போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 11-08-2023
தேசியம் :-

- இந்திரா காந்தி ஸ்மார்ட்போன் திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு ஸ்மார்ட் போன்களை இன்று (ஆகஸ்ட் 10) அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் வழங்கினார்.
- ‘அறிவே ஆற்றல்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து இந்த திட்டம் ராஜஸ்தான் மாநில அரசினால் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்தில் முதல் கட்டமாக விதவைகள், பென்சன் பெறும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளது.
- பெண்கள் அவர்களுக்கு பிடித்தமான ஸ்மார்ட்போன்களை தேர்ந்தெடுக்கலாம். அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக ரூ.6,800 பணம் மாநில அரசினால் செலுத்தப்படும்.
- இந்தத் திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 40 லட்சம் பேர் பயனடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மக்களவையில் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீா்மானம் வியாழக்கிழமை(ஆகஸ்ட் 10) தோல்வியடைந்தது.
- ஆகஸ்ட் 8 முதல் மக்களவையில் இதன் மீது விவாதம் நடைபெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 10 மாலை பிரதமா் மோடி 2 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட விளக்கமளித்துப் பேசினாா்.
- அவரது பேச்சுக்கு நடுவே எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதையடுத்து, வாக்கெடுப்பில் பங்கேற்க எதிா்க்கட்சிகள் இல்லாததால், குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
- சுதந்திர இந்திய வரலாற்றில் இது 28-வது நம்பிக்கையில்லா தீர்மானமாகும்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் - விதிமுறைகள்
- அரசியலமைப்பு சட்டப்பிரிவு 75,‘மக்களவையில், மத்திய அமைச்சரவைக்கு கூட்டுப் பொறுப்பு இருக்கிறது(Collective Responsibility)’ என்று சொல்கிறதே தவிர, நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து அதில் ஏதும் இல்லை.
- அரசியலமைப்பு சட்டப்பிரிவு 118, நாடாளுமன்றத்தின் அவைகள் தங்களது நடவடிக்கைகளுக்குத் தேவையான விதிகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்று அனுமதிக்கிறது.
- அதன்படி மக்களவையின் விதி 198(Rule 198), நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான நடைமுறைகளை விவரிக்கிறது.
- எந்த ஒரு மக்களவை உறுப்பினரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கலாம். ஆனால், அவருக்கு ஆதரவாக 50 மக்களவை உறுப்பினர்களின் கையெழுத்து இருக்க வேண்டும்.
- மாநிலங்களவை உறுப்பினர்கள் அரசு மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்தைக் கொண்டுவரவோ, அது தொடர்பான வாக்கெடுப்பில் பங்கேற்கவோ முடியாது.
- நாடாளுமன்ற மக்கள் அவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வரும்போது, அதற்கான காரணத்தை உறுப்பினர் கூற வேண்டும் என்று அவசியம் இல்லை.
- 50 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தரும் பட்சத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான விவாதத்திற்கு தேதி அறிவிக்கப்படும். ஆதரவு கிடைத்த 10 நாட்களுக்குள் விவாதம் நடைபெற வேண்டும்.
- மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மை நிரூபிக்கபடவில்லை என்றால் உடனே ஆட்சி கலைக்கப்படும்.
சர்வதேசம் :-

- சோயஸ் 2.1வி (Soyuz 2.1v) ராக்கெட் மூலம் லூனா-25 விண்கலம் மாஸ்கோவின் கிழக்கே 5,550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து இன்று (ஆகஸ்ட் 11) ரஷ்ய நேரப்படி அதிகாலை 2.10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
- 1976-க்குப் பின்னர் நிலவை நோக்கி ரஷ்யா லூனா-25 என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.
- இந்த விண்கலம் இந்தியாவின் இஸ்ரோ அண்மையில் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் முன்னரே ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சந்திரயான் - 3 விண்கலம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு :-

- ஏ.கே.ராஜன் குழு(2021)- நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு.
- நீதிபதி கலையரசன் குழு(2020) - இக்குழுவின் அளித்த பரிந்துரையின் பெயரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் 7.5% ஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்தது. இது தொடர்பான சட்டத்தையும் இயற்றியது.
- நீதிபதி முருகேசன் குழு(2021)- இக்குழுவின் அளித்த பரிந்துரையின் பெயரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல், வேளாண்மை, சட்டம், கால்நடை, மீன்வளம் போன்ற தொழில்முறை படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு புதிய கல்வி கொள்கைக்கான குழு(2022)- தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
- ந.சுந்தரத்தேவன் குழு(2021)- குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கான குழு.
- சமூக நீதிக் கண்காணிப்புக் குழு(2021)- இக்குழுவானது, சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, அவை முழுமையாக பின்பற்றப்படாவிட்டால், உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அரசுக்கு அவ்வப்போது தமது பரிந்துரைகளை வழங்கும். இக்குழுவின் தலைவராக சுப.வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு திட்டக்குழு: மாநில வளர்ச்சிக் கொள்கை குழு மீண்டும் மாநில திட்டக்குழுவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த 1971ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. திட்டக்குழுவின் துணைத்தலைவர்- ஜெயரஞ்சன்.
- முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு(2021)- தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஐந்து பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவை உருவாக்கியுள்ளது தமிழக அரசு. இந்தக் குழுவில் ரகுராம் ராஜன், நோபல் பரிசுப் பெற்ற எஸ்தர் டஃப்லோ, ஷான் த்ரே, அரவிந்த் சுப்பிரமணியன், எஸ். நாராயணன் ஆகியோர் உறுப்பினராக உள்ளனர் .
- காவலர் - பொதுமக்கள் நல்லுறவு மேம்படவும், காவலர் நலன் காத்திடவும் நான்காவது காவல்துறை ஆணையம்(2022)- நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
- நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன்(2017)- முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்கு.
- நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன்- 2018-இல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிப்பதற்கு
- சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவின் தலைவர் - ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ்
- ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் ஆணையம்(2023)- புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு

- சென்னையில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7, 8-ஆம் தேதிகளில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல லட்சம் கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று மாநாட்டுக்கான இலச்சினை வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
- மேலும்,இந்தமாநாட்டின் மூலம், பல லட்சம் கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்படும். மாநிலத்தின் இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கும்.நமது மாநிலத்தின் பொருளாதாரமும் பெருமளவு வளர்ச்சியடையும் என கூறினார்.
முக்கிய குறிப்பு
- தொழில் நிறுவனங்களுக்கான நிலங்கள் கையிருப்பு அடிப்படையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

- தமிழக சிறைத்துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக சிறைத்துறை இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனுடன் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் பங்க், சென்னை புழலில் முதல் முறையாக திறந்தது.
- இதைத் தொடா்ந்து வேலூா், கோயம்புத்தூா், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை சிறுவா் சீா்திருத்தப்பள்ளி ஆகிய 4 இடங்களில் சிறைத்துறை சாா்பில் பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டன. இந்த பங்குகளை தற்போது ஆண் கைதிகள் இயக்கி வருகின்றனா்.
- சிறையில் நல்ல நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகள் தோ்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்ட பின்னா், பெட்ரோல் பங்குகளில் பணியமா்த்தப்படுகின்றனா்.
- ஒவ்வொரு பெட்ரோல் பங்க் மூலம் சுமாா் 25 கைதிகள் வேலை வாய்ப்பு பெற்று வருகிறாா்கள். பெட்ரோல் பங்க் மூலம் சிறைத் துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதோடு, கைதிகளும் சம்பாதித்து வருகின்றனா்.
- கைதிகள் பெட்ரோல் பங்குகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதினால் புழல் அம்பத்தூா் சாலை,கோயம்புத்தூா் பாரதியாா் சாலை,திருச்சிராப்பள்ளி காந்தி மாா்க்கெட் பகுதி,திருச்சிராப்பள்ளி விமான நிலைய சாலை,மதுரை,சேலம் ஆகிய 6 இடங்களில் புதிதாக பெட்ரோல் பங்குகள் திறக்க முடிவு செய்யப்பட்டது.
- இதில் இந்தியாவிலேயே முதல் முறையாக புழல் அம்பத்தூா் சாலையில் பெண் கைதிகளே நடத்தும் பெட்ரோல் பங்குகளைத் திறக்க திட்டமிடப்பட்டது.
- இதற்காக புழல் அம்பத்தூா் சாலையில் பெண்கள் தனிச்சிறை அருகே ரூ.1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டா் பரப்பளவில் மற்றொரு பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு ஆகஸ்ட் 10 அன்று திறக்கப்பட்டது.
முக்கிய குறிப்பு
- ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை என்ற தகுதியுடன் 2006-ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட சிறைச்சாலைதான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மத்திய புழல் சிறைச்சாலை.
- இங்கு ஒரே நேரத்தில் 3,000 கைதிகளை அடைக்கும் வசதியும் உள்ளது.

- கோத்ரெஜ் குழுமத்தின் ஒரு அங்கமான கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், இந்தியாவில் 33 இடங்களில் தனது உற்பத்தி அலகுகளை நிறுவியுள்ளது.
- தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகரில் ஒரு உற்பத்தி மையத்தை நிறுவியுள்ள இந்நிறுவனம், மேம்பட்ட உற்பத்தி மையத்தின் ஒரு சிறப்புமிக்க நிறுவனம் என்பதை இலக்காகக் கொண்டு ஒரு புதிய அதிநவீன உற்பத்தி ஆலையை நிறுவத் திட்டமிட்டுள்ளது.
- அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், ரூ.515 கோடி முதலீடு மற்றும் 446 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சோப்புகள், முக அழகு க்ரீம்கள், தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் மற்றும் கொசு ஒழிப்பான் போன்றவற்றுக்கு ஒரு உற்பத்தி மையத்தை நிறுவ உள்ளது.
- இந்தத் திட்டத்தில், 50 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் மேலும்,திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- இத்திட்டத்தை நிறுவ, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு மற்றும் கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் இடையே நேற்று(ஆகஸ்ட் 10) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
முக்கிய குறிப்புகள்
- இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
- தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
Tags:
Current Affairs