போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 05-09-2023
தேசியம் :-

- மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் சாா்பில் டெல்லியில் வரும் அக்டோபர் 17 முதல் 19-ஆம் தேதி வரை உலகளாவிய கடல் சாா் 3-வது உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
- பிரதமா் மோடி இதைத் தொடங்கி வைக்கவுள்ளாா்.
- இந்த மாநாடு குறித்த சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னையில் திங்கள்கிழமை(செப்டம்பர் 4) நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், முதலீடுகளை பெருமளவு திரட்டி இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் திறனை சா்வதேச தரத்துக்கு உயா்த்தி இந்தியாவை உலக அரங்கில் முன்னேறிய நாடுகளின் வரிசையில் கொண்டு செல்வதுதான் மாநாட்டின் நோக்கம் எனவும் இந்த மாநாட்டில் சுமாா் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
முக்கிய குறிப்புகள்
- 2016-ஆம் ஆண்டு முதல் சா்வதேச கடல்சாா் உச்சி மாநாடு மும்பையில் நடைபெற்றது.
- கரோனா காலத்தில் இரண்டாவது மாநாடு மெய் நிகா் மாநாடாக நடைபெற்ற நிலையில் தற்போது மூன்றாவது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு :-

வ.உ.சி பற்றிய குறிப்புகள்
- வ.உ.சிதம்பரனார் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாதபிள்ளை – பார்வதி தம்பதியரின் மகனாக, 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் பிறந்தார்.
- அடிப்படை கல்வியை ஒட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும், சட்டக் கல்வியைத் திருச்சியிலும் பெற்று 1895-இல் வழக்கறிஞரானார்.
- 1900 – இல் சுவாமி வள்ளிநாயகம் என்பவருடன் இணைந்து ‘விவேகபானு’ என்னும் இதழினைப் பிரசுரித்தார்.
- இவர் பாலகங்காதர திலகரால் கவரப்பட்டு 1905-ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார்.
- 1906- ஆண்டு தனது சொந்த கப்பல் நிறுவனமான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத்’ துவக்கினார். இரண்டு நீராவி கப்பல்களான “எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ். லாவோவையும்”, வாங்கினார். இந்நிறுவனத்தை நடத்துவதற்கு இயக்குநர் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. நிறுவனத் தலைவராக பாலவநத்தம் ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவர் நியமிக்கப்பட்டார்.
- 1908 பிப்ரவரி 27-இல் தூத்துக்குடியில் ஐரோப்பியருக்குச் சொந்தமான கோரல் நூற்பாலையில் நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்குத் தலைமையேற்றார். இப்போராட்டத்தின் மூலம் 50% ஊதிய உயர்வு, பணி நேரத்தில் உணவருந்த அனுமதி, ஊதியமில்லா விடுமுறை என்பனவற்றை ஆலைத் தொழிலாளர்கள் பெற்றனர்
- 1908-ஆம் ஆண்டு நடந்த திருநெல்வேலி எழுச்சியில் கைது செய்பட்ட வ.உ.சி அவர்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக விடுதலை உணர்வினை மக்களுக்கு புகுத்த நினைத்தற்கு 20 ஆண்டுகளும் மேலும் சுப்ரமணிய சிவாவிற்கு அடைக்கலம் குடுத்த காரணத்திற்காக 20 வருடம் என 40 வருடம் சிறை தண்டனை விதித்தனர்.
- 9-7-1908 முதல் 30-11-1910 வரை கோவை சிறையிலும் 1-12-1910 முதல் 24-12-1912 வரை கண்ணனூர் சிறையிலும் வ.உ.சி. சிறை தண்டனையை அனுபவித்தார்.
- 1911-ஆம் ஆண்டு அவரது கப்பல் கம்பெனியான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ கலைந்தது.
- 1912-இல் விடுதலையாகி வந்த பின்னர், கொழும்பு நகரிலிருந்து வெளிவரும் நாளேடு ஒன்றில் ‘திலக மகரிஷி’ என்கிற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றைத் தொடராகவும் எழுதிவந்தார்.
- 1936 அன்று நவம்பர் 18ஆம் தேதி அன்று மறைந்தார்
- இவரது நினைவு நாளான நவம்பர் 18 , 'தியாகத் திருநாள்’ ஆகக் கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 03.09.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வ.உ.சி. இயற்றிய நூல்கல்
- வ.உ.சி. இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான்.
- மெய்யறம்
- மெய்யறிவு
- பாடல் திரட்டு
உரை எழுதிய நூல்கள்
- இன்னிலை – 1917
- தொல்காப்பியம் (இளம்பூரனார் உரையுடன்) – 1928
- சிவஞான போதம் – 1935
- திருக்குறள் – 1935
கட்டுரைகள்
- கடவுளும் பக்தியும்
- கடவுள் ஒருவரே
- மனிதனும் அறிவும்
- மனமும் உடம்பும்
- வினையும் விதியும்
- விதி அல்லது ஊழ்

