போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 02-09-2023
தேசியம் :-

- இந்தியக் குடியாட்சி வரலாற்றில் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முதன்மை இடமுண்டு. இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்காக அரசமைப்பு அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 389 பேரில் 15 பேர் பெண்கள்.
- ராஜகுமாரி அம்ரித் கவுர், சரோஜினி நாயுடு, அம்மு சுவாமிநாதன், தாக்ஷாயணி வேலாயுதன், சுசேதா கிருபாளினி, விஜயலட்சுமி பண்டிட், துர்காபாய் தேஷ்முக், பேகம் ரசூல், ஹம்சா ஜிவ்ராஜ் மேத்தா, கமலா சவுத்ரி, ஆனி மாஸ்கரின், ரேணுகா ராய், பூர்ணிமா பானர்ஜி, லீலா ராய், மாலதி சவுத்ரி ஆகியோர் தங்களது மாகாணங்கள் சார்பாக அரசமைப்பு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- இவர்களில் பலரும் இந்திய விடுதலைக்காகவும் சமூக சீர்திருத்தங்களுக்காகவும் பாடுபட்டனர். அரசமைப்புச் சட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்காகவும் சமத்துவத்துக்காகவும் இவர்கள் பங்களித்தனர்.
- அரசமைப்பு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பெண்களின் பன்முகத்தன்மை முக்கியமானது. அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கும் வகையில் அவர்களது தேர்வு அமைந்திருந்தது. தாக்ஷாயணி வேலாயுதன், அரசமைப்பு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பட்டியலினப் பெண்.அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த இளம் வயது (34) பெண்ணும் இவர்தான்.
- மாகாண அரசமைப்புக் குழுவிலும் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றிந்த ஹன்ஸா ஜிவ்ராஜ் மேத்தா, பரோடாவின் புகழ்பெற்ற திவான் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
- இந்தியா விடுதலை பெற்ற சில நிமிடங்களில் இந்தியப் பெண்களின் சார்பாக இந்திய தேசியக் கொடியை அரசமைப்பு அவையிடம் கொடுத்தவர் இவர். சுதந்திர இந்தியாவில் பறக்கவிடப்பட்ட முதல் கொடி அது.
- அரசமைப்பு அவையில் இடம்பெற்றிந்த பெண்கள், முதல் வரைவு குறித்துத் தங்கள் கருத்துகளைத் துணிச்சலோடு வெளிப்படுத்தினர். அரசமைப்புச் சட்டத்தின் நீளம் குறித்து அம்மு சுவாமிநாதன் விமர்சித்தார்.
- இந்துப் பெண்களின் திருமணம், சொத்துரிமை குறித்து எதிர்வினையாற்றிய ஹன்ஸா, “அனைவருக்கும் சம உரிமை வழங்குவதன் மூலம் ஜனநாயகத்தை உறுதிசெய்யும் நாடாக இது விளங்கும். அந்த அடிப்படையில் இருந்துதான் நாம் அனைத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

- புதுடெல்லியில் செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான (NCERT)-யின் 63-வது நிறுவன தின விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.
- இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், NCERT-க்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து(Deemed University) வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில்(NCERT) பற்றிய குறிப்புகள்
- தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - செப்டம்பர் 1 , 1961
- தலைமையகம் - டெல்லி
- தற்போது NCERT-இன் இயக்குனராக செயல்படுபவர் - தினேஷ் பிரசாத் சக்லானி
- இந்நிறுவனம் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.
- மத்திய பள்ளி கல்விக்கான பிரதான அமைப்பாக செயல்பட்டு வரும் NCERT கல்வி ஆராய்ச்சி, பள்ளி கல்வியில் புதிய கண்டுபிடிப்பிடிப்புகளை ஊக்குவித்தல், பாடத்திட்ட மேம்பாடு, பாட விளக்க உரை தயாரித்தல், கற்றல்-கற்பித்தல் தகவல் கையேடுகள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

- சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் வரும் 13-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று(செப்டம்பர் 1) நடைபெற்றது.
- இதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம், இங் கொக் சொங் மற்றும் டான் கின் லியான் ஆகியோர் போட்டியிட்டனர்.
- சிங்கப்பூர்அதிபர் தேர்தலில் முதல்முறையாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 10 நகரங்களில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
- முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில், தர்மன் சண்முகரத்னம் 70 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இங் கொக் சொங் 16 சதவீத வாக்குகளும், டான் கின் லியான் 14 சதவீத வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம் சிங்கப்பூரின் அடுத்த அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தர்மன் சண்முகரத்னம் பற்றிய குறிப்புகள்
- தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் இவர் இலங்கையை பூர்விகமாகக் கொண்டவர்.
- இவர் கடந்த 2001-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

- உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியா, விரைவில் 3வது இடத்தை அடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- அதே நேரத்தில், நாட்டில் உள்ள 74 சதவீத மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்று உலக வங்கியின் அறிக்கையின் மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
- 2021-ஆம் ஆண்டு திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ள உலக வங்கி, பல்வேறு நகரங்களில் ஆரோக்கியமான உணவுக்கான விலை மிகவும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
- குறிப்பாக, மும்பையில் கடந்த 5 ஆண்டுகளில் உணவுப் பொருட்களின்விலை 65 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஆனால், ஊதியம் 28 முதல் 37 சதவீதம் வரை மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த பட்டியலில், 3 சதவீத மக்களுக்கு மட்டுமே ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்ற தகவலுடன் ரஷ்யா முதல் இடத்தில் இருக்கிறது.

தோற்றம்
- 1845 மே 20 அன்று அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் தேனாம்பேட்டை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்தார்.
- இயற்பெயர்: காத்தவராயன்.
- மெட்ராஸ் பிளாக் டவுன் பகுதியில் வாழ்ந்த பன்மொழிப்புலவர் அயோத்திதாசப் பண்டிதரின் திண்ணைப் பள்ளியில் கல்வி கற்றார். தன் குரு மீது கொண்ட பற்றினால் காத்தவராயன் என்ற தன் இயற்பெயரை அயோத்திதாசர் என்று மாற்றிக் கொண்டார்.
சமூகப்பணி
- 1870-களில் நீலகிரியில் தேயிலைத் தோட்டப் பணியாளர்களையும் மலையினப் பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்து 1876-இல் “அத்வைதானந்த சபை'' ஒன்றைத் தொடங்கி சாதி பேத உணர்வை ஒழிக்கப் பாடுபட்டார்.
- 1881 ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியபோது, தாழ்த்தப்பட்டவர்களை "ஆதித் தமிழன்' என்று பதிவு செய்ய கோரிக்கை வைத்தார்.
- 1882-இல் அயோத்தி தாசரும் ஜான் ரத்தினம் என்பவரும் “திராவிடர்க் கழகம்” எனும் அமைப்பை நிறுவினர்.
- 1885 ஆம் ஆண்டு -“திராவிட பாண்டியன்” எனும் இதழையும்
- தொடங்கினார். அயோத்திதாசர் இதன் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்று – தாழ்த்தப்பட்ட மக்களின் விழிப்புணர்வுக்காகவும், அவர்களின் விடுதலைக்காகவும் பாடுபட்டார்.
- 1886-ஆம் ஆண்டு “ஆதித்தமிழர்கள்'' (தாழ்த்தப்பட்டோர்) இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இந்துக்கள் அல்ல என பிரகடனப்படுத்தினார்.
- 1891 ஆம் ஆண்டு - “திராவிட மகாஜனசபை” என்ற அமைப்பை நிறுவிய அவர் அவ்வமைப்பின் முதல் மாநாட்டை நீலகிரியில் நடத்தினார்(தாழ்த்தப்பட்டோர் இந்தியாவில் நடத்திய முதல் மாநாடு). இதில், "பறையர் எனக் கூறுவது குற்றம் எனச் சட்டம் இயற்ற வேண்டும், பொது இடங்களில் நுழைய உரிமை அளிக்க வேண்டும், கல்வி வசதி செய்துதர வேண்டும்" என்பன உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு காங்கிரஸ் செயலாளருக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் அனுப்பப்பட்டது.
- அதையடுத்து, 1892 ஏப்ரல் மாதம், சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற சென்னை மகாஜன சபை மாநாட்டில், நீலகிரி பிரதிநிதியாக அயோத்திதாசர் கலந்துகொண்டார்.
- 1891 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் தலித் இன மக்கள் தங்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாமல் “சாதியற்ற திராவிடர்கள்” எனப் பதிவு செய்யுமாறு அவர் வலியுறுத்தினார்.
- பிரம்ம ஞான சபை ஆல்காட் அவர்களுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாகத் தாழ்த்தப்பட்டோருக்குச் சென்னையில் 5 பள்ளிக் கூடங்களை நிறுவி அவர்கள் கல்வி கற்க வழிவகுத்தார். இவை கர்னல் ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன.
பௌத்த மதம்
- 1898-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கர்னல் ஆல்காட் அவர்கள் இலங்கை தலைநகர் கொழும்பு சென்றபோது அவருடன் சென்று பௌத்தத்தின் பஞ்சசீலக் கொள்கையை ஏற்றுக்கொண்டு, `என் முன்னோர்கள் சமயமான பௌத்தத்துக்கு திரும்பிவிட்டேன்' என்று பதிவு செய்கிறார்.
- சென்னை திரும்பியவர் ராயப்பேட்டையில் `தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கம்' என்ற அமைப்பை நிறுவுகிறார்.
- இந்தியாவில் புத்த சமய மறுமலர்ச்சிக்காக பணியாற்றிய முதல் தலைவர் இவரேயாவார்.
