போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் |
IMPORTANT CURRENT AFFAIRS - 15-11-2023
🔘 தேசியம் :-

- இந்தியாவின் 100 நகரங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் மத்திய அரசால் கடந்த 2015-இல் கொண்டுவரப்பட்டது.
- 2016 ஜனவரி முதல் 2018-ஆம் ஆண்டு ஜூன் வரை பல்வேறு சுற்று போட்டியின் மூலம் 100 நகரங்கள் இத்திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டன.
- இந்த நகரங்கள் தங்களின் அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் 5 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். எனினும், கடந்த மே மாதம், இந்த நகரங்கள் தங்கள் திட்டப் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடுவை 2024 ஜூன் வரை மத்திய அரசு நீட்டித்தது.
- இந்நிலையில் திட்டங்கள் நிறைவு, நிதிப் பயன்பாடு மற்றும் பிற அளவுகோல்கள் அடிப்படையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ நகரங்களின் தரவரிசை வெளியாகியுள்ளது.
‘ஸ்மார்ட் சிட்டி’ நகரங்களின் தரவரிசை
- சூரத்(குஜராத்)
- ஆக்ரா (உத்தர பிரதேசம்)
- அகமதாபாத் (குஜராத்)
- வாரணாசி (உத்தர பிரதேசம்)
- போபால் (மத்திய பிரதேசம்)
- துமக்குரு (கர்நாடகா)
- உதய்பூர் (ராஜஸ்தான்)
- மதுரை (தமிழ்நாடு)
- கோட்டா (ராஜஸ்தான்)
- சிவமோகா (கர்நாடகா)

- பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 8 கோடிக்கும் மேலான விவசாயிகள் பயன்பெறும் வகையில் 15-ஆவது தவணைத் தொகையான ரூ.18,000 கோடியை பிரதமா் நரேந்திர மோடி இன்று(நவம்பர் 15) விடுவித்தார்
முக்கிய குறிப்புகள்
- விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் ‘பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம்’(Pradhan Mantri Kisan Samman Nidhi), பிரதமா் நரேந்திர மோடியால் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
- கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த, விவசாயிகளின் கடனைக் குறைக்க மற்றும் விவசாய முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
- இத்திட்டத்தில் ஆண்டுக்கு 3 தவணைகளில் தலா ரூ.2,000 என மொத்தம் ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.
- இத்திட்டத்தில் இதுவரை 14 தவணைகள் மூலம் தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ரூ.2.59 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
🔴 தமிழ் நாடு :-

- கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசால் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
முக்கிய பரிந்துரைகள்
- சமூகப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் கூா்நோக்கு இல்லங்களை, குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான தனி இயக்குநரகம் அமைத்து அதன் கீழ் செயல்படுத்த வேண்டும்.
- ஒரு இயக்குநரின் தலைமையில் அதற்கு ‘சிறப்பு சேவைகள் துறை’ என பெயரிடப்பட வேண்டும். அவா் குழந்தை நலனுக்காக அா்ப்பணிப்புடன் செயல்படுபவராக இருக்க வேண்டும். அவரது சாதாரண பதவிக்காலம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இருக்க வேண்டும்.
- மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் ஓர் இல்லமாவது இருக்க வேண்டும்.
- இல்லங்களை தினமும் கண்காணிக்க வேண்டும்.
- அனைத்து கூர்நோக்கு இல்லங்களிலும் முழுநேர மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும்.
- இல்லங்கள் சிறைபோல இருக்க கூடாது. அவற்றின் அமைப்பு மாற்றப்பட்டு புதிய கட்டிடவியல் தன்மையுடன் அமைக்க வேண்டும்.
- இல்லங்களில் சிறுவர்கள் 24 மணிநேரமும் அடைத்து வைக்கப்பட கூடாது.
- சிறுவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க வேண்டும்.
- தூங்குவதற்கு மெத்தை, தலையணையுடன் கட்டில் வழங்க வேண்டும். நவீன கழிப்பறைகள், துணி துவைக்க இயந்திரம், கொசு விரட்டி உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும்.
- 13-16 வயதினரை ஒரு குழுவாக, அதற்கு மேல் உள்ளவர்களை ஒரு குழுவாக அடைக்க வேண்டும்.
- இல்லங்களில் உள்ள மாஸ்டர்கள் தகுதியான ஆசிரியர்களாக இருக்க வேண்டும்.
- இல்லங்களில் கண்காணிப்பாளர்கள் தவிர, உதவி கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு, அவர்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டும். சமையலர்கள், துப்புரவு பணியாளர்களை காலநிலை ஊதியத்தில் நிரந்தரமாக நியமிக்க வேண்டும்.

- மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் (DME) இயக்குநராக இருந்த ஆர்.சாந்தி மலர் கடந்த அக்டோபர் 31-இல் ஓய்வு பெற்றார். இதையடுத்து மருத்துவர் சாந்தாராம் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.
- இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த மருத்துவர் ஜெ.சங்குமணியை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக நியமித்து சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அரசாணை வெளியிட்டுள்ளார்.
- சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள சங்குமணி, இதற்கு முன்பு மதுரை, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளின் முதல்வராக பதவி வகித்தவராவாா்
⚪ விளையாட்டு செய்திகள் :-

- தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சங்கம் (TNBSA) சார்பில் 90-வது தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் நவம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 1500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
- 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசிய பில்லியர்ட்ஸ் போட்டி தமிழகத்தில் நடைபெறுகிறது.
⚫ இறப்பு :-

- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் இன்று(நவம்பர் 15) காலமானார்.
என்.சங்கரய்யா - வாழ்க்கை குறிப்புகள்
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1921-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி பிறந்தார்
- 1937-இல் பள்ளிக் கல்வி முடிந்த பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வரலாறு பாடத்தில் சேர்ந்தார். அங்கு பரிமேலழகர் தமிழ்க் கழகத்தின் இணைச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மன்றத்துக்கு ராஜாஜி, சத்தியமூர்த்தி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட பல தலைவர்களை அழைத்துவந்து பேச வைத்தார்.
- 1938-இல் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் ‘சென்னை மாணவர் சங்கம்’ என அமைத்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல மதுரையிலும் மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டு, அதன் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- நேதாஜி 1939-இல் மதுரை வந்தபோது மாணவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் நேதாஜியை உரையாட வைத்தார்.
- மதுரை அமெரிக்கன்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, இந்திய விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்
- சிறையில் காமராஜர், ப.ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்தார். விடுதலையாகி வெளியே வந்த பிறகு, பொதுவாழ்க்கைக்குத் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டார்.
- தொழிலாளர் நலனுக்காக ஏராளமான பொதுக்கூட்டங்கள், மாநாடுகளை நடத்தியதோடு களப்பணிகளிலும் துடிப்புடன் ஈடுபட்டார். பல்வேறு இதழ்களில் தனது கருத்துகளைக் கட்டுரைகளாக எழுதிவந்தார்.
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்படுவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியவர். ‘ஜனசக்தி’ இதழில் 3 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
- 1964-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டாக பிரிந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக சங்கரய்யா இருந்தார்
- 1967, 1977, 1980 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மொத்தம் 11 ஆண்டுகள் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார்.
- 1982- ஆம் ஆண்டு முதல் 1991 வரை சங்கரய்யா விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார்.
- 1995-ஆம் ஆண்டு கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போதிலிருந்து 2002-ஆம் ஆண்டு வரை சங்கரய்யா தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார்.
- தன் வாழ்நாள் முழுவதுமே மக்கள் விடுதலைக்காக அர்ப்பணித்த சங்கரய்யாவுக்கு 2021-ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்கி கௌரவித்தார்.
🟣 முக்கிய நாட்கள் :-

- வனவாசி சமூகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாள்(நவம்பர் 15) வனவாசி பெருமித தினமாக(Janjatiya Gaurav Divas) கொண்டாடப்படுகிறது.
பிர்சா முண்டா-குறிப்புகள்
- பழங்குடி மக்களால் 'மண்ணின் தந்தை' என்று அழைக்கப்பட்ட பிர்சா முண்டா,1875 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாளில் பீகார் மாநிலத்தில் உலிஹதி என்ற கிராமத்தில் பிறந்தார்
- இந்தியாவை ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் அரசாங்கம் "காடுகளின் ஒவ்வொரு சதுர அடியும் பிரிட்டிஷ் அரசுக்கே சொந்தம்" எனும் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
- இதை எதிர்த்து பிர்சா முண்டா "நீர் நமது! நிலம் நமது! வனம் நமது" எனும் கோஷத்தை எழுப்பி பழங்குடி மக்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தினார்.
- 1895-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது பிர்சா முண்டாவின் வயது 19 மட்டுமே.
- பண்ணையார்கள் மற்றும் ஜமீன்தார்கள் உதவியுடன் பிரிட்டிஷ் அரசாங்கம் பழங்குடிகளின் நிலங்களைப் பறித்தபோது "ஒரு குரலை விட, ஒட்டு மொத்த மக்களின் குரலே அதிகாரத்தை அசைக்கும்" என முழங்கி, பழங்குடி மக்களை ஒன்று திரட்டிப் போராடினார்.
- 1899-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையை எதிர்த்து, கொரில்லா போர் முறையில் மறைந்திருந்து தாக்கும் தந்திரத்தைப் பயன்படுத்தி வில், அம்புகளை மட்டுமே கொண்டு எதிரிகளை வீழ்த்தினார் பிர்சா முண்டா. இந்தப் போராட்டத்துக்கு ‘உல்குலான்’(Ulgulan) என்று பெயர்.
- பிரிட்டிஷ் படையை எதிர்த்துப் போராடிய குற்றத்துக்காக பிர்சா முண்டா சிறைபடுத்தப்பட்டு 1900-ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதியன்று காலரா நோயால் அவர் இறந்ததாக அறிவித்தனர். அப்போது அவருக்கு வயது வெறும் 25 மட்டும்தான்.
- பிர்சா முண்டா இறந்து சரியாக எட்டு ஆண்டுகள் கழித்து சோட்டாநாக்பூர் சட்டம் (Chotanagpur Tenancy Act 1908) கொண்டுவரப்பட்டது. ஆதிவாசிகளின் நிலத்தை வேறு யாரும் பயன்படுத்த முடியாது என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்தது.
🔵 இராணுவம் :-

- இக்லா-எஸ்(Igla-S) விமான எதிர்ப்பு ஏவுகணை சாதனங்கள் வினி யோகம் மற்றும் உற்பத்தி தொடர்பாக இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- இந்த ஏவுகணை சாதனத்தை இந்தியாவுக்கு வழங்குவதுடன் அதனை இந்தியாவில் தயாரிப்பதற்கான உரிமத்தை ரஷ்யா வழங்க உள்ளது.
முக்கிய குறிப்புகள்
- இக்லா- எஸ் என்பது வீரர்களால் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஏவுகணை செலுத்தும் சாதனம் ஆகும்.
- இதனை பயன்படுத்தி தனிப்பட்ட வீரர் ஒருவரே 5-6 கி.மீ. தொலைவில் உள்ள எதிரி நாட்டு விமானம் அல்லது ஹெலிகாப்டரை ஏவுகணையால் சுட்டு வீழ்த்த முடியும்.
- இந்த ஏவுகணைகள் ஏற்கெனவே முப்படைகளிலும் பயன்பாட்டில் உள்ளது.
Tags:
Current Affairs