- தமிழக சட்டப்பேரவையில், கடந்த 2023-24-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், நகர்ப்புற பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதிசெய்து, முழுமையான சமூக, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம்’, வரும் 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது என்று நிதி அமைச்சர் அறிவித்தார்.
- தற்போது இத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, 5 ஆண்டுகளுக்கு ரூ.1,000 கோடிக்கான நிர்வாக அனுமதி மற்றும் 2023-24-ம் நிதி ஆண்டுக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :-

- சந்திரயான் -3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவில் உறக்க நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(ISRO) நேற்று(செப்டம்பர் 4) அறிவித்துள்ளது.
- அதற்கு முன், ChaSTE, RAMBHA-LP மற்றும் ILSA ஆகிய கருவிகளும் செயல்பாட்டை நிறுத்தின. அவற்றில் சேகரிக்கப்பட்ட தரவுகள் பூமிக்குக் கிடைத்துவிட்டன. அனைத்து கருவிகளும் அணைக்கப்பட்டுள்ள நிலையில், லேண்டர் ரிசீவர்கள் மட்டும் இயக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.
- ரோவர்(பிரக்யான்) உறங்கிவரும் இடத்தினருகே விக்ரம் லேண்டரும் உறக்கநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 22ஆம் தேதி நிலவில் சூரிய ஒளி வந்ததும் மீண்டும் செயல்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- முன்னதாக விக்ரம் லேண்டரை 40 செ.மீ உயர்த்தி, 30-40 செ.மீ. தொலைவில் சாஃப்ட் லேண்டிங் முறையில் மீண்டும் பாதுகாப்பாக ISRO தரையிறக்கியது. இந்த சோதனையில் அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்பட்டதாக இஸ்ரோ குறிப்பிட்டது.
முக்கிய குறிப்புகள்
- பிரக்யான் ரோவரில் உள்ள Laser Induced Breakdown Spectroscopy (LIBS) கருவி தென் துருவத்திற்கு அருகிலுள்ள நிலவின் மேற்பரப்பில் சல்பர் (S) இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தியது. அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) மற்றும் டைட்டானியம் (Ti), மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) ஆகியவையும் நிலவில் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது.
- விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE பேலோட் மூலம் அளவிடப்பட்ட நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாட்டின் வரைபடத்தையும் ISRO வெளியிட்டது.
- லேண்டரில் உள்ள மற்றொரு கருவி ILSA நிலவில் நில அதிர்வுகள் குறித்து பதிவு செய்துள்ளது.
- RAMBHA-LP என்ற ஆய்வுக் கருவி மூலம் நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.
விருதுகள் :-

- 2023-ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர் க. ராமசாமிக்கு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு.கருணாநிதியின் திருவுருவச்சிலையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிக் கௌரவித்தார்.
முக்கிய குறிப்புகள்
- முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமுயற்சியால் இந்தியாவில் முதன்முறையாகத் தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
- 2008-ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமைக்கப்பட்டது.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவார்.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 24.07.2008 அன்று தம் சொந்த நிதி ரூ.1 கோடியை வைப்புத் தொகையாக அளித்துக் ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார்.
- இந்த அறக்கட்டளையின் மூலமாக ஆண்டுதோறும் ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்படுகிறது. இவ்விருது இந்தியாவிலேயே மிக உயரிய வகையில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் திருவுருவச்சிலையும் அடங்கியதாகும்.
- தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆய்வாளருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
- அறக்கட்டளை தொடங்கப்பட்டபின் 2009ஆம் ஆண்டிற்கான முதல் விருது பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு 2010, ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
முக்கிய நாட்கள் :-

- சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய குறிப்புகள்
- 1888-ஆம் ஆண்டு திருத்தணி அருகே சர்வபள்ளி என்ற கிராமத்தில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார். திருவள்ளூர் ‘கவுடி’ பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். சிறந்த மாணவனாக இருந்ததால் தனது முழுக் கல்வியையும் உதவித்தொகை மூலம் முடித்தார்.
- 1909-இல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியேற்றார்.
- அவர் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார் மற்றும் 1918 இல் 'ரவீந்திரநாத் தாகூரின் தத்துவம்' என்ற புத்தகத்தை எழுதினார்.
- 1921-இல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார்.
- ‘இந்திய தத்துவம்’ என்ற இவரது நூல் 1923-இல் வெளியானது. இது, பாரம்பரிய தத்துவ இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது.
- 1931 முதல் 1936 வரை ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், மதன் மோகன் மாளவியாவுக்குப் பிறகு 1939 இல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) துணைவேந்தராகவும் பணியாற்றினார்.
- 1946-இல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
- 1949 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் முதல் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.
- 1952 முதல் 1962 வரை இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவராக பணியாற்றினார்.
- அவருக்கு 1954 இல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
- அவர் 1963 இல் பிரிட்டிஷ் ராயல் ஆர்டர் ஆஃப் மெரிட்டின் கௌரவ உறுப்பினராக அனுமதிக்கப்பட்டார்.
- ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஏப்ரல் 17 1975 -இல் மறைந்தார். அவரைப் போற்றும் விதத்தில் ஆண்டுதோறும் அவரது பிறந்த தினம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

- அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்த வறுமையையும் துயரத்தையும் சமாளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வேலைக்காக ” 1979 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கல்கத்தாவின் அன்னை தெரேசா மறைந்த செப்டம்பர் 5 - ஆம் தேதியின் நினைவாக தொண்டு செய்வதற்கான சர்வதேச தினம்(International Day for Charity) அனுசரிக்கப்படுகிறது.
- 2012 முதல் ஐ. நா பொதுச்சபையால் இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அன்னை தெரசா பற்றிய தகவல்கள்
- ஐரோப்பாவின் அல்பேனியாவில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-இல் பிறந்தவர் அன்னை தெரசா.
- இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா.
- தனது 12வது வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார்.
- 1929-இல் இந்தியாவின் மேற்குவங்கத்திற்கு முதல் முறையாக வருகை புரிந்தார். அங்கு தன் பெயரை ’தெரசா’ என்று மாற்றிக் கொண்டார்.
- இவர் 1931-இல் இருந்து 1948 ஆம் ஆண்டு வரை கல்கத்தா புனித மேரி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்துள்ளார். அதன் பின் 1948-ஆம் ஆண்டு பாட்னாவில் மருத்துவத்தில் செவிலியர் பயிற்ச்சியை பெற்றார்.
- 1950-இல் ’பிறர் அன்பின் பணியாளர்’ (Missionaries of Charity) என்ற சபையைத் தொடங்கினார். அதன்மூலம் பசியால் வாடும் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு உதவிகள் செய்தார்.
- 1952-ல் 'நிர்மல் ஹ்ருதய்' என்ற இல்லத்தைத் தொடங்கினார். கொல்கத்தா தெருக்களில் ஆதரவற்றுக் கிடந்த ஏராளமான தொழுநோயாளிகளை இங்கு கொண்டு வந்து பராமரித்தார்.
- 1955-இல் ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய, ஆதரவற்ற, குப்பையில் வீசிய குழந்தைகளுக்கு அடைக்கலம் தர ’சிசுபவன்’ இல்லத்தை தொடங்கினார்.
- ‘காந்தி பிரேம் நிவாஸ்' பெயரில் நிரந்தர தொழுநோய் மருத்துவமனையைத் தொடங்கினார்.
- இந்திய அரசின் பத்மஸ்ரீ, ஜவஹர்லால் நேரு விருது, பாரத ரத்னா விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார்.
- 1979-இல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்.
- தொடர் உடல்நலக்குறைவு காரணமாக 1997-இல் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகினார். அதே ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி காலமானார்.
Tags:
Current Affairs