- புத்த சமயத்தை இந்திய வரலாற்றில் முதல் பிராமணர் எதிர்ப்பு இயக்கம் என இவர் கூறினார்.
- இவர் வர்ணாசிரம முறையை எதிர்த்த புத்த சமயத்தினை தங்கள் சமயம் என பதிவு செய்யுமாறுத் தாழ்த்தப்பட்டவர்ளுக்கு அழைப்பு விடுத்தார்.
- இவர் இந்திர தேசம் எனும் புத்தகத்தில் இந்தியாவின் வரலாற்றை எழுதினார். அதில் ஆரியர்களின் படையெடுப்பிற்கு முன்னர் இந்தியர்கள் பௌத்த சித்தாந்தங்களைப் பின்பற்றி சாதி முறைகளின்றி அமைதியாக வாழ்ந்தனர் என அவர் வாதிட்டார்.
பத்திரிகைப்பணி
- 1885 ஆம் ஆண்டு- ஜான் ரத்தினத்துடன் இணைந்து 'திராவிடப் பாண்டியன்' எனும் இதழைத் தொடங்கினார்.
- 1907 ஜூன் 19 அன்று 'ஒரு பைசாத் தமிழன்' எனும் பத்திரிகையைத் தொடங்கினார் (1908 -இல் தமிழன் என்று பெயர் மாற்றப்பட்டது)
அயோத்திதாசர் எழுதிய நூல்கள்
1.திருவள்ளுவர் வரலாறு
2.திருக்குறள் கடவுள் வாழ்த்து
3.முருக கடவுள் வரலாறு
4.அரிச்சந்திரன் பொய்கள்
5.அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்
6.அம்பிகையம்மன் சரித்திரம்
7.ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்
8.இந்திரர் தேச சரித்திரம்
9.இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம்
10.கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
11.சாக்கிய முனிவரலாறு
12.நந்தன் சரித்திர தந்திரம்
13.நூதன சாதிகளின் உள்வே பீடிகை
14.பூர்வ தமிமொளியாம் புத்தாது ஆதி வேதம்
15.மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
16.மோசோயவர்களின் மார்க்கம்
17.யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
18.விபூதி ஆராய்ச்சி
19.விவாஹ விளக்கம்
20.வேஷ பிராமண வேதாந்த விவரம்
21.பூர்வ தமிமொழியாம் புததரது ஆதிவேதம்
22.இந்திரர் தேச சரித்திரம்
23.சாக்கிய முனிவரலாறு
24.வேஷபிராமண வேதாந்த விவரம்
25.யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
26.மோசோயவர்களின் மார்க்கம்
27.ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்
28.மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
29.நூதன சாதிகளின் உற்சவ பீடிகை
30.அம்பிகையம்மன் சரித்திரம்
31.இந்திரர் தேச பெயத்தர்கள் பண்டிகை விவரம்
32.விவாஹ விளக்கம்
33.அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்
34.புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி
35.புத்த மார்க்க வினா விடை
36.நந்தன் சரித்திர தந்திரம்
37.கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
அம்பேத்கர், பெரியாருக்கு முன்னோடி, வழிகாட்டி
- இவர் அம்பேத்கருக்கு அரை நூற்றாண்டிற்கு முன்னதாகவே தமிழ் வரலாறு, சமயம் மற்றும் இலக்கியங்களைத் தெற்கில் ஒரு காலத்தில் பிரபலமாகப் பரவி இருந்த புத்த சமயத்தின் பார்வையில் பகுத்துணர முயற்சித்தார்.
- தந்தை பெரியார் தன்னுடைய பகுத்தறிவுப் பிரசாரத்துக்கும் சீர்திருத்த கருத்துகளுக்கும் முன்னோடியானவர்கள் தங்கவேல் அப்பாதுரை பண்டிதமணியும் அயோத்திதாசப் பண்டிதரும் என்று சொன்னார்.
மறைவு
- தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமஉரிமையும், சமநீதியும், சமவாய்ப்பும், சுதந்திரமும் கிடைத்திட அயராது பாடுபட்ட அயோத்திதாசப் பண்டிதர் 1914 ஆம் ஆண்டு மே 5 ஆம் நாள் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.
நினைவு சின்னங்கள்
- 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று அப்போதைய இந்தியப் பிரதமரான மன்மோகன் சிங்கால் சென்னையின் தாம்பரத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (தேசிய சித்த மருத்துவ நிறுவனம்) திறக்கப்பட்டு அதற்கு சாதி எதிர்ப்புப் புத்த சமய தலைவரான இவரின் பெயர் சூட்டப்பட்டது.
- 21.10.2005 அன்று அயோத்திதாசருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
- 2019-ஆம் ஆண்டு, சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் போன்ற துறைகளில் முத்திரை பதித்தவர்களுக்கு, 'அயோத்திதாசப் பண்டிதர் விருது' வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
- 2021-இல் அயோத்திதாச பண்டிதருக்கு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என, முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.தமிழக பட்ஜெட் 2023-இல் நகர்ப்புறப் பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, முழுமையான சமூக - பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்’ ரூ.1000 கோடியில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

