போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்
IMPORTANT CURRENT AFFAIRS - 25-10-2023
🔘 சர்வதேசம் :-

- மத்தியமேற்கு வங்கக்கடல் உருவான தீவிர புயலான ‘ஹாமூன்’ புயலாக வலுவிழந்து இன்று(அக்டோபர் 25) வங்கதேசம் அருகே கரையை கடந்தது.
- இந்த தீவிர புயலுக்கு ஈரான் ‘ஹாமூன்’ என பெயரிட்டுள்ளது.
- 'ஹமூன்' என்பது பாரசீக வார்த்தையாகும், இது உள்நாட்டு பாலைவன ஏரிகள் அல்லது சதுப்பு நிலங்களைக் குறிக்கிறது.
🔴 தமிழ் நாடு :-

- செர்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘நம்பியோ’ என்ற தனியார் நிறுவனம், பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் பாதுகாப்பான மாநகரங்களின் பட்டியலில் சென்னை, இந்திய அளவில் முதலிடத்தையும், உலகளவில் 127-வது இடத்தையும் பிடித்துள்ளது.
- இந்த பட்டியலில் மற்ற இந்திய நகரங்களான மும்பை 161-வது இடத்திலும் கொல்கத்தா 174-வது இடத்திலும் டெல்லி 263-வது இடத்திலும் உள்ளன.
முக்கிய குறிப்பு
- இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘அவ்தார்’ என்ற நிறுவனம், ‘வாழ்வியல் சூழ்நிலை, பாதுகாப்பு, பெண்களுக்கான முக்கியத்துவ முன்னெடுப்புகள்’ ஆகியவற்றின் அடிப்படையில் நடத்திய ஆய்வில் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களின் வரிசையில் 78.4 புள்ளிகளுடன் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநகரம் என்று சென்னை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

- தமிழக காவல்துறையில் பெண் போலீஸார் பணிக்கு வந்து இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல்வர் தலைமையில், மகளிர் காவலர்களின் ‘பொன்விழா’ கொண்டாட்டப்பட்டது.
- இந்நிலையில், பெண் காவலர்களை கவுரவிக்கவும், அவர்கள் காவல் பணிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழகத்தில் பணியில் உள்ள காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான அனைத்து பெண் போலீஸாருக்கும் சிறப்பு பதக்கம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக காவல் துறையில் பெண்கள் பற்றிய குறிப்புகள்
- தமிழக காவல் துறையில் பெண்கள் முதன்முறையாக பணியமர்த்தப்பட்ட ஆண்டு - 1973
- முதன் முதலாக காவல்துறையில் பெண் காவலர்களை சேர்ந்த போது ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு தலைமைக்காவலர், 20 காவலர்கள் அடங்கிய சிறிய படைதான் இருந்தது. அந்த பெண் போலீஸ் படைக்கு முதல் உதவி ஆய்வாளராக தலைமை தாங்கும் பொறுப்பை உஷாராணி பெற்றார்.
- தற்போது ஒரு டிஜிபி, 2 கூடுதல் டிஜிபி.க்கள், 14 ஐஜி.க்கள் மற்றும் டிஐஜிக்கள், எஸ்.பி.க்கள்,கூடுதல் எஸ்பி.க்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என, 35 ஆயிரத்து 329 பெண் போலீஸார் பணியில் உள்ளனர்.
- தமிழகத்தில் முதன்முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1992
- இந்தியாவில் அதிக மகளிர் காவல் நிலையங்ள் கொண்ட மாநிலம்- தமிழ்நாடு
- தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி- திலகவதி(1976)
- தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி - லத்திகா சரண்(2010)
- தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட ஆண்டு -1989
- தமிழக காவல் துறையின் சிறப்பான செயல்பாட்டால் ராணுவம், துணை ராணுவத்துக்கு வழங்கப்படும் உயரிய கவுரவமான ‘குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி’ தமிழக காவல் துறைக்கு 31.07.2022 அன்று வழங்கப்பட்டது
🟢 பொருளாதாரம் :-

- வரும் 2030-ஆம் ஆண்டு ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்குமென அமெரிக்காவின் S&P குளோபல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
- அதே நேரத்தில் ஆசியாவின் 2-ஆவது பெரிய பொருளாதார நாடாகவும் இந்தியா உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- இப்போதை நிலையில் சா்வதேச அளிவல் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜொ்மனிக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. ஆசிய அளவில் சீனா, ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
🟣 முக்கிய நாட்கள் :-

- ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை உதய தினமாக கொண்டாடப்படுகிறது
- இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நடைபெற்ற மோதலுக்குப் பிறகு, 1962-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) உருவாக்கப்பட்டது.
- லடாக் பகுதியிலுள்ள காகோரம் கணவாய் முதல் அருணாசலப் பிரதேசம் ஜசிப் லா என்ற இடம் வரையுள்ள 3488கி.மீ இந்திய-சீன எல்லையை இந்த படை பாதுகாக்கிறது.

- ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
- ஐக்கிய நாடுகள் அமைப்பு 1945-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1948-ஆம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- ஐ.நா.வில் மொத்தம் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
- "ஐக்கிய நாடுகள்" என்ற பெயர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டால் உருவாக்கப்பட்டது.
- ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படையாக 6 அம்சங்கள் உள்ளன. அவை: 1. பொதுச் சபை 2. பாதுகாப்பு சபை 3. சமூகப் பொருளாதார சபை 4. சர்வதேச நீதிமன்றம் 5.பொறுப்பாண்மைக் குழு 6. செயலகம்.
- ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை அதன் தலைமையகம் அமைந்துள்ள நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை கூடுகிறது.
- ஐக்கிய நாடுகள் சபையில் சீனா, ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.

- உலக போலியோ தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 24 ஆம் தேதி போலியோ நோயின் அபாயங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- 1955-இல் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கிய முதல் குழுவை வழிநடத்திய, டாக்டர் ஜோனாஸ் சால்க்கின் நினைவாக உலக போலியோ தினம் கொண்டாடப்படுகிறது.
- உலக போலியோ தினத்தின் கருப்பொருள்: ”தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான எதிர்காலம்”
- இந்தியா 2014 இல் உலக சுகாதார அமைப்பின் (WHO) போலியோ இல்லாத சான்றிதழைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
⚪ விளையாட்டு செய்திகள் :-

- சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
- முதல் நாள் போட்டியின்போது இந்தியாவுக்கு 6 தங்கம் உட்பட 17 பதக்கங்கள் கிடைத்தன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-ஆம் நாள் போட்டியின்போது 4 தங்கம் உட்பட 18 பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றுள்ளனர்.
- இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் இந்தியா 10 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்திலும், ஈரான் 2-வது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் 3-வது இடத்திலும் உள்ளன.
முக்கிய குறிப்புகள்
- ஆடவர் உயரம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார்
- வட்டு எறிதல் போட்டியில் தமிழக வீரா் முத்துராஜா வெண்கலம் வென்றார்
🟤 நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- ஏா் மாா்ஷல் சாதனா சக்சேனா நாயா் ராணுவத்தின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநராக(Director General of the Military Hospital Service) நியமிக்கப்பட்டாா். இதன்மூலம் இப்பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்
- முன்னதாக, இவர் விமானப் படையில் தொடா்ச்சியாகப் பணியாற்றி ஏா் மாா்ஷலாகப் பதவி உயா்த்தப்பட்ட இரண்டாவது பெண் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளாா்.
- விமானப் படையில் பெண் ஏா் மாா்ஷலாக முதன்முறையாக பதவி உயா்த்தப்பட்டவா், ஓய்வுபெற்ற பெண் அதிகாரி பத்மா பந்தோபத்யாய ஆவாா். இவர் 2002-இல் ஏா் மாா்ஷலாகப் பதவி உயா்த்தப்பட்டார்.
சாதனா சக்சேனா பற்றிய குறிப்புகள்
- சாதனா சக்சேனா புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று 1985-ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் சோ்ந்தாா்.
- குடும்ப மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற இவா், தில்லி எய்ம்ஸில் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளாா்.
- மேற்கு விமான மற்றும் பயிற்சிப் படையின் முதன்மை மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய முதல் மற்றும் ஒரேயொரு பெண் அதிகாரி ஆவாா்.
- இவா் விமானப் படையின் விசிஷ்ட சேவா பதக்கம் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளாா்.
- இவரின் கணவா் கே.பி.நாயா் ஏா் மாா்ஷலாக பதவி வகித்து ஓய்வுபெற்றவா். எனவே இவா்கள் விமானப் படையில் ஏா் மாா்ஷலாக பதவி வகித்த முதல் மற்றும் ஒரே தம்பதி என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Current Affairs