போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 24-08-2023
தேசியம் :-

- எஸ். சோம்நாத் (இஸ்ரோ தலைவர்):
இந்தியாவின் திட்டமிடப்பட்ட நிலவு பயணத்திற்குப் பின்னால் உள்ள முதன்மையானவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஜனவரி 12, 2022 அன்று இஸ்ரோவின் 10வது தலைவராக நியமிக்கப்பட்டார்.
- பி.வீரமுத்துவேல், சந்திரயான்-3 திட்ட இயக்குநர்:
சென்னையில் எம்.டெக் முடித்த இவர், சந்திரயான்-2 திட்டத்திலும், மங்கள்யான் திட்டத்திலும் பணியாற்றியுள்ளார். 2019-இல் லேண்டர் விக்ரம் திட்டத்தில் இருந்து தோல்வி கண்ட அவர், தற்போது சந்திரயான்-3 திட்டத்தில் வெற்றி கண்டுள்ளார்.
- கே.கல்பனா, சந்திரயான்-3 துணை திட்ட இயக்குநர், யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையம், பெங்களூரு:
சந்திரயான்-3 திட்டத்தின் துணை இயக்குநராக கடுமையாகப் பணியாற்றினார். சந்திரயான்-2, மங்கள்யான் திட்டங்களிலும் இவர் தனது பங்கை அளித்திருந்தார்.
- எஸ் உன்னிகிருஷ்ணன் நாயர்: இயக்குனர், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்:
செயற்கைக்கோளை ஏவும் LVM 3 (Geosynchronous Satellite Launch Vehicle Mk III) திட்டம் இவருடைய தலைமையில் 100 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளது.
- எம். சங்கரன், பெங்களூரு யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குநர்:
செயற்கைக்கோள்களுக்குத் தேவையான மின்சாரத்தை உருவாக்கும் சிஸ்டம்களை தயாரிப்பதில் நிபுணராக உள்ளார். நிலவில் தரையிறங்கிய லேண்டரின் வலிமையை சோதிக்க சந்திரனின் மேற்பரப்பு மாதிரியை உருவாக்கியதில் பெரும்பங்காற்றினார்.
- வி.நாராயணன், திருவனந்தபுரம் Liquid Propulsion system மைய இயக்குநர்:
Liquid Propulsion Engine துறையில் நிபுணரான இவர்
சந்திரயான்-3 விண்கலத்தில் உந்துவிசை அமைப்புகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
- பி.என்.ராமகிருஷ்ணா, பெங்களூரு ISRO Telemetry, Tracking and Command Network (ISTRAC) இயக்குநர்:
சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதற்கு இந்த ISTRAC மையம் அனுப்பிய உத்தரவுகளும், சிக்னல்களுமே காரணம். விக்ரம் லேண்டர் தரையில் இறங்கும் கடைசி 20 நிமிடங்களும் பெங்களூருவில் உள்ள ISTRAC மையத்தில் இருந்து பிறப்பித்த உத்தரவுகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன.
- எம்.வனிதா, பெங்களூரு யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மைய துணை இயக்குநர்:
சந்திரயான்-2 திட்டத்தின் இயக்குநராக எம். வனிதா பணியாற்றிருந்தார். சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றியபோது அவர் பெற்ற அனுபவங்கள், தற்போதைய சந்திரயான்-3 திட்டத்தை மெருகேற்ற உதவின.

- தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, கடந்த மார்ச் 30-ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், அவர் தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், கடந்த ஜூலை 6- ஆம் தேதி ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பொறுப்பு தலைவராக நீதிபதி ஷியோ குமார் சிங் கடந்த ஜூலை 7- ஆம் தேதி முதல் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம்(National Green Tribunal -NGT) பற்றிய குறிப்புகள்
- இந்திய அரசியலமைப்பின் 21வது சட்டப்பிரிவின் கீழ், சுற்றுச்சூழல்தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்க்கவும் உயர்நீதிமன்றங்களில் நடப்பில் இருக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளைக் குறைக்கவும் இந்தியக் குடிமக்களுக்கு நலம்மிகு சுற்றுச்சூழலுக்கான உரிமையை நிலைநாட்டவும் 18.10.2010 அன்று புதுடெல்லியில் அமைக்கப்பட்டது.
- இந்தத் தீர்ப்பாயத்தின் முதன்மை இருக்கை புது தில்லியிலும், கிளை இருக்கைகள் சென்னை, போபால், புனே மற்றும் கொல்கத்தாவிலும் நிறுவப்பட்டுள்ளன.
- தீர்ப்பாயத்தின் தலைவராவதற்கான தகுதி - உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்திருத்தல் வேண்டும்
- தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணிக்காலம் - 5 ஆண்டுகள்
- தலைவர் ஓய்வுபெறும் வயது- உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தால் 70 வயது வரையும், உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்திருந்தால் 67 வயது வரையும் செயல்படமுடியும

- BRICS அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த அமைப்பில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன
- .இந்நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கும் ‘BRICS’ உச்சி மாநாட்டில், அமைப்பினை விரிவாக்கம் செய்வதற்கான கொள்கை ஆதிக்கம் செலுத்தியது.
- இதில் புதிய உறுப்பினர்களை இணைப்பது குறித்த அளவுகோல்களை உருவாக்குவதில் கருத்து வேறுபாடுகள் நிலவியது. ஆனாலும், BRICS அமைப்பினை விரிவாக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், தரநிலைகள், நடைமுறைகள் குறித்து எடுக்கப்பட்ட முடிகளை குழு உறுப்பினர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதாக BRICS அமைப்புக்கு தற்போது தலைமை தாங்கும் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ராமபோசா தெரிவித்தார்.
- மேலும், மாநாட்டில் பேசிய தென் ஆப்பிரிக்க அதிபர், "அர்ஜெண்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமிரகம் ஆகிய நாடுகளை BRICS அமைப்பின் முழுநேர உறுப்பினர்களாக சேர்க்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த முடிவு 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும்" என்று தெரிவித்துள்ளார்.

