போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்
IMPORTANT CURRENT AFFAIRS - 30-10-2023
🔘 தேசியம் :-

- தேசத்தைக் கட்டி எழுப்பும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் நாடுதழுவிய அளவில் ‘மேரா யுவ பாரத்’(எனது இளைய பாரதம்’) தளம் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளான அக்டோபர் 31- ஆம் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
- இளைஞர்கள் MYBharat.Gov.in என்ற இணைய முகவரியில் சென்று பதிவு செய்து கொள்ள பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் .
- இந்தியாவை வளர்ந்த நாடாக கட்டியெழுப்புவதற்கான முயற்சியில் இளைஞர்களின் சக்தியை ஒருங்கிணைக்கும் தனி முயற்சி இது.
- இளைஞா்களின் வளா்ச்சிக்காக மத்திய அரசின் அனைத்து செயல்திட்டங்களையும் ஒன்றிணைத்து வழங்கி இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்றுவதே இதன் நோக்கம்.
- 19 முதல் 29 வயதுட்பட்டோருக்கு இது பெரும் பயனளிக்கும். இந்த வயதில் இந்தியாவில் 27 சதவீத இளைஞா்கள் உள்ளனா்.
🔵 இராணுவம் :-

- இந்தியா-கஜகஸ்தான் இடையேயான கூட்டுப் பயிற்சி, 2016-ஆம் ஆண்டு 'பிரபால் டோஸ்டைக்'(Exercise PRABAL DOSTYK) என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
- பின்னர் இது 'காசிந்த்'(KAZIND) பயிற்சி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு விமானப்படைப் பிரிவையும் சேர்த்து இருவழிப் பயிற்சியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
- இந்நிலையில் இந்த ஆண்டு 'காசிந்த்-2023' 7-வது கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 120 வீரர்கள் கஜகஸ்தான் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த பயிற்சி கஜகஸ்தானில் இன்று(அக்டோபர் 30) தொடங்கி, நவம்பர் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
- இந்த கூட்டுப் பயிற்சியின் மூலம் இரு தரப்பினரும் பரந்த அளவிலான போர்த் திறன்களில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும், படைப்பிரிவுகள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🟢 பொருளாதாரம் :-

- சுதந்திரம் பெற்ன் நூற்றாண்டான 2047-க்குள் சுமாா் 30 ட்ரில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,500 லட்சம் கோடி) மதிப்பு கொண்ட வளா்ந்த பொருளாதார நாடாக இந்தியாவை மாற்ற தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பிவிஆா் சுப்பிரமணியம் தெரிவித்தாா்.
- அந்தத் திட்டத்தில் 2047-க்குள் வளா்ந்த நாடாக இந்தியா உயா்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் சீா்திருத்தங்கள் குறிப்பிடப்படும்.
- மேலும், வரும் டிசம்பருக்குள் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, அதற்கு அடுத்த 3 மாதங்களில் அது பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
🟣 முக்கிய நாட்கள் :-

