போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 20-09-2023
தேசியம் :-

- செப்டம்பர் 24-ஆம் தேதி, பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பின்னர், இந்தியா முழுவதும் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கிறார்.
- அதில், திருநெல்வேலி முதல் சென்னை வரை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார் என்று தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.
- இந்த 9 ரயில்களில், தென்னக ரயில்வே சார்பில் நெல்லை-சென்னை ரயில் ஒன்று, அதேபோல், காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான ரயில் மற்றும் சென்னையிலிருந்த விஜயவாடா வரையிலான ரயில் என மொத்தம் 3 ரயில்கள் வருகிறது.
முக்கிய குறிப்புகள்
- வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்களை, ரயில்வே அமைச்சகம் 2019-இல் அறிமுகம் செய்தது.
- வந்தே பாரத்தின் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் பிப்ரவரி 15,2019-இல் தொடங்கப்பட்டது.
- 2024 மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

- 2014 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலகத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டது. அப்போது ஆந்திரத்தின் தலைநகராக அமராவதியும் தெலங்கானாவின் தலைநகராக ஹைதராபாத்தும் முடிவு செய்யப்பட்டது.
- ஆந்திரத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு, ஆந்திரத்துக்கு மூன்று தலைநகரங்கள் வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்.
- விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகரமாகவும் அமராவதி சட்டப்பேரவைத் தலைநகராகவும் கர்னூல் நீதிமன்றத் தலைநகரமாகவும் செயல்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
- இந்நிலையில் வருகிற விஜயதசமி அன்று முதல் விசாகப்பட்டினத்தில் நிர்வாகச் செயல்பாடுகள் துவங்கும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

- மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நாரி சக்தி வந்தன் மசோதா மக்களவையில் நேற்று(செப்டம்பர் 19) தாக்கல் செய்யப்பட்டது.
- மகளிருக்கான இடஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலின பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளன.
- தற்போது நடைமுறையில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., தொகுதி ஒதுக்கீடு மகளிர் ஒதுக்கீட்டால் பாதிக்கப்படாது என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நாரி சக்தி வந்தன் மசோதா என்றழைக்கப்படும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது 128-வது அரசியலமைப்பு திருத்த மசோதா ஆகும்.
- இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
- இதன்பிறகு நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் சுமார் 50 சதவீத மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் நாரி சக்தி வந்தன் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். ஏனெனில் இந்த மசோதா மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கும் என்பதால், மாநில சட்டசபைகளின் ஒப்புதல் அவசியம்
- கடந்த 2021-ஆம் ஆண்டிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த கணக்கெடுப்பு காலதாமதமாகி வருகிறது.
- வரும் 2027-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன.
- புதிய தொகுதிகளின் அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் செய்யப்படும். இதன்படி வரும் 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதுதான் மசோதா அமலுக்கு வர வாய்ப்புள்ளது.
- சட்ட மசோதா அமலுக்கு வந்த பிறகு 15 ஆண்டுகள்(மக்களவையின் 3 பதவிக்காலங்கள்) செல்லுபடியாகும். அதன்பிறகு காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.
- முக்கியமாக, ஒவ்வொரு முறை தொகுதி வரையறை செய்யப்பட்ட பிறகும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலில் பெண்களின் தற்போதைய நிலை
- 1952-இல் அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் 24 பெண் உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.
- தற்போதைய 17வது மக்களவையில் பெண்களின் சதவீதம் 14 சதவீதம்( 78 பெண் எம்பிக்கள்)
- மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 245 உறுப்பினர்களில் 11 பேர் பெண்கள்
- பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பெண்களின் எண்ணிக்கை 5 சதவீதமாக உள்ளது.
- மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கினால், மக்களவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 179 ஆகவும் மாநிலங்களவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 81 ஆகவும் உயரும்

