போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 23-08-2023
தேசியம் :-

- தோ்தலில் மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க இந்திய தோ்தல் ஆணையத்தின் தேசிய தூதராக சச்சின் டெண்டுல்கா் நியமிக்கப்பட உள்ளாா்.
- இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கும் சச்சினுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பமாகவுள்ளது. இதையடுத்து, வரும் 3 ஆண்டுகளுக்கு வாக்காளா்களிடம் தோ்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் சச்சின் டெண்டுல்கா் ஈடுபட உள்ளாா்.
- மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. மேலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேர்தல் ஆணையம்- முக்கிய குறிப்புகள்
- தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - ஜனவரி 25, 1950
- தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் - ராஜிவ் குமார்
சர்வதேசம் :-

- BRICS கூட்டமைப்பின் 15-வது மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பா்க் நகரில் ஆகஸ்ட் 22 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
- கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு நடைபெறும் முதல் நேரடி மாநாடு இதுவாகும்.
- இந்த மாநாட்டில், இயற்கை சீற்றம், உலக பொருளாதாரம் மற்றும் உணவு பஞ்சம் தீர்ப்பதில் முக்கிய முடிவுகள் விவாதிக்கப்படுகிறது.
- இந்த மாநாட்டில் பிரதமர் மோடியுடன், 'பிரிக்ஸ்' அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பிரேசில் நாட்டின் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, சீன அதிபர் ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் பிரதமர் மோடி உரையின் முக்கிய குறிப்புகள்
- உலகப் பொருளாதார சூழ்நிலையில் கொத்திப்பான நிலை இருந்தாலும், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது.
- விரைவில், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்.
- GST-யை கொண்டுவந்ததன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளோம்.
- தொழில்நுட்பத்தின் உதவியுடன், நிதி உள்ளடக்கிய துறையில் இந்தியா முன்னேறியுள்ளது.
- ஒரே கிளிக்கில், இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நேரடி பரிமாற்ற பலன் மூலம் பயனடைகின்றனர்.
- UPI தொழில்நுட்பம் இன்று தெருவோர வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகிறது. இது மொத்தம் 360 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும்.
- உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு இந்தியாவில் உள்ளது.
BRICS - முக்கிய குறிப்புகள்
- 2001-ஆம் ஆண்டு, கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியின் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ'நீல், பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பெயர்களை உள்ளடக்கிய BRIC என்ற சுருக்கத்தை உருவாக்கினார்.
- இந்த நாடுகள் வரும் 2050-ஆம் ஆண்டு உலகிலேயே அதிக பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடுகளாக மாறும் என்று அவர் கணித்தார்.
- இதன் தொடர்ச்சியாக, 2006-ஆம் ஆண்டு இந்த நான்கு நாடுகளும் இணைந்து 'BRIC' நாடுகள் என்ற கூட்டமைப்பை உருவாக்கின.
- அதில் 2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவும் இணைந்து 'BRICS' கூட்டமைப்பு என்ற பெயரை இந்த அமைப்பு பெற்றது.
- சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களை சீரமைக்கும் நோக்குடன் ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
- New Development Bank என்ற பெயரில் 250 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் BRICS கூட்டமைப்பு சார்பில் ஒரு வங்கி 2014-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, BRICS நாடுகளின் அவசரத் தேவைக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.
- BRICS நாடுகள் ஒன்றிணைந்து, 324 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. அவர்களுடைய ஒட்டுமொத்த தேசிய வருவாய் 26 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது உலக பொருளாதாரத்தில் 26 சதவிகிதம் ஆகும்.
- BRICS தலைமையகம் அமைந்துள்ள இடம் - ஷாங்காய், சீனா
தமிழ்நாடு :-

- தமிழ்நாட்டில் அரசுத் துறைகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்யும் முகமையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) செயல்பட்டு வருகிறது.
- இந்த ஆணையத்திற்கு ஒரு தலைவரும் 14 உறுப்பினர்களும் இருக்கலாம்.
