போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 06-09-2023
தேசியம் :-

- புதுடெல்லி பிரகதி மைதானத்தில் செப்டம்பர் 9, 10-ஆம் தேதிகளில் G-20 மாநாடு நடைபெறுகிறது.
- இந்த மாநாட்டின் முகப்பு பகுதியில் பிரம்மாண்ட நடராஜர் சிலையை அமைக்க, மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையம் முடிவு செய்து நேற்று(செப்டம்பர் 5) நிறுவப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்புகள்
- தஞ்சாவூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற சிற்பியான சுவாமி மலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் அவரது குழுவினரால் 7 மாதங்களில் இச்சிலை செதுக்கப்பட்டுள்ளது.
- 28 அடி உயரம், 21 அடி அகலம், 18 டன் எடையில் செம்பு, பித்தளை, இரும்பு, ஈயம், தங்கம், வெள்ளி, வெள்ளீயம், பாதரசம் ஆகிய 8உலோகங்களை கொண்ட அஷ்டதாதுக்களால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது. இது தவிர 7 டன் எடையில் பீடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
- இந்த சிலையின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் எனவும், உலகிலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை எனவும் கூறப்படுகிறது.

- ஜல் ஜீவன் இயக்கம், 2019 ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
- 2024-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்கப்படுவதை நோக்கமாக கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.
- தொடக்கத்தில் வெறும் 3.23 கோடி கிராமப்புற வீடுகளில் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டிருந்தது.
- இது வெறும் 4 ஆண்டுகளில் தற்போது 13 கோடியாக உயர்ந்துள்ளது.
- தற்போதைய நிலவரப்படி, கோவா, தெலங்கானா, ஹரியானா, குஜராத், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்கள், புதுச்சேரி, டையூ & டாமன் மற்றும் தாதர் & நாகர் ஹவேலி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய 3 யூனியன் பிரதேசங்கள் 100 சதவீதம் அளவுக்கு, வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு :-

- கடந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான செய்தித்துறை மானிய கோரிக்கையில், தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் அயராது உழைத்தவரும், சமூகநீதிக் கோட்பாடுகளுக்குச் சட்டவடிவம் கொடுத்தவருமான சென்னை மாகாண முன்னாள் முதல்வர் டாக்டர் ப.சுப்பராயனின் சேவைகளை நினைவுகூரும் வகையில், அவருக்கு சென்னையில் முழு உருவச்சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- அதன்படி, சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் உருவ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(செப்டம்பர் 5) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சுப்பராயன் -முக்கிய குறிப்புகள்
- நிலச்சுவான்தார்களின் சார்பாக சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு 1922-ஆம் ஆண்டு சுப்பராயன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பார்ப்பனர் அல்லாதார் அரசியலில் ஈடுபாடு கொண்ட இவரது அரசியல் செயல்பாடு நீதிக்கட்சியை ஆதரித்தும், எதிர்த்தும் இருந்தது.
- 1926-ஆம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்து, சுயராஜ்ஜிய கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டு, சுயேச்சை அமைச்சரவை பதவி ஏற்றபோது சுப்பராயன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
- இவர் டிசம்பர் 4, 1926 முதல் அக்டோபர் 27, 1930 வரை சென்னை மாகாண முதல்வராக பணியாற்றினார்.
- சுயாராஜ்ஜிய கட்சி இவருக்கான ஆதரவை விலக்கிக் கொண்டபோது, நீதிக்கட்சியின் ஆதரவில் சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவை வரலாற்றில் மிக முக்கியமான சாதனைகளை நிகழ்த்தியது.
- முத்துலட்சுமி ரெட்டியை சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக நியமித்தது சுப்பராயன் தலைமையிலான அரசில் தான். மேலும்,முத்துலட்சுமி ரெட்டி 25.1.1927 அன்று சட்டசபை துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- நடைமுறைப்படுத்த முடியாமல் நிலுவையில் இருந்த ‘அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டத்தை’ வைசிராயின் ஒப்புதலைப் பெற்று 1927 ஜனவரி 24 அன்று நடைமுறைப்படுத்தியது சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவையே.
- Communal G.O என்று சொல்லப்படக் கூடிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை, இவரது தலைமையிலான அமைச்சரவை தான் நடைமுறைப்படுத்தியது
- இவரது ஆட்சியில் தான் 1930ஆம் ஆண்டு முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் தேவதாசி ஒழிப்பு சட்டம் என்ற முன்வரவை சட்ட மன்ற மேலவையில் முன்மொழிந்தார்
- சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பார்ப்பனரல்லாத மாணவர்களை சேர்ப்பதற்கான உத்தரவு பிறப்பித்ததும் சுப்பராயன் அமைச்சரவை தான்.
- அரசாங்கத்தின் பதிவேடுகளில் ‘சூத்திரன்’ என்ற இழி பட்டத்தை நீக்குகிற பணியையும், சுப்பராயன் தலைமையிலான அமைச்சவரவை செய்தது.
- 1932-இல் நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் எதிர்க் கட்சி வரிசையில் இருந்த டாக்டர் சுப்பராயன் அன்று ஆதி திராவிடர்கள் கோயில் நுழைவு மசோதா ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றினார்.
- ராஜாஜியின் அமைச்சரவையில் கல்வியமைச்சராக இருந்தவர் சுப்பராயன். காங்கிரஸ் முன்னெடுத்த ’வெள்ளையனே வெளியேறு’ உள்ளிட்ட போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றார்.
- ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நேருவின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், இந்தோனேசியவிற்கான இந்தியத் தூதராகவும், மகாராஷ்டிர மாநில ஆளுநராகவும், காங்கிரசின் முக்கிய தலைவாரகவும் என பல பதவிகளை வகித்தார்.
- மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பதவியில் இருந்தபோதே 1962-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி மரணம் அடைந்தார்.
- பல பொறுப்புகளை வகித்திருந்தாலும் அவர் நீதிக் கட்சி ஆதரவில் முதல்வராக இருந்தபோது நிகழ்த்திய பெண் உரிமை, சமூக நீதி உள்ளிட்ட களங்களின் பங்களிப்பு மட்டுமே அவரது வரலாற்றுப் பெருமையாக இருக்கும்.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் :-