- பழைய நாடாளுமன்ற கட்டிடம் அரசியல்சாசன அவை(சம்விதான் சதன்) என்று அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
- சம்விதான் சதன் என நாம் அழைக்கும்போது, இந்த அரசியல் சாசன அவையில் அமர்ந்த சிறந்த தலைவர்களை நாம் நினைவு கூற முடியும். வரும் தலைமுறையினருக்கு இந்தப் பரிசை வழங்கும் வாய்ப்பை நாம் நழுவவிட கூடாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முக்கிய குறிப்புகள்
- நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடம் ஆங்கிலேய கட்டிடக் கலை நிபுணர்கள் சர் எட்விட் லத் யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் என்பவர்களால் வடிவமைக்கப்பட்டது.
- 1927-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பழைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது.
தமிழ் நாடு :-

- கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டை முன்னிட்டு, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- மேலும்,பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், வங்கியில் ரூ.50 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்தி, அதில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சி துறை மூலம் தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்கப்படும்' என தெரிவித்துள்ளார்.
கவிஞர் தமிழ்ஒளி பற்றிய குறிப்புகள்
- கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடூரில் கடந்த 1924 செப்டம்பர் 29-ஆம் தேதி பிறந்தவர் கவிஞர் தமிழ்ஒளி.
- பாரதியாரின் வழித்தோன்றலாகவும், பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளை படைத்தவர்.
- கதை, கட்டுரை, இலக்கிய திறனாய்வு, மேடை நாடகம், குழந்தை பாடல்களையும் எழுதியுள்ளார்.
- தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி கவிதைகள் எழுதியவர்.
- தொடக்கக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார்.
- இடதுசாரி சிந்தனையுள்ள தமது படைப்பாக்கங்களில் கவிஞர் தமிழ்ஒளி சாதியத்தையும் விளிம்புநிலை மக்களின் விடுதலையையும் பாடினார்.
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார்.

- அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்கீழ் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் நடத்தப்படுகிறது.
- இந்த பள்ளிகளில் சேருபவர்களுக்கு ஓராண்டு ஆகமம், பூஜை உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
- இந்த ஆண்டு 94 பேர் பயிற்சியில் சேர்ந்தனர்.
- அவர்களில் ரம்யா, கிருஷ்ணவேணி, ரஞ்சிதா ஆகிய மூன்று பெண்கள் அர்ச்சகராக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- அர்ச்சகர் பயிற்சியை பெண்கள் முடிப்பது இதுவே முதல் முறை.
தமிழகத்தில் அனைத்துச் சாதி அர்ச்சகர் பணி நியமனங்கள் சட்டபூர்வமான அங்கீகாரம் பெற்ற வரலாறு
- தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959, தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களையும் நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்டது.
- இச்சட்டத்தின் 55-வது பிரிவின்படி வாரிசுரிமையின் அடிப்படையிலேயே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
- 1970-இல் மு. கருணாநிதி தலைமையிலான அரசு இச்சட்டத்தின் 55(2) பிரிவை திருத்தியது.
- ‘வாரிசு உரிமையின் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படக் கூடாது’ என்ற அந்தத் திருத்தத்தை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் உச்ச நீதிமன்றம் சென்றார்.
- 1972-இல் ‘தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லும். அதே நேரம், ஆகம விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- 1979-இல் கருணாநிதிக்குப் பின் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., ஆகம விதியின்படி செயல்படும் கோயில்களைக் கண்டறிய நீதிபதி மகாராசன் குழுவை அமைத்தார்.
- ஆனால், தமிழ்நாட்டுக் கோயில்களில் 2006 வரை பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவில்லை.
- 2006-இல் ‘தேவையான தகுதியையும் பயிற்சியையும் பெற்றுள்ள இந்து மதத்தைச் சேர்ந்த எவரும் இந்துக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம்’ என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
- இதைத் தொடர்ந்து, கருணாநிதி தலைமையிலான அரசு, The Tamil Nadu Act No. 15 of 2006 என்ற சட்டத்துக்கு 29.08.2006 அன்று ஆளுநரிடம் ஒப்புதல் பெற்றது.
- ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அரசால் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள், சென்னை, திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி, ஸ்ரீரங்கம் ஆகிய ஆறு இடங்களில் அதே ஆண்டில் துவங்கப்பட்டன. 207 பேர் பயிற்சியை முழுமையாக முடித்தனர்.
- இதற்கிடையில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, அனைத்துச் சாதி அர்ச்சகர் பணி நியமனத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றது.
- பயிற்சி பெற்ற மாணவர்கள் 2008ஆம் ஆண்டில் தீட்சை பெற்றுவிட்ட நிலையில், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், வழக்கின் முடிவின் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டது.
- அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு 2015 டிசம்பர் மாதத்தில் வழங்கப்பட்டது.
- அந்தத் தீர்ப்பில், தமிழக அரசின் 2006-ஆம் ஆண்டு அரசாணைக்கோ அனைத்துச் சாதியினர் அர்ச்சகராவதற்கோ உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அப்படி அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் யாரேனும் இருந்தால் தனித்தனியாக நீதிமன்றத்தில் முறையிட்டுக்கொள்ளுங்கள் என்றது உச்ச நீதிமன்றம்.
- இந்நிலையில்,மதுரையில் அழகர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய ஐயப்பன் கோயிலில் மாரிமுத்து என்ற பயிற்சிபெற்ற மாணவரும்(2018) மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோயில் ஒன்றில் தியாகராஜன் என்ற பயிற்சிபெற்ற மாணவரும் (2020) அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இவை சிறு கோயில்கள், பெரிய கோயில்கள் அல்ல.
- மேலும், 2020-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களின் நியமன விதிகள் கொண்டுவரப்பட்டன.
- அந்தப் புதிய விதிகளின்படி, அர்ச்சகராகச் சேருபவர்கள் 18 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் அரசு அமைத்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி உட்பட, ஏதேனும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
- இதன் பின்னர், 2021-ஆம் ஆண்டு திமுக அரசு பதவியேற்ற 100ஆவது நாளில், ஆகஸ்ட் 14-ஆம் தேதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி முடித்த 28 பேருக்குப் பணிகள் வழங்கப்பட்டன.
- சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பெருங்கோயில்களிலும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் நான்கு பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.
- பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருந்த ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் தொடங்கியது தமிழ்நாடு அரசு. புதிதாக மூன்று பயிற்சிப் பள்ளிகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
- ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளிட்ட ஒன்பது பயிற்சிப் பள்ளிகளும் உண்டு உறைவிடப் பள்ளியாகச் செயல்படுவதோடு, பயிற்சிபெறும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் மூன்றாயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்றும் திமுக அரசால் அறிவிக்கப்பட்டு, ஒன்பது பயிற்சிப்பள்ளிகளிலும் 197 மாணவர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- அனைத்துச் சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கும் அனைத்துச் சாதி அர்ச்சகர் பணி நியமனங்களுக்கும் சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பொருளாதாரம் :-

- பிரிட்டன் அரசு மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனம் இடையே 1.25 பில்லியன் பவுண்ட் (ரூ.12,800 கோடி) முதலீட்டு ஒப்பந்தம் செப்டம்பர் 15 அன்று கையெழுத்தானது.
- பிரிட்டனின் சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் போர்ட் டால்போல்ட் பகுதியில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 8,000 பேர் பணியாற்றி வருகின்றனர். கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க அந்த ஆலையை நவீனப்படுத்த வேண்டிய சூழலில் டாடா ஸ்டீல் நிறுவனம் உள்ளது. இதற்காக அந்நிறுவனம் பிரிட்டன் அரசின் நிதி உதவியை கோரியது.
- இந்நிலையில், பிரிட்டன் அரசு மற்றும் டாடா ஸ்டீல் இடையே ரூ.12,800 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, ரூ.5,100 கோடியை பிரிட்டன் அரசும் மீதத் தொகையை டாடா ஸ்டீல் நிறுவனமும் முதலீடு செய்யும்.
முக்கிய குறிப்புகள்
- பிரிட்டன் பிரதமர் - ரிஷி சுனக்
- டாடா குழுமத்தின் தலைவர் - என். சந்திரசேகரன்
அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் :-

- சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டாஸ்மேனியன் புலி என்ற விலங்கை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக மெல்போர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- டாஸ்மேனியன் புலிக்கு உயிர்கொடுக்கும் இந்த முயற்சி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்ட கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
- மேலும் இந்த திட்டத்துக்காக 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
- மாமிச உண்ணிகளை உயிர்ப்பிக்க உதவும் RNA மாதிரியை மீட்டெடுத்ததால், டாஸ்மேனிய புலியை மீண்டும் பூமியில் நடமாடச் செய்ய முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
- ரிபோநியூக்ளிக் அமிலம் (RNA) என்பது அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ஒரு மரபியல் பொருளாகும். இது DNA-க்கு நிகரான கட்டமைப்பு ஒற்றுமைகளைக் கொண்டது.
- ஸ்வீடனில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் 1891 ஆண்டு முதல் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு டாஸ்மேனியன் புலியின் உடலிலிருந்து இந்த RNA-வை ஆய்வாளர்கள் மீட்டெடுத்துள்ளனர்.
முக்கிய குறிப்புகள்
- தைலசின்(Thylacine) என்று அழைக்கப்படும் டாஸ்மேனியன் புலி இனம் கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு காலநிலை மாற்றம், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவைத் தவிர உலகின் மற்ற பகுதிகளில் இருந்து அழிந்து போனது.
- ஐரோப்பிய குடியேற்றத்திற்கு முன்பு சுமார் 5,000 டாஸ்மேனிய புலிகள் டாஸ்மேனிய காடுகளில் இருந்ததாக கூறப்படும் நிலையில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கால்நடைகளுக்கு அச்சுறுத்தலாக கருதி, அவை தொடர்ந்து வேட்டையாடப்பட்டன.
- உலகின் கடைசி டாஸ்மேனியன் புலி, டாஸ்மேனியாவில் உள்ள ஹோபர்ட் விலங்கியல் பூங்காவில் 1936ஆம் ஆண்டு மடிந்தது. அந்த புலியின் பெயர் பெஞ்சமின்.
விளையாட்டு செய்திகள் :-

- உத்தரபிரதேசம் வாரணாசியில் ரூ. 450 கோடியில் நவீன வடிவமைப்புடன் 31 ஏக்கர் பரப்பளவில் 30,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் இந்த மைதானம் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடி இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ளார். BCCI & UPCA இணைந்து இந்தப் பணியை மேற்கொள்ளவுள்ளது.
- L & T நிறுவனம் இந்த ஸ்டேடியத்தை உருவாக்க உள்ளது.
- கடவுள் சிவனை அடிப்படையாக கொண்டு இந்த கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- த்ரிசூலம் வடிவலான விளக்கு கோபுரங்களும் உடுக்கை வடிவலான மையப் பகுதியும் பிறை நிலா வடிவலான மேற்கூறையும் அமைய உள்ளது
முக்கிய நாட்கள் :-

- இந்தியாவில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) துவக்கப்பட்ட தினம் இன்று(செப்டம்பர் 20) கடைபிடிக்கப்படுகிறது.
- ரயில்வே சொத்துகள், ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக 1872 ஜூலை 2-இல் செக்யூரிட்டி படையாக தொடங்கப்பட்டது.
- பின் 1985 செப்டம்பர் 20-இல் ரயில்வே பாதுகாப்புபடையாக இது மாற்றப்பட்டது.
- 2019 டிசம்பரில் RPF என்பது இந்திய ரயில்வே பாதுகாப்பு படை (IRPFS) என பெயர் மாற்றப்பட்டது.
- இதன் தலைமையகம் டில்லியில் அமைந்துள்ளது.

- பாலின பாகுபாடின்றி ஆண் பெண் இருவருக்கும் ஒரே ஊதியத்தை வலியுறுத்தும் சர்வதேச சம ஊதிய தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 18-ஆம் நாள் ஐ.நா பொதுச்சபையால் கடைபிடிக்கப்படுகிறது.
- இத்தினம் 2020-ஆண்டு தொடங்கப்பட்டது.
- 2023-ஆம் ஆண்டின் கருப்பொருள் - “Changing World, Changing Work”
Tags:
Current Affairs