- தேர்வாணையத்தின் தலைவராக 2020-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன், 2022-ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
- இதையடுத்து புதிய தலைவர் நியமிக்கப்படாமல், TNPSC-யின் உறுப்பினராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.முனியநாதன், தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
- இவர் தவிர, தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக பேராசிரியர் கே. ஜோதி சிவஞானம், டாக்டர் கே. அருள்மதி, எம். ஆரோக்கியராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
- TNPSC-யின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 316 அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.
- பிரிவு 316-இன்படி, மாநில தேர்வாணயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமிப்பார்.
- ஒவ்வொரு தேர்வாணயமும் எத்தனை உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் என்பதும், அவர்களது தகுதி என்ன என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
- பொதுவாக, இந்தப் பதவிகளில் நியமிக்கப்படுபவர்கள் அரசுப் பதவிகளில் குறைந்தது பத்தாண்டு அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். நிர்வாக அனுபவம் கொண்டவர்கள் ஆணையத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விதி பின்பற்றப்படுகிறது.
- மாநில தேர்வாணையத்தின் தலைவராகவோ உறுப்பினராகவோ நியமிக்கப்படும் ஒருவர் ஆறு ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடிக்கலாம். ஆனால், அதிகபட்ச வயது 62-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஒருவர் அந்தப் பதவிக்காலம் முடிந்த பிறகு, மீண்டும் மறுநியமனம் பெற முடியாது.

- வெளிநாடுகளில் பணியாற்றி வரும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள், எதிர்பாராதவிதமாக பணியின் போது உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தைக் காக்கும் பொருட்டு உதவித்தொகை வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
- அதன்படி, குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக 12 ஆயிரம் ரூபாயும், திருமண உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
- இந்த உதவித் தொகையைப் பெற அயலகத் தமிழர் நலவாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டியது கட்டாயம்.
- மேலும், திருமண உதவித் தொகை பெற மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும்.
- மேலும், மணமக்கள் 10- ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்றும், பழங்குடியினராக இருந்தால் 5-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
- கல்வி உதவித் தொகை பெற 11-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு சேர்க்கை பெற்ற மாணவர்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ITI சேர்க்கை பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இந்த இரு திட்டங்களிலுமே ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.

- தூய்மைப் பணியின் போது கழிவுநீர் தொட்டிகளில் ஏற்படும் அடைப்பை நீக்கும் பணியின்போது உயிரிழப்போர் எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகமே முதலிடம் வகிக்கிறது. (தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் - ம.வெங்கடேசன்)
- ஜப்பான் நாட்டின் மிட்சுபிஷி நிறுவனம் ரூ.1,891 கோடி முதலீட்டில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அமைக்க உள்ள குளிர்சாதன இயந்திரங்கள்(A.C), காற்றழுத்த கருவிகள்(Compressor) உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- நெல்லையில் 33 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியக கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். (பொருநை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முந்தையது-கி.மு.1155).
- தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும், சர்வதேச அளவிலான வீரர்களை தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கும் முயற்சியில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த அறக்கட்டளையின் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
- நாட்டிலேயே முதல்முறையாக, வேளாண்மை - உழவர் நலத் துறை மூலம் உருவாக்கப்பட்ட ‘தமிழ் மண் வளம்’ எனும் இணைய முகப்பை (http://tnagriculture.in/mannvalam) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- தமிழக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நாட்டிலேயே முதல்முறையாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.54.61 கோடி செலவில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம்(Tamil Nadu Tech Hub) அமைக்கப்பட்டுள்ளது.
- அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்-தமிழக அரசு பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பிரத்யேக சிறப்பு தொழில்முனைவோா் திட்டமாக தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்தவும் திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1.5 கோடி வரை மானியம் வழங்கப்படும்.
- லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கபடவுள்ளது.இத்திட்டம் 2027-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும்.