ஜப்பானின் கிண்டாய் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி பேட்ரிக் சோபியா லைகாகா, ஜப்பானின் தேசிய விண்வெளி கண்காணிப்பு மையத்தை சேர்ந்த தகாஷி இட்டோ ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
- சூரிய குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைப்பர் பட்டை என்று அழைக்கப்படுகிறது. இது பனிப்பொருட்களை கொண்ட பகுதி ஆகும். இங்குள்ள குறுங்கோள்கள் தண்ணீர், மீத்தேன், அமோனியாவால் ஆனவை.
- இந்த கைப்பர் பட்டை பகுதியில் பூமி போன்ற கிரகம் இருக்கிறது. இது எங்களது கணிப்பு மட்டுமே. இதுதொடர்பாக மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். சூரிய குடும்பத்தில் 9-வது கிரகம் மறைந்திருக்கிறது. அந்த கிரகத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர். நாங்கள் கண்டுபிடித்திருப்பது சர்வதேச விஞ்ஞானிகள் கூறி வரும் 9-வது கிரகம் கிடையாது. இது வேறு ஒரு புதிய கிரகம் என்று கருதுகிறோம். சூரிய குடும்பத்தின் எல்லையில் இந்த கிரகம் இருக்கிறது.
- சூரியனில் இருந்து பூமி, 94 வானியல் அலகு தொலைவிலும் சூரியனில் இருந்து புதிய கிரகம் சுமார் 200 வானியல் அலகு தொலைவிலும் இருக்கிறது. இந்த கிரகம் குறித்த ஆய்வுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள்:-

- மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி நெக்டர் சன்ஜென்பாம் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
- இவர் மணிப்பூர் காவல் துறையின் எஸ்எஸ்பி ஆக 5 ஆண்டுகள் பணியாற்றுவார் என்று மாநில அரசு அறிவித்து உள்ளது.
நெக்டர் சன்ஜென்பாம் பற்றிய குறிப்புகள்
- கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி மணிப்பூரின் சண்டல் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனங்களை குறிவைத்து நாகா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நாகா தீவிரவாதிகள் அண்டை நாடானமியான்மருக்கு தப்பி ஓடி விட்டனர்.
- ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்தின் சிறப்பு படைப் பிரிவை சேர்ந்த 70 வீரர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி மியான்மருக்குள் நுழைந்து நாகா தீவிரவாதிகளின் முகாம்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 38 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- இந்த துல்லிய தாக்குதலை (Surgical Strike) ராணுவ கர்னல் நெக்சல் சன்ஜென்பாம் தலைமையேற்று நடத்தினார். இதற்காக அவருக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது. தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சவுரிய சக்ரா விருதினையும் அவர் பெற்றுள்ளார்.
Tags:
Current Affairs