- மே 19-ஆம் தேதி ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்திருந்தது.
- வங்கிகளில் அந்த நோட்டுகளை டெபாசிட் செய்யவும் அல்லது அந்த நோட்டுகளைக் கொடுத்து ரூ.100, ரூ.500 போன்ற நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளவும் செப்டம்பா் 30 வரை ரிசா்வ் வங்கி அவகாசம் அளித்திருந்தது
- இந்நிலையில், வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 31, 2023 வரை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.32 லட்சம் கோடி. இதையடுத்து, புழக்கத்தில் உள்ள எஞ்சிய ரூ.2,000 நோட்டுகளின் மதிப்பானது தற்போது ரூ.24,000 கோடி என உள்ளது.
- இதன்படி புழக்கத்தில் இருந்த 93 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன” என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி - முக்கிய குறிப்புகள்
- நிறுவப்பட்ட ஆண்டு - ஏப்ரல் 1,1935 (1934-ஆம் ஆண்டு சட்ட விதிப்படி)
- ஹில்டன் யங் கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது.
- தலைமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்ட ஆண்டு - 1937
- தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு – ஜனவரி 1, 1949.
- இந்திய ரிசர்வ் வங்கி உருவாக முக்கிய காரணமாக இருந்த அம்பேத்கரின் புத்தகம் - `இந்திய ரூபாய் - பிரச்னைகள், தீர்வுகள்'
- மைய வங்கியை 'வங்கிகளின் வங்கி என கூறிய பொருளாதார வல்லுநர் - பி.ஏ. சாமுவேல்சன்
- இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் - ஆஸ்போர்ன் ஸ்மித்
- இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர்(25-வது ஆளுநர்) - சக்திகாந்த தாஸ்.

- உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவா்களின் பட்டியலில், இந்திய ரிசா்வ் வங்கி (RBI) ஆளுநா் சக்திகாந்த தாஸ் முதலிடம் பெற்றுள்ளாா்.
- அமெரிக்காவைச் சோ்ந்த ‘Global Finance’ என்ற நிதி விவகாரங்கள் சாா்ந்த இதழ், நடப்பாண்டுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.
- பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், பொருளாதார வளா்ச்சி இலக்குகள், செலாவணி ஸ்திரத்தன்மை, வட்டி விகித மேலாண்மை உள்ளிட்ட நடவடிக்கைகளில், தங்களது உத்திகளின் மூலம் அடைந்த வெற்றியின் அடிப்படையில் மத்திய வங்கித் தலைவா்கள் தரவரிசைபடுத்தப்பட்டுள்ளனா்.
- இப்பட்டியலில், மிகச் சிறந்த செயல்பாட்டுக்கான ‘ஏ பிளஸ்’ என்ற முதன்மையான பிரிவில் RBI ஆளுநா் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளாா்.
- இதே பிரிவில், சக்திகாந்த தாஸை அடுத்து, ஸ்விட்சா்லாந்து மத்திய வங்கி ஆளுநா் தாமஸ் ஜெ.ஜோா்டன், வியட்நாம் மத்திய வங்கித் தலைவா் நுகுயென் தி ஹோங் ஆகியோரின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.

