போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்
IMPORTANT CURRENT AFFAIRS - 31-10-2023
🔴 தமிழ் நாடு :-

- மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் புத்தூர் மலை உள்ளது.
- பெருவணிகப் பாதையில் அமைந்துள்ள இம்மலை வணிகர்களுக்கு பழங்காலத்தில் கலங்கரை விளக்கமாக இருந்துள்ளது. மலையிலிருந்து கிழக்கு நோக்கி சென்றால் மதுரைக்கும், மேற்கு நோக்கி சென்றால் கேரளாவுக்கும் செல்லும் பாதையில் இம்மலை அமைந்துள்ளது.
- இங்கு சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்களை கலை வரலாற்று ஆய்வாளர் க.த.காந்திராஜன் தலைமையில் பணியாற்றிய குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
- இதில் குதிரைகளில் பயணிக்கும் வீரர்கள், குதிரை வீரரை ஆயுதங்கள் மூலம் மற்றவர்கள் மிரட்டுவது போன்ற ஓவியங்கள், நடக்கும் மனிதர்கள், ஓடும் மனிதர்கள், வில்லை ஏந்திய வீரர்கள் (வில்லாளிகள்) மற்றும் சின்னச்சின்ன ஓவியங்கள் என 50-க்கும் மேற்பட்ட ஒவியங்கள் உள்ளன.
- மேலும், முக்கியமாக மனித இனச்சேர்க்கையை விளக்கும் ஓவியங்களை நேர்த்தியாக வரைந்துள்ளனர்.
- கீழடி அகழாய்வில் நகர நாகரிக வளர்ச்சி அடைந்த மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக தொல்பொருட்கள் கிடைத்து வருகின்றன. அதேபோல், கீழடிக்கு முந்தைய கால கட்டங்களில் வாழ்ந்த மக்களின் ஆதாரங்களாக இந்த பாறை ஓவியங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(அக்டோபர் 31) சென்னை, பல்லாவரம் ரேடியல் சாலையில், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Capitaland குழுமத்தின் துணை நிறுவனமான ரேடியல் ஐடி பார்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துவரும் தொழில்நுட்ப பூங்காவில், முதற்கட்டமாக 1.3 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை (International Tech Park) திறந்து வைத்தார்.
முக்கிய தகவல்கள்
- அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் கொள்கையின் அடிப்படையில், கிராமப்புறங்களை சார்ந்த, படித்த இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டங்களுக்கு அருகிலேயே அதிக எண்ணிக்கையிலான உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
- அதன்படி, விழுப்புரம், திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி பரப்புள்ளதாக, மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
- தமிழகம் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற இலக்கு நிர்ணயத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
🟠 விருதுகள் :-

- அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி 8-வது முறையாக பலோன் டி'ஓர் விருதை வென்று சாதனைப் படைத்துள்ளார்.இதன்மூலம் அதிகமுறை இவ்விருதை வென்றவர் என்ற சாதனையையும் லயனல் மெஸ்ஸி படைத்துள்ளார்
- பெண்களுக்கான பலோன் டி'ஓர் விருது மகளிர் உலகக் கோப்பை வென்ற ஸ்பெயின் நட்சத்திர வீராங்கனை அடானா பொன்மதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு
- கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர்(Ballon d'Or) விருதை FIFA ஆண்டுதோறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வழங்கி வருகிறது.
- இந்த விருது 1956-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
🟤 நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- ஒடிசாவின் 26வது ஆளுநராக ரகுவர் தாஸ் இன்று(அக்டோபர் 31) பதவியேற்றுக் கொண்டார்.
- ஒடிசா உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி டாக்டர் பித்யுத் ரஞ்சன் சாரங்கி, ரகுவர் தாஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான தாஸ், ஒடிசாவின் புதிய ஆளுநராக கடந்த அக்டோபர் 18-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டார்.
- இவர், 2014 முதல் 2019 வரை ஜார்க்கண்டின் முதல் பழங்குடியினர் அல்லாத முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்புகள்- ஆளுநரோடு தொடர்புடைய அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள்
- சட்டப்பிரிவு 153 - ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொறுப்பாக ஒரே ஆளுநர் இருப்பதற்கு இவ்விதி எந்தவிதமான தடையும் கூறவில்லை.
- சட்டப்பிரிவு 154 - மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை பற்றி கூறுகிறது. நிர்வாக அதிகாரம் அவரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செயல்படுத்தப்படலாம்
- சட்டப்பிரிவு 155- மாநில ஆளுநர் குடியரசுத்தலைரால் நியமிக்கப்படுகிறார்
- சட்டப்பிரிவு 156- ஆளுநரின் பதவிக்காலம்
ஆளுநர் ஐந்தாண்டு காலம் பதவியிலமர்த்தப்படுவார் அல்லது குடியரசுத்தலைவர் விரும்பும் காலம் வரை பதவியிலிருப்பார் அல்லது வேறொருவர் பதவியில் அமர்த்தப்படும்வரை பதவியில் இருப்பார்.
- சட்டப்பிரிவு 157 & 158- ஆளுநராக பதவியில் அமர்த்தப்படுவதற்கான தகுதிகள் மற்றும் அவரது பதவிக்கான வரைமுறைகள்
- இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
- இலாபம் ஈட்டும் பதவி எதுவும் வகிக்கக் கூடாது.
- 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடாது.
- சட்டப்பிரிவு 159- ஆளுநரின் பதவிப்பிரமாணம்
- சட்டப்பிரிவு 161- மாநில ஆளுநர் குற்றவாளிகளின் தண்டனையை ஒத்தி வைக்கவும், தள்ளி வைக்கவும் மற்றும் குறைக்கவும் உரித்தான அதிகாரத்தினைப் பெற்றிருக்கின்றார். எனினும், மரண தண்டனையை முழுமையாக மன்னிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.(இந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு)
🟣 முக்கிய நாட்கள் :-

- சர்தார் வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தின் கைரா மாவட்டத்தில் உள்ள நாடியாட் என்னும் ஊரில் 31.10.1875 அன்று பிறந்தார்.
- 1897 ஆம் ஆண்டில் வல்லபாய் படேல் தனது 22-வது வயதில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார்.
- வழக்கறிஞராக வேண்டும் என்ற தாக்கத்தில் இருந்த அவர், தனது 25 வயதில் 'டிஸ்ட்ரிக்ட் பிளீடர்' படிப்பை முடித்து கோத்ராவில் வழக்கறிஞராக தொழில் செய்யத் தொடங்கினார்.
- பின்னர் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார். பிறகு நாடு திரும்பிய அவர் அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணிபுரியத் தொடங்கினார்
- அகமதாபாத்தில் வழக்கறிஞர் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்னைகளுக்காக போராடி, அவர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.
- 1917ஆம் ஆண்டு முதன்முறையாக மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது மகாத்மா காந்தியின் உரையைக் கேட்ட அவர், வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டு தன்னை சுதேசி இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்.
- 1918-இல் குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம் ஏற்பட்டதால் ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. போராட்டத்தின் இறுதியில் வரி ரத்தானது.
- 1928-இல் பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
- 1931-இல் கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 1942- இல் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குபெற்றதால் கைது செய்யப்பட்டார்
- 1946-இல் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சபையில் அடிப்படை உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரின் ஆலோசனைக் குழுவின் தலைவராக செயல்பட்டார்.
- 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
- நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கினார்.
- சிவில் சர்விஸ் பணிகளை (IAS,IPS,IFS) உருவாக்கியதில் படேலுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
- நவீன இந்தியாவை உருவாக்கியதில் பெருபங்காற்றிய இரும்பு மனிதர் படேல் தனது 75-ஆம் வயதில் 15.12.1950 அன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.
- 1991-இல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது
- 2014-ஆம் ஆண்டு மத்திய அரசால், படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதி 'தேசிய ஒற்றுமை தினமாகக்' கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- 2018-ஆம் ஆண்டு இவருடைய நினைவாக குஜராத் மாநிலத்தின் நர்மதா நதிக்கரையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் 597 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். ஒற்றுமைக்கான சிலை என அறியப்படும் இச்சிலை உலகிலேயே உயரமான சிலை ஆகும்
Tags:
Current Affairs