- 2050-ஆம் ஆண்டுக்குள் சென்னை மாநகரம் கார்பன் சமன்பாட்டை எட்டும் நோக்கத்துடன் கூடிய சென்னை காலநிலை செயல்திட்ட கையேட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
- 5-வது மாநில உணவு பாதுகாப்பு குறியீடு 2022-2023-ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடம் (கேரளா -முதலிடம்)
- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் சார்பில் 'Eat Right Challenge – Phase II' என்ற போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாவட்டம் – கோவை
- சென்னை கிண்டி, கிங் நிலையவளாகத்தில், ரூ.376 கோடியில் 6.03 லட்சம் சதுரடியில், 1000 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவாக தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 12 கோடி ரூபாய் மதிப்பில், 7,000 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- சிற்பி திட்டம் (Students in Responsible Police Initiatives -SIRPI) - பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட திட்டம். இத்திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சியில் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிறார் குற்றங்களை தடுக்கவும், போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களை தவிர்க்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- பறவைகள் இனங்களை பாதுகாப்பதை மேலும் பலப்படுத்துவதற்காக தமிழக அரசு மாநில பறவை ஆணையத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது.இதன் தலைவராக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் செயல்படுவார். (தமிழகத்தில் 17 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. அவற்றில் 14 ராம்சார் தளமாக இருக்கின்றன).
- சமூக நீதி காவலர், பிற்படுத்தப்பட்ட மக்களின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு மரியாதை செய்யும் விதமாக, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்று வி.பி.சிங் பிறந்தநாளான நேற்று(ஜூன் 25) முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.('மண்டல் கமிஷன்’ பரிந்துரைத்த பிற்படுத்தப்பட்டோர்க்கான 27% இடஒதுக்கீட்டை ஏற்று 1990-இல் அமல்படுத்தியவர் வி.பி. சிங்)
- ‘உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது’ என்ற தலைப்பில் உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரண்டு நாள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தொடங்கி வைத்தார்.
- வண்டலூா் உயிரியல் பூங்காவில் ரூ. 4.36 கோடியில் அருங்காட்சியகம், திரையரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம், வனவிலங்குகளை அதன் வாழ்விடங்களில் பாதுகாப்பது தொடர்பாக இளம் தலைமுறையினர் மனதில் நேர்மறையான மாற்றத்தை கொண்டுவர முடியும்.
- சிவகங்கை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமையான அரிகண்டம் சிலையை தொல்லியலாளா்கள் கண்டெடுத்தனா். தலைவன் அல்லது மன்னன் போரில் வெற்றி பெற வேண்டியோ, நோயிலிருந்து குணமடைய வேண்டியோ காளி தேவியிடம் நோ்ந்து கொண்டு, அது நிறைவேறியதும் தன் தலையைத் தானே அரிந்து உயிா் விடுதல் அரிகண்டமாகும்.
- அரிய வகை தாவர இனங்களைப் பாதுகாக்க செங்கல்பட்டில் 137 ஹெக்டர் பரப்பில், சர்வதேச தரத்திலான தாவரவியல் பூங்கா அமைப்பது தொடர்பாக லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
- மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்திற்கு இனி "விடியல் பயணம்" என்று பெயர் சூட்டப்படும்" என சுதந்திர தின விழா உரையில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கட்டணமில்லாப் பயணத் திட்டம், 2021 ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, அன்றைய தினமே அரசாணை வெளியிடப்பட்டு மறுநாளே (மே 8) நடைமுறைக்கு வந்தது.
- தமிழகத்தில் ரூ.54 ஆயிரம் கோடி மூதலீடு செய்துள்ளதாகவும், தற்போது 1775 பெட்ரோல் நிலையங்களை தமிழகத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு செயல் இயக்குநர் வி.சி.அசோகன் தெரிவித்துள்ளார். இதில் முக்கியமாக நாகப்பட்டினத்தில் உள்ள நரிமணம் பகுதியில் ஒரு ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் போன்றவற்றை உற்பத்தி செய்யும் வகையில் ரூ.35,580 கோடியில் புதிதாக கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
- மதுரையில் ரூ.215 கோடியில் 6 தளங்களுடன் 2.13 லட்சம் சதுர அடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15 அன்று திறந்து வைத்தார்.
- ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 1லட்சம் சதுரஅடி பரப்பளவில் ரூ.44.5கோடி மதிப்பீட்டில் 10 தளங்களுடன் கூடிய புதிய விடுதி கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- தமிழகத்தில் 31,008 பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்து, அதற்கு ரூ.404 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு: செப்டம்பர் 15, 2022(அறிஞர் அண்ணா பிறந்த தினம்)
- பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamil Nadu Mission), தமிழ்நாடு ஈரநில இயக்கம்(Wetlands Mission), தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்(Climate Change Mission) ஆகிய மூன்று முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தும் நோக்கத்துடன், இந்தியாவில் முதன்முதலாக 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தை' (Tamil Nadu Green Climate Company) தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இத்திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள காடுளின் பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 விழுக்காடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் முதல் முறையாக கிராமப்புற மாணவர்களின் திறனை மேம்படுத்த ‘மைக்ரோசாப்ட்’ உடன் தமிழக பள்ளிக் கல்வித் துறை ஒப்பந்தம் செய்துள்ளது.TEALS (Technical Education And Learning Support) எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின்(New India Literacy Programme) கீழ் நடப்பு கல்வியாண்டில் (2023-24) தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட 4.80 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வரும் செப்டம்பர் தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை 6 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
- தமிழக அரசு, முதியோர் உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200-ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,500-ஆகவும், கணவரை இழந்த பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200-ஆகவும் உயர்த்தி உள்ளது.
- உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் (IATR), சென்னை ஆசியவியல் நிறுவனம் இணைந்து நடத்தும் 11-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் ஜூலை 7, 8, 9 ஆகிய தேதியில் நடைபெற்றது(உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை தனி நாயகம் அடிகளார் 1964-இல் தொடங்கினார்).
- 2022-23-ஆம் நிதியாண்டில் இந்திய அளவில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
- வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் திருச்சியில் “வேளாண் சங்கமம்- 2023” கண்காட்சியை ஜூலை 27 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- 2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய செஸ் கூட்டமைப்பின், ‘சிறந்த மனிதருக்கான விருது’ தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதைப் பாராட்டும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது (44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சின்னம் - தம்பி)
- 7-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது இதில், இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது (இந்த தொடருக்கான சின்னம் - ‘பொம்மன்’)
- இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவும் பிரச்சினையில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் முதல் ஆளில்லா விமான(ட்ரோன்களுக்கான) சோதனை மையமானது ஸ்ரீபெரம்புதூர் அருகே உள்ள வல்லம் வடகலில் உள்ள தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (சிப்காட்) தொழில் பூங்காவில் அமைய உள்ளது.
- தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- சுயஉதவி குழுவினரின் தயாரிப்புகளை விற்க, ‘மதி சந்தை’ இணையவழி விற்பனை தளம் விரைவில் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.இந்த சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி முகமது நசிமுதின் நியமிக்கப்பட்டு உள்ளாா்.
2023-இல் தமிழகத்தில் அகழாய்வுகள் நடைபெறும் இடங்கள்
- கீழடி மற்றும் அதன் சுற்றியுள்ள தொல்லியல் தளங்கள் (அகரம், கொந்தகை) - சிவகங்கை மாவட்டம்
- கங்கைகொண்ட சோழபுரம் - அரியலூர் மாவட்டம்
- வெம்பக்கோட்டை - விருதுநகர் மாவட்டம்
- துலுக்கர்பட்டி - திருநெல்வேலி மாவட்டம்
- கீழ்நமண்டி - திருவண்ணாமலை மாவட்டம்
- பொற்பனைக்கோட்டை - புதுக்கோட்டை மாவட்டம்
- பூதிநத்தம் - தருமபுரி மாவட்டம்
- பட்டறைப்பெரும்புதூர் - திருவள்ளூர் மாவட்டம்
2023-இல் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்
- மணப்பாறை முறுக்கு
- மார்த்தாண்டம் தேன்
- மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு
- ஆத்தூர் வெற்றிலை
- கம்பம் பன்னீர் திராட்சை
- சோழவந்தான் வெற்றிலை
- நகமம் காட்டன் சேலை
- மயிலாடி கல் சிற்பம்
- சேலம் ஜவ்வரிசி
- மானாமதுரை மண்பாண்டம்
- ஊட்டி வர்க்கி
- வேலூர் முள்ளு கத்தரி
- ராமநாதபுரம் முண்டு மிளகாய்
- திருவண்ணாமலை ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டி
- வீரவநல்லூர் செடிபுட்டா சேலை(நெல்லை மாவட்டம்)
- கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்
நாட்டிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் - தமிழ்நாடு(58 பொருட்கள்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :-

- ஜூலை 13 - சந்திரயான் - 3 திட்டத்துக்கான 25.30 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கியது
- ஜூலை 14 - LVM -3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் பிற்பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
- ஜூலை 15 - குறைந்தபட்சம் 173 கி.மீ. மற்றும் அதிகபட்சம் 41,762 கி.மீ. தொலைவு கொண்ட புவி வட்டப் பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது.