சந்திரயான் - 1
- ஆகஸ்ட் 15, 2003: அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், சந்திரயான் திட்டத்தை முதன்முதலாக அறிவித்தார்.
- அக்டோபர் 22, 2008: சந்திரயான்-1 திட்டம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
- நவம்பர் 8, 2008: சந்திரயான் -1 விண்கலம் வெற்றிகரமான நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
- நவம்பர் 14,2008: சந்திரயான்-1 விண்கலத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் கூறுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
- ஆகஸ்ட் 28, 2009: சந்திரயான் -1 திட்டம் நிறைவுபெற்றதாக இஸ்ரோ அறிவித்தது.
சந்திரயான் - 2
- ஜூலை 22, 2019: சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு செலுத்தப்பட்டது.
- ஆகஸ்ட் 20, 2019: சந்திரயான் -2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
- செப்டம்பர் 2, 2019: நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 100 கிமீ உயரே விக்ரம் லேண்டர் விடுவிக்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லேண்டர் கலன் நிலவின் தரையில் மோதி உடைந்தது.
சந்திரயான்-3
- சந்திரயான்-3 என்பது சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாகும். இது சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குதல்(லேண்டர்) மற்றும் உலாவுதல்(ரோவர்) கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
- ஏற்கனவே, ஆர்பிட்டர் நிலவை சுற்றிவருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் விண்கலங்கள் மட்டும் அனுப்பப்பட்டது.
- சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட தினம் - ஜூலை 14,2023
- விண்கலம் ஏவப்பட்ட ராக்கெட்டின் பெயர் - Geosynchronous Satellite Launch Vehicle Mark III எனப்படும் LVM 3
- விண்கலத்தின் எடை - 3,895 கிலோ
- லேண்டரின் பெயர் - விக்ரம்
- ரோவரின் பெயர் - பிரக்யான்
- சந்திரயான்-3 திட்டத்தின் மொத்த செலவு - ரூ.615 கோடி
- திட்ட இயக்குனர் - வீர முத்துவேல்
- சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய தினம் – ஆகஸ்ட் 23, 2023
- சந்திரயான்-3 திட்டத்தின் ஆயுள் - 14 நாட்கள்
- நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய நாடுகள் - அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா
திட்டத்தின் நோக்கம்
- நிலவின் தென் துருவத்தில் உறைந்திருக்கும் பனிக்கு அடியில் பல லட்சம் ஆண்டுகளாக பாறைகள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கின்றன. அவற்றை ஆராய்வதன் மூலம், இந்த சூரிய மண்டலமும் பூமியும் எப்படி வடிவம் எடுத்தன என்பதை அறிய முடியும்.
- நிலாவில் வெப்பம் அதிகமாக இருக்கும் மண் பகுதியில் நடக்கும் மாற்றங்களை அறிவது, நிலாவில் உள்ள பொருட்கள் என்ன நிலையில் உள்ளன, அங்குள்ள வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டதா அல்லது அந்த வெப்பத்தில் உடையக்கூடிய பொருட்களாக உள்ளனவா என்பது போன்ற தகவல்களை கண்டறிவது.
- இதேபோல், பூமியைப் போலவே நிலாவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா, இப்போது இல்லையென்றால் முன்பு இருந்தனவா என்பன போன்ற தரவுகள் சேகரிக்கப்படவுள்ளது.
- செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் பல நாடுகள் இறங்கியுள்ளன. பூமியிலிருந்து இதற்கான ராக்கெட்களை அனுப்புவதை விட, நிலவிலிருந்து அனுப்புவது எளிது. நிலவுக்கு வளிமண்டலம் எதுவும் இல்லை. புவிஈர்ப்பு விசையும் மிகக்குறைவு. எனவே, அங்கிருந்து ராக்கெட்களை ஏவுவதற்குக் குறைந்த ஆற்றலே தேவைப்படும். நிலவில் ஓர் ஏவுதளம் அமைத்துவிட்டால், அங்கிருந்து விண்கலங்களை எங்கும் அனுப்பலாம்.

- உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்றது.
- இதன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.
- இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தன. இதைத் தொடர்ந்து இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது.
- இதில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை வெற்று சாதனை படைத்தார்.
- செஸ் உலகக்கோப்பையை வென்ற கார்ல்சனுக்கு ரூ.91 லட்சம், 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு ரூ. 67 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

- உலக தண்ணீர் வாரம் இந்த வருடம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
- உலக தண்ணீர் வாரமானது ஸ்டாக்ஹோம் சர்வதேச தண்ணீர் நிறுவனத்தினால் 1991 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- உலகளாவிய அளவிலான தண்ணீர் நெருக்கடிகளை எதிர்கொள்ளவும் சர்வதேச மேம்பாடு குறித்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவும் வேண்டி இந்த நிகழ்வானது கடைபிடிக்கப்படுகிறது.