்கலைக்கழக மானியக் குழுவை (UGC) நிறுவ உதவினார்.
- கல்வி அமைச்சராக, இந்திய தொழில்நுட்பக் கழகங்களை (IIT) நிறுவிய பெருமைக்குரியவர்.
- IIT வரிசையில் IISC உயர்கல்வி நிறுவனத்தையும் உருவாக்கினார். கூடவே கட்டிடக்கலை மற்றும் பிளானிங் ஸ்கூல் உள்ளிட்டவற்றையும் நிறுவச் செய்தார்.
- கல்வி மட்டுமன்றி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக 1953-இல் சங்கீத நாடக அகாடமி, 1954-இல் சாகித்ய அகாடமி மற்றும் 1954-இல் லலித் கலா அகாடமி ஆகியவற்றை நிறுவச் செய்தார்
Tags:
Current Affairs