- ஜூலை 17 - விண்கலம் பயணிக்கும் புவி வட்டப் பாதையின் தொலைவு 41,603 கி.மீ. * 226 கி. மீட்டராக அதிகரிக்கப்பட்டது
- ஜூலை 25 - சந்திரயான்-3 சுற்றுப் பாதை தொலைவு ஐந்தாவது முறையாக அதிகரிப்பு. குறைந்தபட்சம் 236 கி.மீ மற்றும் அதிகபட்சம் 1,27,603 கி.மீ தொலைவுக்கு விண்கலம் அனுப்பப்பட்டது
- ஆகஸ்ட் 1 - புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கிய புதிய பயணத்தைத் தொடங்கியது சந்திரயான் 3.
- ஆகஸ்ட் 5 - மைல்கல் நிகழ்வாக நிலவின் ஈா்ப்பு விசைக்குள் நுழைந்த விண்கலம், குறைந்தபட்சம் 164 கி.மீ. மற்றும் அதிகபட்சம் 18,074 கி.மீ. தொலைவு கொண்ட சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டது
- ஆகஸ்ட் 6 - விண்கலம் பயணிக்கும் சுற்றுப் பாதை தொலைவு 170 கி.மீ * 4,313 கி.மீ-ஆக குறைப்பு.
- ஆகஸ்ட் 9 - சுற்றுப் பாதை தொலைவு 174 கி.மீ. * 1,437 கி.மீ. -ஆக குறைப்பு.
- ஆகஸ்ட் 14 - சந்திரயான்-3 விண்கலம் சுற்றி வரும் நிலவு வட்ட பாதைத் தொலைவு குறைந்தபட்சம் 150 கி.மீ.-ஆகவும், அதிகபட்சம் 177 கி.மீ-ஆகவும் மேலும் குறைக்கப்பட்டது
- ஆகஸ்ட் 17 - சந்திரயான்-3 திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனில் இருந்து லேண்டா் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது
- ஆகஸ்ட் 20 - நிலவின் மிக நெருக்கமான சுற்றுப் பாதையான 25 கி.மீ. * 134 கி.மீ. தொலைவில் விண்கலம் செலுத்தப்பட்டது
- ஆகஸ்ட் 21 - சந்திரயான்-2 மூலம் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் மற்றும் சந்திரயான்-3 ‘விக்ரம்’ லேண்டா் இடையே தகவல் தொடா்பு வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் : -

- கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராக ஆா்.ஆனந்தகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். முன்னதாக இவர் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலாளராக செயல்பட்டு வந்தார்.
- அதுபோல விக்ரம் கபூா் அண்ணா மேலாண்மை பயிற்சிக் கல்லூரி, பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
முக்கிய நாட்கள்:-

- அடிமை முறை என்பது மனிதர்களை வலுக்கட்டாயமாக பிற மனிதர்கள் பிடித்து வைத்து, அல்லது அவர்களை விலைக்கு வாங்கி அவர்களிடமிருந்து பலாத்காரமாக வேலையை வாங்கும் முறையாகும்.
- இத்தகைய அடிமை வணிக முறையை எதிர்த்து கரீபியன் தீவுகளில் ஒன்றான புனித டாமினிக் பகுதியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் நினைவாக யுனெஸ்கோ அமைப்பால் 1998 முதல் ஆகஸ்டு 23-ஆம் தேதி சர்வதேச அடிமை வணிக ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- குறிப்பாக 1791 ஆகஸ்ட் 22-ஆம் தேதி இரவும் ஆகஸ்ட் 23ம் தேதியும் island of Saint Domingue (தற்போதைய ஹெய்டி நாடு) இல் இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
- அனைத்து மக்களின் நினைவுகளிலும் அடிமை வணிகத்தின் துன்பத்தை எடுத்துரைக்கும் நோக்குடன் இத்தினம் ஏற்படுத்தப்பட்டது.
Tags:
Current Affairs