- 2023-ஆம் ஆண்டுக்கான 'ராமோன் மக்சேசே' விருது, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரவி கண்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- அசாம் மாநிலத்தில் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்திய பெருமைக்குரியவர் டாக்டர் ரவிகண்ணன். இவர் இதற்கு முன்பு சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மருத்துவத் துறையில் சிறந்த பங்காற்றியதற்காக இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை 2020-ஆம் ஆண்டில் மருத்துவர் ரவி கண்ணன் பெற்றுள்ளார்.
2023-ஆம் ஆண்டுக்கான 'ராமோன் மக்சேசே' விருது பெறுபவர்கள்
- இந்தியாவைச் சேர்ந்த ரவி கண்ணன் புற்று நோய்ப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக
- பிலிப்பீன்ஸைச் சார்ந்த மிரியம் கரோனல்-ஃபெரர் பெண்களின் அமைதிக்காகப் பணியாற்றியதற்கா
- கிழக்குத்திமோர் நாட்டை சேர்ந்த யூஜேனியோ உணவுப்பாதுக்காப்புத் துறையில் சிறப்புடன் செயலாற்றியதற்காக
- பங்களாதேஷைச் சார்ந்த Korvi Rakshand அனைவருக்கும் கல்வி என்ற முறையில் செயல்பட்டதற்காக
'ராமோன் மக்சேசே' விருது பற்றிய குறிப்புகள்
- 'ஆசியாவின் நோபல் பரிசு' என்று அழைக்கப்படும் 'ராமோன் மக்சேசே' விருது, ஒவ்வொரு ஆண்டும் ஆசிய நாடுகளில் ஒருமைப்பாடு, துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தனிநபர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.
- ரமோன் மக்சேசே விருது (Ramon Magsaysay Award) ஏப்ரல் 1957-இல் நிறுவப்பட்டது.
- பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் மறைந்த ரமோன் மக்சேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை இவற்றை காட்டாக வளரும் நாடுகளில் பரப்பவும் இப்பரிசு ஏற்படுத்தப்பட்டது.

- புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- இவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் தலைவராக செயல்படுவார்.
Film and Television Institute of India (FTII) பற்றிய குறிப்புகள்
- இந்நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு – 1960
- தலைமையகம் - புனே
- இந்நிறுவனம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.
- மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் அமைச்சராக தற்போது செயல்படுபவர் - அனுராக் தாக்கூர்
- இந்நிறுவனம் திரைப்பட இயக்கம், எடிட்டிங், ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு துறைகளில் மூன்றாண்டு முதுநிலை பட்டயப் படிப்புகளும் நடிப்பு மற்றும் கலை இயக்குநர் பயிற்சியில் இரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சி படிப்புகளும் கணினி வரைகலை மற்றும் அனிமேஷன் படிப்புகளில் ஒன்னறை ஆண்டு பட்டயப் படிப்புகளும் வழங்குகிறது.

- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.
- தேங்காயின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தேங்காயின் பன்முகத்தன்மையை கொண்டாடும் விதமாகவும் உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.
- இந்தியா உள்ளிட்ட தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் ஒருங்கிணைந்த அரசு அமைப்பான ஆசிய பசிபிக் தேங்காய் சமூகம் உருவாக்கப்பட்ட தினத்தை நினைவுகூரும்(Asia Pacific Coconut Community- September 2 , 1969) வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 2ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.
- தென்னை பெரும்பாலும் வெப்ப மண்டல பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
- உலகிலேயே அதிகளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது.
- 2021ஆம் ஆண்டில் உலக அளவில் ஒட்டுமொத்த தேங்காய் உற்பத்தியில் 34 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்தது. பெரும்பாலும் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.