- அக்டோபர் 30,1909-இல் மும்பையில் பிறந்த ஹோமி ஜஹாங்கீர் பாபா, கத்தீட்ரல் அன்ட் ஜான் கானன் பள்ளியில் பயின்றார்.
- 15 வயதில் பள்ளி இறுதித் தேர்வில் ஹானர்ஸ் பெற்று வென்ற ஹோமி பாபா, மும்பையின் எல்ஃபன்ஸ்டோன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
- 1927-இல் இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் சேர்ந்து, இயந்திரவியலில் பட்டம் பெற்றார்.
- அணு விஞ்ஞானத்தில் ஆரம்பம் முதல் ஆர்வம் காட்டிய ஹோமி பாபா, 1933-இல் அணு விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
- காஸ்மிக் கதிர்வீச்சு பற்றி அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்காக ஐசக் நியுட்டன் விருதையும், உதவித் தொகையும் பெற்று, தனது ஆராய்ச்சிகளை இங்கிலாந்தில் தொடர்ந்தார்.
- 1939-இல் இந்தியா திரும்பிய ஹோமி பாபா, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில், சர்.சி.வி. ராமனின் வழிகாட்டுதலில், பேராசியராக பணியாற்றினார். அங்கு காஸ்மிக் கதிர்களுக்கான ஆய்வுக் கூடத்தை நிறுவினார்.
- 1945-இல் மும்பையில் அடிப்படை ஆராய்ச்சிகளுக்கான டாடா நிறுவனத்தை (Tata Institute of Fundamental Research) கட்டமைத்தார்.
- இந்திய விடுதலைக்கு பின், 1948-இல் இந்திய அரசின் அணுசக்தி ஆணையத்தை உருவாக்கி, அதன் தலைவராக சிறப்பாக பணியாற்றினார்.
- 1954-இல் இந்தியாவின் முதல் அணுசக்தி ஆராய்ச்சி திட்டத்தை டிராம்பேயில் தொடங்கினார். அவரின் மறைவுக்கு பின்னர், அது பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்(BARC) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- இந்திய அரசின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய போது, ISRO நிறுவனத்தை விக்ரம் சாராபாய் தலைமையில் தொடங்க ஊக்குவித்தார்.
- 1962-இல் நடந்த இந்திய சீன போருக்கு பின், இந்தியா அணு ஆயுதங்களை தயாரிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.
- ஜனவரி 24, 1966-இல் ஐரோப்பாவில் பயணம் செய்த போது, விமான விபத்தில் காலமானார்.

- சிக்கனத்தின் முக்கியவத்துவத்தையும், சேமிப்பின் அவசியத்தையும் எடுத்துரைக்கும் பொருட்டு ஆண்டுதோறும் அக்டோபர்-30 ஆம் நாள் “உலக சிக்கன நாளாக’’ கொண்டாடப்படுகிறது
- 1924-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் நடைபெற்ற சர்வதேச சேமிப்பு வங்கிகளின் சிக்கன மாநாட்டில் அக்டோபர் -31 ஆம் தேதி உலக சிக்கன நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.
- அக்டோபர் 31 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இறந்த தினம் என்பதால், இந்தியாவில் சிக்கன தினம் அக்டோபர் 30-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

- இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளான அக்டோபர் 31-ஆம் தேதியையொட்டி, அந்த வாரத்தை ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் கடைபிடித்து வருகிறது.
- அதன்படி இந்த ஆண்டில் ‘ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள்: தேசத்துக்காக அர்ப்பணியுங்கள்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 5-ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது
- ஊழல் தொடர்பான நடைமுறைகளையும், அவற்றை எப்படி முறையிட வேண்டும் என்பது குறித்தும் மக்களிடம் கற்பித்தலை உருவாக்க இந்த விழிப்புணர்வு வாரம் உபயோகமாக இருக்கும்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் - முக்கிய குறிப்புக்கள்
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது லஞ்சம், ஊழலுக்கு எதிராக செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும்.
- இந்த அமைப்பு சந்தானம் குழு பரிந்துரையின் அடிப்படையில் நிறுவப்பட்டது.
- நிறுவப்பட்ட ஆண்டு - பிப்ரவரி 11,1964
- ஊழல் தடுப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு – 1988
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சட்டபூர்வ அமைப்பாக(Statutory body) மாறிய ஆண்டு – 2003
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் - ஒரு தலைவர் இரண்டு உறுப்பினர்
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை நியமிக்க பரிந்துரை செய்வது - பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர்களை உள்ளடக்கிய தேர்வுக்குழு.
- ஊழல் தடுப்பு ஆணையர்களின் பதவிக்காலம் - 4 ஆண்டுகள் (அல்லது) 65 வயது வரை
- பதவிக்காலம் முடிந்த பிறகு மத்திய அல்லது மாநில அரசு சார்ந்து எந்த பதவியும் வகிக்க இயலாது.
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையற்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர்- குடியரசுத்தலைவர்
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தற்போதைய தலைவர் - பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா
Tags:
Current Affairs